
உரத்த சிந்தனை அமைப்பு, இளைய தலைமுறையினரிடையே, மகாகவி பாரதியாரின் சிந்தனைகளையும் தேசபக்தியையும் பரப்புவதற்காக, கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் நிகழ்த்தி வரும் பாரதி உலா, சென்ற நவம்பரில் துவங்கி ஜனவரி முடிய 15 இடங்களில் நடைபெற்றது.
சென்னை, கோயமுத்தூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, சிவகாசி, காரைக்குடி, திருச்சி, மதுரை ஆகிய ஊர்களின் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் நடைபெற்ற பாரதி உலாவின் நிறைவுவிழா அண்மையில் சென்னை கிருஷ்ன கான சபாவில் சிறப்பாக நடைபெற்றது.
கிரிஜா ராகவன் தலைமை தாங்கிய நிகழ்வில் நல்லி குப்புசாமி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பாகப் பேசிய மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார்.
பாரதியின் படைப்புகளை காலவரிசைப்படி 23 தொகுதிகளில் வடித்துத் தந்த, பத்மஸ்ரீ விருது பெறும் சீனி விஸ்வநாதன் அவர்களுக்கு, உரத்தசிந்தனை சார்பில் 'பாரதி பணி வேந்தர்' என்ற விருதினை நல்லி குப்புசாமி வழங்கினார்.
தனியார் அறக்கட்டளை சார்பில் அவருக்கு Rs.20000/- காசோலையும் வழங்கப்பட்டது.
திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் முன்னிலை வகித்தார்.
சீனி விஸ்வநாதன் பேசுகையில், தனது பணிக்கு உறுதுணையாக இருந்த சின்ன அண்ணாமலை, பாரதி பற்றிய தரவுகளைத் தந்து தன்னை ஊக்குவித்த சீ.விஸ்வநாத அய்யர், கண்ணதாசன் ஆகியோரை நினைவு கூர்ந்து பேசினார் .
உரத்த சிந்தனை சார்பில் நல்லி குப்புசாமி அவர்களுக்கு 'பாரதிப் போராளி' விருது வழங்கப்பட்டது.
பாரதியாரின் பாடல்களுக்கு மாணவிகளின் நடனம், பாடல், தொடர்ந்து மாணவ மாணவிகளின் உரை என்று விழா சிறப்பாக நடைபெற்றது.