இளைஞர்களின் பிரச்னை வேலையின்மையா? ஊதியக் குறைவா?

Unemployment
Unemployment
Published on

நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே வரும் இன்றைய காலகட்டத்தில் தான், வேலையின்மையும் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்காமல் பல இளைஞர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சிலருக்கு வேலையின்மை பிரச்னை என்றால், சிலருக்கு ஊதியக் குறைவு பிரச்னையாக இருக்கிறது. இந்நிலையில் வேலை குறித்த இளைஞர்களின் போக்கை அலசுகிறது இந்தப் பதிவு.

படிப்பை முடித்தவுடனேயே நல்ல வேலை கிடைத்து விட வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பில் பலரும் இருக்கின்றனர். ஆனால், எந்தக் கவலையும் இன்றி கல்லூரி படிப்பை முடித்தவுடன், வேலை தேடி அலையும் போது தான் பணத்தின் மதிப்பு பலருக்கும் புரிகிறது. சிலருக்கு உடனேயே நல்ல வேலை கிடைத்து விடும்; சிலருக்கு கொஞ்சம் தாமதமாகலாம்; சிலருக்கு வேலையே கிடைக்காமல் கூட போகலாம்.

அதிகம் கஷ்டப்படாமல் அதிக சம்பளத்தில் வேலை வேண்டும் என்பதே இன்றைய இளைஞர்களில் பலருடைய எண்ணமாக இருக்கிறது. நாட்டில் தொழில்துறை எவ்வளவோ முன்னேறி விட்டது. பல புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இங்கு பிரச்னை வேலையின்மையாக இருந்தாலும் கூட, நாம் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதிக தொழில் வாய்ப்புகள் இருக்கும் இன்றைய நிலையில் ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் போதும் என்றால் நிச்சயம் வேலை கிடைக்கும். ஆனால், படிப்புக்கும், அனுபவத்திற்கும் ஏற்றவாறு அதிக ஊதியத்தில் வேலை கிடைப்பது தான் கடினாமான ஒன்றாக இருக்கிறது.

படிக்காதவர்கள் கூட ஒரு கைத்தொழிலைக் கற்றுக் கொண்டு சொந்தமாக தொழில் செய்து வருகின்றனர். ஆனால், படித்த இளைஞர்கள் பலரும் தங்களின் திறமையை நம்பாது, நல்ல வேலை வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே இருக்கின்றனர். நல்ல வேலை கிடைத்தால் மகிழ்ச்சி தான். நாம் எந்தத் துறையில் வேலை தேடுகின்றோமோ அத்துறைக்கு ஏற்ற தொழில் சார்ந்த அறிவு நிச்சயம் இருக்க வேண்டும். இல்லையெனில், நம் எதிர்ப்பார்ப்பு நடந்தேறாமல் போகும்.

இன்று பட்டப்படிப்பு முடித்தவர்கள் கூட துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கின்றனர். ஏதேனும் ஒரு வேலை கிடைத்தால், அது அன்றாட பிழைப்புக்கு உதவும் என்ற கண்ணோட்டம் இளைஞர்களிடம் அதிகரித்து இருப்பதை இது குறிக்கிறது. வேலையே இல்லாமல் இருப்பதற்கு, குறைந்த ஊதியம் கொண்ட வேலை எவ்வளவோ மேல். அதிக சம்பளத்தில் வேலை தேடுபவர்கள், முதலில் கிடைக்கும் வேலையில் சேர்ந்து கொண்டு, கிடைக்கும் நேரங்களில் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்‌. இதனை சரியாகப் பின்பற்றினால் நிச்சயமாக ஒருநாள் நீங்கள் எதிர்ப்பார்த்த வேலை கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
வேலை இழப்புக் காப்பீடு யாருக்கெல்லாம் பயன்படும்?
Unemployment

வேலை கிடைப்பதில் இருக்கும் சிக்கல்கள் என்னென்ன என்பதை அறிந்து, அதற்கேற்ப உங்களை நீங்கள் தயார் செய்து கொள்ள வேண்டும். பட்டப்படிப்பு முடித்தவுடன், ஊதியம் குறைவாக இருந்தாலும் படிப்புக்கேற்ற வேலையில் சேர்வது தான் சிறந்தது. தொடக்கத்தில் ஊதியம் குறைவாக இருந்தாலும், அனுபவம் கிடைத்த பிறகு அதிக ஊதியம் கிடைக்கும். அப்படி இல்லையெனில் உங்களுக்கு எதில் ஆர்வம் அதிகமாக உள்ளதோ அந்தத் துறையில் கவனத்தை செலுத்தி, உங்களை மெருகேற்றிக் கொள்ளுங்கள்.

உண்மையைச் சொல்வதென்றால் குறைந்த ஊதியத்தை ஏற்றுக் கொள்ள மனமிருந்தால் ஏதேனும் ஒரு வேலை எளிதாக கிடைத்து விடும். ஆனால், கிடைத்ததை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை பலருக்கும் இல்லை என்பதே உண்மை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com