
யெல்லோ பியர் புரொடக்சன் (Yellow Bear Production) சார்பில் சதீஷ் நாயர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெஜினா’. ரெஜினா படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் சத்யம் திரையரங்கில் நேற்று மாலை பிரம்மாண்டமாக நடைபெற்றது.
கடந்த மே-30ல் ‘ரெஜினா’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்ற நிலையில், நேற்றைய நிகழ்ச்சியின் துவக்கத்தில் இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் இரண்டு பாடல்கள் பார்வையாளர்களுக்காக திரையிடப்பட்டன.
இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக இயக்குனர்கள் வெங்கட்பிரபு, எழில், தயாரிப்பாளர்கள் டி.சிவா, சித்ரா லட்சுமணன், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், நடிகர் ஜெயபிரகாஷ், சிவஸ்ரீ சிவா, சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன், நடிகர் சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தனது நண்பர் இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு ஒரு நினைவு பரிசையும், அவரது தந்தை கங்கை அமரனுக்கு ஒரு நினைவு பரிசையும் இந்த நிகழ்வில் வெங்கட் பிரபுவிடம் வழங்கினார் தயாரிப்பாளர் சதீஷ் நாயர்.
மலையாளத்தில் 'பைப்பின் சுவற்றிலே பிரணயம்' மற்றும் 'ஸ்டார்' ஆகிய கவனிக்கத்தக்க படங்களை இயக்கிய இயக்குனர் டொமின் டி’சில்வா இயக்கியுள்ள படம் ரெஜினா. கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை சுனைனா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார் சதீஷ் நாயர்.
நிவாஸ் ஆதித்தன், ரித்து மந்த்ரா, அனந்த் நாக், தீனா கஜராஜ், விவேக் பிரசன்னா, பவா செல்லதுரை, அப்பாணி சரத், ரஞ்சன், பசுபதி ராஜ், ஞானவேல் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு பவி K.பவன் ஒளிப்பதிவு செய்ய, கமருதீன் கலை இயக்குநராக பணியாற்றி உள்ளார். டோபி ஜான் படத்தொகுப்பை மேற்கொள்ள, விஜி சதீஷ் நடனம் அமைத்துள்ளார். ஆடை வடிவமைப்பை ஏகன் கவனித்துள்ளார்.
இவ்விழாவில் தயாரிப்பாளர் சதீஷ் நாயர் படம் குறித்து பேசினார்
"எனக்கு படம் பண்ண வேண்டும் என்கிற ஆசை எல்லாம் இல்லை. எனக்கு இசை தான் முதலில். அந்த வகையில் கங்கை அமரன் அங்கிள் தான் எனக்கு காட் பாதர். இந்த துறையில் நுழைய அவர்தான் காரணம். நானும் வெங்கட் பிரபுவும் கல்லூரி காலத்திலிருந்து நண்பர்கள். என்னுடைய தயாரிப்பு நிறுவனம், என்னுடைய சேனல், படத்தின் ஃபர்ஸ்ட் லுக், இதோ படத்தின் மியூசிக் எல்லாமே வெங்கட் பிரபு தான் ரிலீஸ் செய்தார். அந்த வகையில் வெங்கட் பிரபு இந்த படத்தில் எனக்கு அவரது மறைமுக ஆதரவை தொடர்ந்து தனது பிஸியான நேரத்திலும் கொடுத்து வந்தார்.
சக்தி பிலிம் பேக்டரி மூலமாக இந்த படம் வெளியாவதில் மகிழ்ச்சி. இந்த படத்தில் இடம்பெற்ற குத்துப்பாட்டை எழுதியது என் நண்பர் இஜாஸ் தான். இந்த படத்தில் இடம்பெற்ற சூறாவளி பாட்டு சினிமாவிற்க்காக எழுதப்படவில்லை " என்றார்.
இயக்குனர் வெங்கட் பிரபு பேசும்போது" “நானும் இந்த படத்தின் தயாரிப்பாளர் சதீஷும் லண்டனில் கல்லூரியில் படிக்கும்போது இருந்தே நண்பர்கள். ஆனால் அவருக்குள் இசை குறித்து இவ்வளவு ஆர்வம் இருக்கும் என எனக்கு தெரிந்ததில்லை. இந்த படத்தை இயக்கியுள்ள டொமின் டி’சில்வா தான் சதீஷின் முதல் ஆல்பத்தையும் இயக்கி இருந்தார். ஆனால் இவர்கள் இப்படி ஒரு படம் எடுப்பார்கள் என அப்போது நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட வேண்டும் என என்னிடம் கூறியபோது, இதன் போஸ்டரை பிரித்துப் பார்த்ததுமே அது எனக்கே சவால் விடுவது போல இருந்தது.
அதிலும் சுனைனா இந்த மாதிரி போல்டான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என எதிர்பார்க்கவில்லை ' என்கிறார் வெங்கட் பிரபு.
இயக்குனர் டொமின் டி’சில்வா பேசும்போது, "சதீஷ் சாருடன் ஆரம்பத்தில் மியூசிக் வீடியோவில் இணைந்து பணியாற்றி உள்ளேன். ஆனால் என்னை நம்பி எப்படி இந்த படத்தைக் தயாரித்தார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. தமிழில் நான் இயக்குனராக அறிமுகமாகும் படத்திற்கு இயக்குனர் வெங்கட் பிரபு சிறப்பு விருந்தினராக வந்து கலந்து கொண்டது எனக்கு பெருமை” என்று கூறினார்.
மேலும் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டு இவ்விழாவில் சிறப்புரையாற்றினார்கள்.