அமரர் கல்கியின்… முத்தான சிறுகதைகள் 10!

அமரர் கல்கி
அமரர் கல்கி

1. ‘அருணாசலத்தின் அலுவல்'

அமரர் கல்கி
அமரர் கல்கி

1932,செப்டம்பர், கலைமகள்

கணவன் மனைவி - யார் உயர்ந்தவர் என்பது பற்றிய குடும்பக் கதை. வீட்டில் உழலும் உத்தியோகம் பார்க்காத மனைவி 'சும்மாத்தான் இருக்கிறாள்!' என்று அலட்சியம் செய்யப்பட்ட காலத்தில் அவளுடைய தினசரிக் கடமைகளுக்குச் சம்பளம் நிர்ணயிப்பதாக இருந்தால் எப்படியிருக்கும் என்பது பற்றிய நகைச்சுவை பொங்கும் கற்பனை.

2. இது என்ன சொர்க்கம்?

ஒவியம்; சரவணன்
ஒவியம்; சரவணன்

1942 - கல்கி தீபாவளி மலர்

பூலோகத்தில் 'செத்துப்போன' நண்பர்கள் சிலர் சுவர்க்கலோகத்தில் சந்தித்து அந்த 'அமிர்தம்' எல்லாம் திகட்டிப்போய் பூமியில் வாழ்ந்த 'நிஜமான' சுவர்க்க அனுபவத்துக்கு ஏங்குவதான கற்பனை. புனரபி ஜனனத்தில் விவரமறிந்த குழந்தை…  'மறுபடியும் பிரக்ஞை வந்தது… ஆனால் நல்ல வேளையாய்ப் பூர்வ ஞாபகம் வரவில்லை' என்று கதையை முடிக்கிற அழகு!

3. மாஸ்டர் மெதுவடை!

அமரர் கல்கி
அமரர் கல்கி

3.5.1938, ஆனந்த விகடன்

'மோடி சுட்ட வடை!' என்று இந்தத் தேர்தல் காலத்தில் அதிகமாக முழங்கினார்கள். 85 ஆண்டுகளுக்கு முன்னால் 'வடை சுட்ட கதையை எழுதியவர் கல்கி. 'மெதுவடை சுடப்படுகிறது!' என்று சினிமாப் படப்பிடிப்பை விளம்பரம் செய்தார்களாம். அந்நாளைய பிரபல ஹாலிவுட் இறக்குமதி இயக்குநரை நினைவூட்டுகிற மாதிரி மிஸ்டர் டிம்பன்! புராணக் கதையில் அருந்ததியாகவும் சமூகக் கதையில் தாஸியாகவும் நடித்த ஒருத்தியை இரண்டுபேர் காதலித்துத் 'தற்கொலை'க்கும் முயன்ற அக்மார்க் நகைச்சுவைக் கதை!

4. கடிதமும் கண்ணீரும்!

ஒவியம்; கோபுலு
ஒவியம்; கோபுலு

13.6.1937, ஆனந்த விகடன்

பெண்கள் கல்வித்தகுதி பெறமுடியாததால் ஏற்பட்ட அவலத்தை இந்த அளவுக்கு யதார்த்தமாக விளக்கி ஒரு சிறுகதையாக எழுதக் 'கல்கி'யால் மட்டுமே முடியும். சர்வதேச மொழிகளில் எல்லாம் வலம்வர வேண்டிய தகுதி இதற்கு உண்டு. தனக்கு வாழ்வளிக்கவும் தயாராக இருப்பதாக ஒருவர் எழுதிய கடிதத்தைப் படிக்க முடியாமல் வாழ்க்கையை இழந்த அன்னபூரணியின் கதை. "…அவர் என் கரத்தைத் தொட்டுக் கடிதத்தைக் கொடுத்த அந்நாள் எனக்குப் படிக்கத் தெரிந்திருக்க வில்லை..." என்று நிறைவடைகிற காவியம் அற்புதமான ஒன்று.

5. விஷ மந்திரம்!

அமரர் கல்கி
அமரர் கல்கி

9.10.1925, நவசக்தி

பாம்பின் விஷத்தை மந்திரம் ஜபித்து இறக்குவது பற்றிய கதை. யாராவது பஞ்சமன் (தாழ்த்தப்பட்ட வகுப்பார்) ஒருவனின் காற்றுப்பட்டால்கூட அந்தத் 'தீட்டால்' தம்முடைய மந்திரம் வேலைசெய்யாது என்று நம்புகிறவர் போஸ்ட் மாஸ்டர் நாராயணய்யர். தம் நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கையில் பாம்புக்கடித்து வந்த ஒருவனை மந்திரம் ஜபித்துத் திருநீறு பூசி குணப்படுத்துகிறார். நண்பர்களில் ஒருவர் தீண்டாதார் என்பது வெளிப்படுகிறபோது அவர் சமாளிப்பதுதான் சுவாரஸ்யம்.

6. புஷ்பப் பல்லக்கு

ஒவியம்; கோபுலு
ஒவியம்; கோபுலு

22.7.1934, ஆனந்த விகடன்

தாசில்தார்களின் வீட்டம்மாக்களும் கூட ஏழை கிராம மக்களை அதிகாரம் செய்து கோலோச்சிய வெள்ளைக்காரன் காலத்துக்கதை. தாசில்தாரின் மகள் பெரியமனுஷியான வைபவத்தை அண்மைக் கால 'வளர்ப்புமகன்' கல்யாண ரேஞ்சுக்கு நடத்தத் திட்டமிட்டு அல்பாயுசில் முடிந்த கதை. பெரிய துரை கலெக்டர் வருகையால் எல்லாம் பாழானது. தீராத்துயரம் அய்யங்கார் பெத்த பேராசைப்பிள்ளை, கிண்டாமணி முதலியார், லஞ்சநாதசாஸ்திரியார் என்றெல்லாம் கதாபாத்திரங்களுக்குப் பெயர்வைத்து எழுதுகிற சுதந்திரம் இப்போது இருக்கிறதா என்ன?

7. சிரஞ்சீவிக் கதை

அமரர் கல்கி
அமரர் கல்கி

19.4.1936, ஆனந்த விகடன்

இது ஒருவித்தியாசமான கதை. 1930 உப்பு சத்தியாக்கிரகப் போர் சென்னையிலும் முகம் காட்டிக் கடற்கரையில் சில தொண்டர்கள்  குடங்களில் கடல் தண்ணீரைக் காய்ச்சிய தகவல் இருக்கிறது. அதைச் செய்தியாகிவிடாமல் பார்த்துக்கொண்ட அன்றைய அரசாங்க அதிகாரிகளின் முனைப்பும் தெரிகிறது. வழக்கமான தடியடி துப்பாக்கிச் சூட்டில்  இந்தப் போராட்டத்தில் தொடர்பேயில்லாத மார்க்கண்ட முதலியார் உயிர்துறக்கிறார். அவர் வசித்துவந்த 'ஜாம்பவந்த லாலா சந்து ' மார்க்கண்ட முதலியார் தெரு' ஆவதுதான் கதை. இன்றைய அரசியல் நினைவுக்கு வரலாம்.

8. கேதாரியின் தாயார்

ஒவியம்; கோபுலு
ஒவியம்; கோபுலு

27.1.1935, ஆனந்த விகடன்

'அவளைக் 'கிளி' என்று சொன்னேனல்லவா? அந்தக் கிளிக்கு இப்போது தலையை மொட்டையடித்து முக்காடும் போட்டிருந்தார்கள்' என்று கதையின் கடைசி வரியைப் படிக்கிற போது தூக்கிவாரிப்போடும். அந்த நாளைய பிராமண விதவைகளின் நிலையை அப்பட்டமாக எழுதினார் கல்கி. மறைந்த எழுத்தாளர்கள் பீஷ்மனும் தி.சா.ராஜுவும் கண்களில் நீர் பனிக்க இந்த வரிகளைச் சொல்லிச் சொல்லி வியந்தது நேற்றுப் போலிருக்கிறது.

9. அபலைகள்

அமரர் கல்கி
அமரர் கல்கி

28.4.1935 ஆனந்த விகடன்

தண்ணீர் எடுப்பதற்கான குழாயடிச்  சண்டையில் பித்தளைக்குடம் ஒரு மண்குடத்தை உடைத்துவிடுகிறது. பெண்களின் கணவன்மார்கள் தலையிட்டுக் கலவரமாகித் தேவையில்லாமல் மதக்கலவரமும் மூண்டு விடுகிறது. தேர்தல்வரை எதிரொலிக்கிறது.

எதைப்பற்றியுமே கவலைப்படாத அந்தப் பெண்மணிகள் வழக்கம்போல் சினேகமாக இருந்தார்கள் என்று கதை முடிகிறது. தங்களால் ஒரு பெரிய முதல்தரக் கலகம் நடந்ததைப் பற்றியோ, ஓர் அரசாங்கம் மாறி இன்னொரு அரசாங்கம் ஏற்பட்டதை பற்றியோ அறியாத அபலைகள் அவர்கள். "தங்கள் பலத்தைத் தாங்கள் அறியாதவர்களும் ஒரு விதத்தில் அபலைகளே அல்லவா?'" என்று கதைமுடிகிறது!

10. புலி ராஜா!

ஒவியம்; கோபுலு
ஒவியம்; கோபுலு

1.8.1941 – கல்கி

இந்தக்கதைக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட பலமொழிகளில் வெளியானதோடு இது ஜெர்மன் மொழியிலும்  வெளியானது. 1966இல் ஜெர்மன் மொழியில் வெளியான இந்திய மொழிச் சிறுகதைத் தொகுப்பில் Der Tiger Koning என்ற தலைப்பில் வெளியானதுடன் அதுவே தொகுப்பின் மகுடமாகவும் அமைந்தது. நூறு புலிகளை வேட்டையாடிய ஒரு மகாராஜாவைப் பற்றிய நகைச்சுவைக் கதை இது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com