அஞ்சலி:
கணேசரை வணங்கித்தான்
காரியங்கள் தொடங்கிடுவோம்!
கணபதியின் பெயரோடு…
கனமான நம்நாட்டின்
தலைநகரின் நாமத்தையும்
தாங்கி நின்ற
தனியான நடிகன்நீ!
தரமான மனிதன்நீ!
நானூறு படங்களையும்
தாண்டி நடித்தவன்நீ!
பல்வேறு மொழிகளையும்
பாங்காய் அறிந்தவன்நீ!
ஆரவாரம் அதிகமில்லா
அமைதியான உன்நடிப்பில்
ஊரே ஒன்றிவிடும்!
உலகே அமைதியுறும்!
நெல்லைச் சீமையிலே
நிலவாய்ப் பிறந்தநீ
விமானப்படை தனிலே
விருப்பமுடன் சேர்ந்திட்டாய்!
நாடகத்தில் உன்வாசம்
நாட்டினிலே பரவிடவே
வெள்ளித்திரை உன்னை
விரும்பியே ஏற்றது!
நாயகனின் பெருமைக்கும்
மைக்கேல்மதன காமராஜன்
சிறப்படைந்து புகழ்பெறவும்
சிந்துபைரவி சினிமா
சிகரத்தை எட்டிடவும்
அவ்வைசண்முகி படம்
அகிலத்தைக் கவர்ந்திடவும்
அபூர்வச் சகோதரர்கள்
அதிசயத்தைப் பரப்பிடவும்
கிரியா ஊக்கியாய்
கிளர்ந்தெழுந்து நின்றவன்நீ!
சப்தம் அதிகமின்றிச்
சாதித்துக் காட்டியவன்நீ!
இன்னும் பலசொல்ல
இடமில்லை நாயகனே!
இவையனைத்தும் இருந்தாலும்
எங்கள் இதயத்தில்
என்றும்நீ வாழ்வதற்கு
வேறொன்று விதையாய்…
வேராய் நிற்கிறது!
அது என்னவென்று
அகிலம் நன்கறியும்!
திகட்டாத் திருவிழாவாம்
தீபாவளி வருமுன்னே
ஆசிரமக் குழந்தைகளும்
ஆனந்தமாய்க் கொண்டாட
அன்பு வேண்டுகோளை
அமரனே நீவைப்பாய்!
அடுத்தஆண்டும் தீபாவளி
ஆர்ப்பரித்து வந்துவிடும்!
உன்குரலைக் கேட்காது
உள்ளங்கள் வாடிநிற்கும்!