
போயிங் ஓட்டுவதற்கு அமெரிக்காவில் போயிங் பயிற்சி நிலையத்திலேயே பயின்றிருந்த கேப்டன் ட்ரைவர் இங்கே தலைமைப் பொறுப்பில் மட்டும் இருக்கவில்லை. புது விமானிகளுக்குப் பயிற்சி அளிக்கும் வேலையையும் அவர் செய்தார். பயிற்சி முடிந்த பைலட்டுகளைப் பறக்கும் விமானத்திலும் பலவாறு சோதிக்கும் டெஸ்ட் பைலட்டாகவும் இறுதியாக “அவர்கள் ஓட்டத் தகுதியானவர்கள்” என்று சான்றிதழ் கொடுக்கும் எக்ஸாமினராகவும் இருந்தார். பெயர் ‘டிரைவர்’ என்பது எனக்கு வேடிக்கையாக இருந்தது. பார்சிகள் இந்த மாதிரிப் பெயர்களை வைத்துக் கொள்வார்கள். ‘பாட்லிவாலா... ஸ்க்ரூவாலா...‘ என்றெல்லாம்கூட பெயர்கள் இருக்கும்.
கேப்டன் டிரைவர் தன் காரை அங்கு கொண்டு நிறுத்தியதும் பைலட்டுகள் பலர் சிமுலேட்டர் போகாமல் நின்று கொண்டிருந்ததைப் பார்த்து என்ன என்று கேட்டார். ஏதோ சிறு கோளாறு இன்ஜினீயர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அதுதான் காத்துக் கொண்டிருக்கிறோம் என்றார்கள். அதற்குள் டைரக்டரிடம் வந்த இன்ஜினீயர்கள் இரவு பகலாக தொடர்ந்து ஓட்டிக் கொண்டிருந்ததால் எல்லாவற்றையும் தரோவாக செக் பண்ணி சரி பண்ணுவதற்கு நிறைய நேரமாகும் என்று சொல்லிவிடவே ட்ரைனிங் சீசன் கேன்சல் ஆகி பைலட்டுகள் திரும்புவதற்கு வண்டி ஏறினார்கள்.
இன்று சிமுலேட்டரைப் பார்த்தே விடுவது என்று தீர்மானித்து விட்ட நான் அவர்களுடன் போகவில்லை. இன்ஜினீயர்களிடம் “நானும் உங்களுடன் இருக்கலாமா?” என்று கேட்டதில் “இரவு முழுதும் இங்கு எங்களுடன் இருக்க வேண்டும்... பரவாயில்லையா...” என்றார்கள். நானும் சரி என்றேன்.
“எங்களுடன் உள்ளே வந்த பிறகு சிமுலேட்டர் எழுந்து நின்று விட்டால், அது மறுபடியும் கீழே இறங்குவதற்கு மணிக்கணக்காகும். அதுவும் பரவாயில்லையா” என்றும் கேட்டார்கள்.
அதற்கும் தலையாட்டியதால் படிக்கட்டில் ஏறி உள்ளே போனோம்.
அதன் பிறகு நான் பார்த்த மாயாஜாலக் காட்சிகள் என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. பக்கத்து அறையில் இருக்கும் 16 ஆளுயர கம்ப்யூட்டர்களில் இந்த போயிங் விமானம் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவையெல்லாம் புரோகிராம் செய்யப்பட்டிருந்தது. ஒரு விமானி தன் வாழ்நாளில் நடுவானில் பார்க்கவே முடியாத பயங்கரங்களையெல்லாம் இந்த கம்ப்யூட்டர்கள் நிகழ்த்திக் காட்ட பைலட் சீட்டில் அமர்ந்து விமானத்தை ஓட்டி ஒவ்வொன்றாக டெஸ்ட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். பின்னால் அப்சர்வர் சீட்டில் பெல்ட் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்த எனக்கு ஒரே திகிலாகத் தான் இருந்தது.
“வானில் இடி, மின்னல், மழை, புயல், ஆலங்கட்டி மழை, விமானம் சட்டென்று விழுவது, வெகு வேகமாக உயர்வது, பக்கவாட்டில் விழுவது என்று பலவற்றையும் அச்சு அசலாக நிகழ்த்தி அவர்கள் டெஸ்ட் பண்ணினார்கள். எதிரே ஜன்னலில் தெரிந்த காட்சிகள் ஒவ்வொன்றும் பயங்கரத்தின் உச்சகட்டமாக இருந்தன. சாதாரண தெள்ளிய வானத்தில் ஓடுவதையும் அவர்கள் டெஸ்ட் பண்ணினார்கள். பிறகு என்ன கோளாறு என்பதைக் கண்டுபிடித்து நல்ல வேளையாக சிமுலேட்டரும் கீழே இறங்கி நாங்களும் வெளியே வந்தோம். அதற்குள் 5 மணி நேரம் ஆகிவிட்டிருந்தது. எல்லோருக்கும் பசி வயிற்றை கிள்ளியதால் கேண்டினில் சாப்பிட்டுவிட்டு கம்ப்யூட்டர் அறையில் ஓரிரு மணி நேரம் செலவழித்த பிறகு மறுபடியும் சிமுலேட்டரில் ஏறினோம். அப்போது கிட்டத்தட்ட விடியும் நேரம். இந்திய விமான நிலையங்கள் எல்லாம் மாறி மாறி ஜன்னலில் வந்தன. விமானம் அங்கெல்லாம் ஏறி இறங்கியது. குறுக்கே வீசும் பலமான காற்று கண்ணே தெரியாத மேகத்துக்குள் பயணம் என்று மறுபடியும் ஒவ்வொன்றாக திகில் காட்சிகள்தான்.
“சென்னை ஏர்போர்ட் காட்ட முடியுமா” என்று கேட்டவுடன் சென்னை எதிரில் தோன்றிவிட்டது. பக்கத்தில் கோ பைலட் ஸீட்டில் என்னை உட்கார வைத்துக் கொண்டார் அந்த இன்ஜினீயர். சென்னையில் இறங்கும் போது ஒரு சில நொடிகள் உன் கையில் விட்டு விடுகிறேன். நீயே விமானத்தை இறக்கிப் பார் என்றும் சொல்லிவிடவே, என் ஆர்வம் அளவு கடந்து போனது.
“எடுத்த எடுப்பிலேயே பெரிய போயிங் விமானத்தை ஓட்டப் போகிறேன்” என்ற மகிழ்ச்சியில் என் மண்டையே வெடித்து விடும் போல் இருந்தது. காலில் ரட்டர் பெடல், கையில் கண்ட்ரோல் ஸ்டிக் இரண்டையும் எப்படி இயக்க வேண்டும் என்பதைச் செய்து காண்பித்தார். ஒவ்வொரு முறை நான் தவறு செய்த போதும் விமானத்தைப் பழைய நிலைக்கு சடுதியில் கொண்டு போய் மறுபடியும் இறங்க ஆரம்பிக்கச் செய்தார். ஒருவாறாக ஸ்மூத்தாக இறக்கி ரன்வே பக்கத்தில் வந்தவுடன் தாறுமாறாகி விட்டது. அப்படியே அந்தரத்தில் ஆஃப் செய்து நிறுத்தி, நான் என்ன தவறு செய்தேன் என்று விளக்கவும் செய்தார். கம்ப்யூட்டர் விமானம் என்பதால் இதையெல்லாம் செய்ய முடிந்தது. நிஜ விமானத்தில் தவறுகள் செய்தால் அதோகதிதான்.
ஒரு வழியாக என் ட்ரெயினிங் முடிந்து, விமானம் சம்பந்தப்பட்ட பிற விஷயங்களையும் சேர்த்தே கற்றுக் கொண்டு கோவைக்கு வந்து இறங்கினேன். அதன் பிறகு விமானத்தின் ட்ரிம் ஷீட் வேகமாகப் போடும் திறமையால் என் மதிப்பும் கூடியது. இது பெரிய பிரம்ம வித்தை இல்லை. விமானங்களில் ஏறும் ஒவ்வொரு பொருளும் மனிதர்கள் உட்பட எடையாகக் கருதப்பட்டு அவற்றை விமான உடல் பாகத்தில் சரியாக வினியோகித்து விமானத்தின் புவி ஈர்ப்பு மையத்தை விமானத்தின் பாதுகாப்புக்கு உகந்தவாறு கொண்டு வருவது தான் இது. குதிரை வண்டியில் முன்பாரம் பின் பாரம் என்று சமப் படுத்தி ஏற்றுவது போலத்தான் என்று வைத்துக் கொள்ளுங்கள்.என்னைப் படுத்தி எடுத்துக் கொண்டிருந்த சீனியர்களுக்கு சரியாகப் போடத் தெரியாது என்பது என் கூடுதல் பலம் ஆகிவிட்டது.
கோவையில் வரும் ஆவ்ரோ விமானங்கள் இயற்கையிலேயே முன் பாரம் கொண்டவை. ஆகவே பின் பகுதியில் தான் முதலில் எடை ஏற்ற வேண்டும். பயணிகள் குறைவாக இருந்தால் எல்லோரையும் பின்னால்தான் உட்கார வைக்க வேண்டும். பயணிகளே இல்லாமல் போய் வேறு பார்சல்களும் குறைவாக இருந்தால் மணல் மூட்டையைப் பின்னால் அடுக்கி எடையைச் சரி செய்வார்கள். அதற்கு ஒவ்வொன்றும் 10 கிலோ எடை உள்ள பலாஸ்ட் பேக் என்று தனியாக இருக்கும். பயணிகள் இல்லாத சமயங்களில் அனேகமாக 100 அல்லது 150 கிலோவிற்கு குறையாமல் பின்னால் அவற்றை ஏற்ற வேண்டியிருக்கும். கொச்சி போகும் விமானங்களில் பயணிகள் அடிக்கடி குறைந்து விடுவார்கள். அதற்காகவே மணல் மூட்டைகளை ஸ்டாக் வைத்திருப்போம்.
ஒருநாள் இப்படி ஏற்ற வேண்டிய நிலை வந்த போது நூறு கிலோ பின்னால் போட சொல்லிவிட்டு வந்தேன். பிறகு மீதம் இருக்கும் பலாஸ்ட் பைகளைச் சரிபார்த்த போது ஒன்று கூடக் குறையவில்லை. பணியாளர்களிடம் கேட்டதில் “100 கிலோ அரிசி மூட்டைகள் போட்டு விட்டோம்” என்று சொன்னார்கள். மேலும் விசாரித்த போது சீனியர்கள் பண்ணும் கள்ளத்தனம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மாதிரி அரிசி மூட்டைகளை அடிக்கடி அனுப்பி விடுவார்களாம். கேரளத்தில் அரிசிப் பஞ்சம் என்பதால் தங்கள் குடும்பத்திற்கும் அங்கிருக்கும் மற்ற பணியாளர்கள் குடும்பத்திற்கும் இவை பயன்படுமாம். எனக்கு என்னவோ இவர்கள் இதில் லாபம் பார்க்கிறார்களோ என்று தோன்றியது. அதன் பிறகு யாரும் என்னைப் படுத்தவில்லை. போட்டுக் கொடுத்து விடுவானோ என்ற பயம்.
சில நாளில் “28 பயணிகளுடன் சென்ற விமானம் கொச்சியில் இறங்கும்போது ஸ்கிட் ஆகிப் பள்ளத்தில் இறங்கி விட்டது” என்று வழக்கம் போல டவரில் போனபோது நான் தெரிந்து கொண்டேன். அவசரமாக கீழே இறங்கி ஆபீசுக்கு வந்தால் நான் அந்த விமானத்துக்குப் போட்டிருந்த ட்ரிம் ஷீட் காப்பியை கவரில் வைத்து சீல் செய்து கொண்டிருந்தார்கள். லோடிங் தவறாக இருந்தால் அதற்குப் பொறுப்பான உனக்கு வேலை போய்விடும் என்ற மிரட்டல் வேறு. “இந்த முறை இவனை ஒழித்து விடலாம்” என்று சீனியர்கள் கண்ணில் கெட்ட ஒளி தெரிந்தது.
(தொடரும்)