அமெரிக்க அதிபர் தேர்தலில், 'மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு,' என்பதில் மகேசன் தீர்ப்பு என்ன என்று தெரிந்துவிட்டது.
டானால்ட் ட்ரம்ப் எலெக்டோரல் கல்லூரி (Electoral College) வாக்குகளுடன் நாடளவிலும் அதிக வாக்குகளும் பெற்று ஐயத்துக்கு இடமின்றி வெற்றி பெற்றிருக்கிறார். மதில்மேல் பூனை மாநிலங்கள் அனைத்தும் அவரையே தேர்ந்தெடுத்துள்ளன. குழப்பமின்றி வாக்குகள் எண்ணப்பட்டு முடிந்துள்ளன. அரிசோனாவில் இன்னும் வாக்குகள் எண்ணப்பட்டு வந்தாலும், ட்ரம்ப் லட்சம் வாக்குகளுக்கு மேல் முன்னணியில் இருப்பதால், முடிவு மாறப்போவதில்லை.
கமலா ஹாரிஸும் வெற்றிபெற்ற ட்ரம்ப்புக்கு தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்து, பதவிமாற்றம் அமைதியான வழியில் நடக்கும் என்றும் உறுதியளித்துள்ளார். அதிபர் ஜோ பைடனும் அவ்வாறே செய்துள்ளார். இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோதி உள்பட பல நாட்டுத் தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
கமலாவிடம் அதிகமான தேர்தல் நிதி இருந்தது. பல்வேறு பெரும்புள்ளிகள் ஆதரவு தெரிவித்தனர்; ட்ரம்ப்பிடம் பணியாற்றியவர்கள் அவர்பற்றி எதிராகக் கருத்துப் பகிர்ந்தனர். ரிபப்லிகன் கட்சித் தலைவர் பலரும் கமலாவுக்கு வாக்களிப்பதாக உறுதியளித்து, அவருடன் இணைந்து பிரச்சாரம் செய்தனர். ஊடகங்கள் பெரும்பாலும் கமலாவுக்கே ஆதரவாகப் பேசின.
அப்படியிருந்தும் கமலா ஏன் தோற்றார்? இந்தத் தேர்தல் தவிர்த்து, 2004லிருந்து, ட்ரம்ப் உள்பட அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற எந்த ரிபப்லிகன் கட்சியைச் சேர்ந்தவரும் நாடளவில் பெரும்பான்மை வாக்குகள் பெறவில்லை. அந்த அவலத்தையும் ட்ரம்ப் உடைத்துக் காட்டினார் என்றால், அவர் எப்படிபட்ட செய்தியைப் பரப்பினார்? அவரால் மக்களின் நாடித் துடிப்பை எப்படி உணர முடிந்தது? எப்படித் தாறுமாறாகப் பேசினாலும், மக்கள் அதைப் புறம் தள்ளி அவர்தான் அதிபராக வேண்டும் என்ற முடிவைத்தானே எடுத்தனர்?
“பொருளாதாரம்தான் அது – முட்டாளே!”
1992ல் பில் க்லின்டனின் பிரச்சாரத் தலைவர் ஜிம் கார்வில் என்பவர் சொன்ன மேற்கோள்தான் “பொருளாதாரம்தான் அது – முட்டாளே!” என்பது. வாழ்வாதாரம் நன்றாக இருந்தால்தான்; அதை மேம்படுத்துவோம் என்றால்தான் மக்கள் வாக்களிப்பர் என்பதை நன்கு அறிந்திருந்தார் ஜிம் கார்வில். அதையே பில் க்லின்டன் தன் தேர்தல் பிரச்சாரத்தில் வலுப்படுத்தி இருமுறை வெற்றியடைந்தார்.
அதைத்தான் ட்ரம்ப்பும் பின்பற்றினார். மிகத் தேவையான உணவுப் பொருள்களின் விலைவாசிகள், அவர் அதிபராக இருந்த பொழுதைவிட 20% ஏறியுள்ளது. அந்த அளவுக்கு ஊதியம் உயரவில்லை. விலைவாசி ஏற்றத்தைத் துணை அதிபராக இருந்த கமலாவின்மேல் சுமத்துவதில் வெற்றிகண்டார். எனவே, ட்ரம்ப் பதவிக்கு வந்தால், விலைவாசி குறையும் என மக்கள் நம்பினர்.
கமலா எப்படிப்பட்ட திட்டங்களைக் கொணர்வேன், விலைவாசியைக் குறைப்பேன் என்று பேசினாலும், பணவீக்கம் கட்டுக்குள் வந்திருக்கிறது என்று திரும்பத் திரும்பக் கூறினாலும், மற்ற நாடுகளைவிட அமெரிக்காவில் பணவீக்கம் குறைவாக இருந்தாலும், வேலையில்லாமை மிகக் குறைவாக இருப்பினும், அதை மக்கள் நம்பவில்லை.
1967ல் தமிழ்நாட்டில் அரிசிவிலை கட்டுக்கடங்காமல் இருந்ததால்தான் காலம்சென்ற அண்ணா அவர்களின், 'ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி,' என்ற வாக்கு மக்களைக் கவர்ந்தது. தி.மு.க பதவிக்கு வந்தது. காமராஜரும் ஒரு மாணவரிடம் தோற்றார். இது மக்கள் வயிற்றுக்குத்தான் ஓட்டளிப்பர் என்று விளங்குகிறது.
சட்டவிரோதக் குடியேற்றம்:
அமெரிக்கா சென்றால் நிறையப் பணம் ஈட்டலாம் என்பது உலகில் அனைவரின் நம்பிக்கை. இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் சட்டப்படி ஐந்து லட்சம் பேர் குடியேறுகின்றனர். எனவே, தெற்கிலிருந்து மடைதிறந்தது போல மக்கள் வெள்ளம் வருகிறது. அது பெரும்பாலும் சட்டவிரோதக் குடியேற்றம். காவல் சாவடிகள் மூலம் வரும் அகதிகள், மற்ற இடங்களிலில் அத்துமீறி நுழைந்திருப்போர் கிட்டத்தட்ட ஒருகோடிக்கும் அதிகம்.
இவர்கள் அமெரிக்கக் குடிமக்கள் விரும்பாத வேலைகளைச் செய்கிறார்கள் எனினும், அதனால் விவசாய, கட்டுமானத் துறைகளில் விலை குறைகிறது என்றாலும், இவர்களுக்காகவும், இவர்களின் நலத்திற்காகவும், மாநில அரசுகள் செலவிட வேண்டியுள்ளது.
மனிதத் தன்மை அடிப்படையில் பைடன் இவர்கள் உள்ளே வர விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டைத் தளர்த்தினார். அவர் பதவிக்கு வந்த இரண்டாண்டுகளில் ஐந்து லட்சம்பேர் சட்டவிரோதமாக வந்தனர். அதை ட்ரம்ப் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி மக்களிடம் வெறுப்பைத் தூண்டும் வண்ணம் பிரச்சாரம் செய்தார். தான் பதவிக்கு வந்தால் சட்டவிரோதமாகக் குடியேறியவர் அனைவரையும் வெளியேற்றுவேன் என்று உறுதி அளித்ததும் மக்களை அவர்பால் திருப்பியது.
போர்கள்:
ஒரு ஆண்டுக்கு முன்னதாகத் தொடங்கிய இஸ்ரேல்-பாலஸ்தீனியப் போர், உக்ரேன்-ரஷ்யப் போர்களும் பல்வேறு முடிவை ஏற்படுத்தின.
மிஷிகன் மாநிலத்தில் குடியேறிய அரபு முஸ்லிம் மக்கள் பைடன் அரசு போர் நிறுத்தத்துக்கு ஆவன செய்யவில்லை என எண்ணியதாலும், மற்ற மாநிலங்களில் கல்லூரி மாணவர்கள் போரை விரும்பாததாலும், கமலாவுக்கு அங்கும், மற்ற இடங்களிலும் வாக்கு குறைந்தது.
மேலும், இந்தப் போர்களை தான் உடனே நிறுத்திவிடுவேன் என ட்ரம்ப் உறுதி அளித்ததையும், அவர் பதவியில் இருந்தபோது போர்கள் நடக்கவில்லை எனப் பிரச்சாரம் செய்ததையும் பெரும்பாலான மக்கள் நம்பினர்.
அதே சமயம், ட்ரம்ப் வந்தால் இஸ்ரேலுக்கு ஆதரவு அதிகரிக்கும், போர் நிறுத்தப்படும், பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவர், என்று எண்ணியதால், கமலாவுக்கு யூதர் ஆதரவு 10% குறைந்திருக்கலாம்.
அனுதாப ஆதரவு:
தேர்தல் நிதி மிகக் குறைவாக இருந்த ட்ரம்ப்புக்கு, அவர்மேல் தொடுக்கப்பட்ட வழக்குகள், அவருக்குக் கோடி கோடியாக நிதியைக் குவித்தது. அவர் மீது இரண்டு கொலை முயற்சிகள் நடந்ததும், அவரை ஒரு வெற்றி வீரராக மக்கள் கண்களில் தோற்றுவித்தது.
எவர் எப்படி வாக்களித்தனர்?
இப்பொழுது 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டு மக்களின் ஆதரவு எப்படித் திரும்பியதால் ட்ரம்ப் வெற்றிபெற்றார் எனப் பார்ப்போம். (நன்றி: சி.என்.என். ஊடகம்)
கமலாவுக்குக் கருப்பு ஆண்களின் ஆதரவு 4% குறைந்தது. கருப்புப் பெண்களின் ஆதரவு 3% அதிகரித்தது. அதனால், ட்ரம்ப்புக்கு 1% அதிக ஆதரவு.
லட்டினோ எனச் சொல்லப்படும் பழுப்பு இன ஆண்களின் ஆதரவு ட்ரம்ப்புக்கு 12% அதிகமாகி, பெண்களின் ஆதரவு கமலாவுக்கு 17% குறைந்தது. ட்ரம்ப்புக்கு ஆதரவு 29% அதிகம்.
ட்ரம்ப்புக்கு வெள்ளை ஆண்களின் ஆதரவு ஒரேபோலதான் இருந்தது. ஆனால் வெள்ளைப் பெண்கள் ஆதரவு 3% குறைவு.
இளைய தலைமுறையை எடுத்துக்கொண்டால், 29 வயதுக்குக் குறைவானவர் 13%ம், 30லிருந்து 44 வயதானவர் 7%ம் குறைவாகக் கமலாவுக்கு ஆதரவு கொடுத்தனர். 20% ஆதரவு குறைந்தது.
45லிருந்து 64 வயதானவர் ட்ரம்ப்புக்கு 10% அதிக ஆதரவளித்தனர். 65க்கு அதிகமானவர் ஆதரவு ஒரே மாதிரியே இருந்தது. எனவே, வயது வாரியாகப் பார்த்தாலும் ட்ரம்ப்புக்கு ஆதரவு அதிகமே.
ட்ரம்ப்புக்கு வலதுசாரி மக்கள் ஆதரவு 10%ம், இடதுசாரி மக்கள் ஆதரவு கமலாவுக்கு 5%ம் அதிகரித்தது. அதே சமயம் கமலாவுக்கு நடுநிலையாளர் ஆதரவு 13% குறைந்தது.
முன்பு கமலா ஹாரிஸ், இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் பக்கம் சாய்ந்ததும், இந்திய வம்சாவளியினர் ஆதரவைக் குறைத்தது.
ஆகவே, எப்படிப் பார்த்தாலும், எந்தவிதமாக நிலைப்பாடு உள்ளவர்களை எடுத்துக்கொண்டாலும், அதிகமான ஆதரவு இருந்ததே ட்ரம்ப்பின் வெற்றிக்குக் காரணம். அவர் அனைத்து அமெரிக்க மக்களின் முன்னேற்றத்துக்கும், நலத்துக்கும் வழிவகுக்கும் வகையில் செயல்படுவார் என நம்புவோமாக.
நன்றி: பதினைந்து வாரங்களாக அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றி பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்த கல்கி நிறுவனத்துக்கும், தலைமை ஆசிரியருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொண்டு, இத்தொடரை நிறைவுசெய்கிறேன்.
(முற்றும்)