வந்தே பாரதம்

வந்தே பாரதம்

முந்தின நாளே அருகிலிருக்கும் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து சிலர் வந்து நோட்டிஸ் கொடுத்துவிட்டுப் போயிருந்தார்கள். தெரு ஓரத்திலிருக்கும் காய்ந்த காட்டுச் செடிகளில் சிக்கிக்கொண்டு சில காகிதங்கள் இன்னமும் காற்றில் படபடத்தபடி இருந்தன.

முதலில் வீடுவீடாகச் சென்றுதான்  கொடுத்துக் கொண்டிருந்தார்கள். கிழவியின் வாய்த்துடுக்குப் பேச்சில்  கடுப்பாகி கையை நீட்டிக்கொண்டிருந்த ஏரியாப் பையன்களிடம் நோட்டீசை மொத்தமாகக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்கள்.

“ஏம்பா.. ஒரு ரயிலும்  நிக்க மாட்டீங்குது. அப்புறம் எதுக்கு டேசனு? அங்க ஒரு கக்கூசு வேற. வருசம் முழுக்க பூட்டியே வெச்சுருக்கீங்க.. அதையாவது தொறந்துவெச்சா எங்க ஆளுங்களுக்கு உபயோகமா இருக்குமில்ல?”

“அந்தக் காலத்துல டூரிங் டாக்கிசுலேந்து வந்து நோட்டிசு போடற மாதிரி வீசிட்டு போயிட்டானுங்க.. என்னென்னு கேட்டா புதுசா ட்ரெயின் விடப் போறாங்களாம்..”. தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த கும்பலில்,  கழுத்து உடைந்திருந்த பிளாஸ்டிக் குடத்தில் தண்ணீர் பிடித்தபடி கிழவி சொல்லிக் கொண்டிருக்க பக்கத்துவீட்டு பொன்னம்மா தலையை ஆட்டினாள்.

“நாம் பாக்காத ட்ரெயினா... பொறந்ததுலேர்ந்து இதைத்தானே பாத்துக்கிட்டிருக்கோம்... நம்ம குழந்தைகளைத் தாலாட்டறதும் அதோட சத்தந்தான்..” என்றாள் பொன்னா.

“ஹாங்.. நடுராத்திரில எழுப்பிவிடறதும் அதோட சத்தத்திலதான். இல்லாங்காட்டி இந்த ஏரியாவுல  இவ்வளவு குழந்தைங்க இருப்பாங்கறே?” கிழவி சொன்னதும் களுக்கென்று சிரித்தபடி  தண்ணீர்க்குடங்கள் கலைந்து சென்றன.

இடுப்பில் குடத்துடன் மேடிட்டிருந்த மண்தரையில் நடந்து வேலி படலைத் திறந்து வீட்டுத் தோட்டத்தில் நுழைந்தாள் பொன்னி.

அவளைப் பார்த்ததும், தொழுவத்தில் கட்டியிருந்த பசுமாடு லட்சுமி அடிவயிறு குலுங்க அம்மாவென்று அழைத்தது.

“உனக்குத் தீனி வெக்கற நேரம் வந்துடுச்சா.. இரு தாயி.. கரைச்சு வெச்சுட்டுக் கூப்பிடறேன்..” என்றபடி வீட்டினுள் புகுந்தாள். வங்கிக் கடனில் வாங்கிய மாடு. அதற்கு அத்தாட்சியாக, மாட்டின் காதில் வங்கி டோக்கனில்  கடுக்கன். தினசரி ஆறு லிட்டர் பால் கொடுக்கிறது.

“டேய் இளவல், மாட்டை அவுத்துக்கிட்டு வா.. அதுக்குப் பசிக்குதாம்.” குரல் கொடுத்தாள்.

போன ஆடி மாதத்தில்தான் பையனுக்கு இரண்டு வயதாகியிருக்கிறது. அவன் நடக்க ஆரம்பித்ததிலிருந்து மாட்டின் கயிற்றை கையில் பிடித்துக்கொண்டு நடக்கிறான். இளங்கன்று பயமறியாமல்  இழுத்துச் செல்லும் இடத்திற்கெல்லாம் பின்னாலேயே நடந்து போகிறாள் லட்சுமி.

அதைத்தான் அடுத்த தெருப் பையன் வீடியோவாக எடுத்து முகநூலில் போட்டிருந்தான்.. வைரலாக வேறு  பரவியது.  இதுவரை பார்க்காதவர்கள் ஸ்மார்ட்போன் இல்லாத நரகத்திற்குள் தள்ளப்படுவார்கள் என்பது உறுதி.

தெருவில் தண்டோரா சத்தம் ஒலித்தது.

தீவனத்தைக் கரைத்து வைத்துவிட்டு வாசலுக்கு ஓடினாள் பொன்னி.

“எல்லாருக்கும் அறிவிப்பது என்னவென்றால் , நம்ம ஊர் வழியா மைசூருக்கு புதுசா வண்டி விடப்போறாங்க. அது நடுவுல எங்கேயும்  நிக்காது.  அது படுவேகமாகப் போகிற வண்டி. அதனால நீங்க ரயில்பாதையை விட்டு விலகி பாதுகாப்பா இருக்கணும்… உங்களுக்கோ நீங்க வளர்க்கிற வீட்டுப் பிராணிகளுக்கோ ஏதாவது ஆச்சுன்னா அதுக்கு ரயில்வே நிர்வாகம் பொறுப்பாகாது.. “ மடமடவென்று அடித்துக் கொண்டு போனார் கிராமசபைத் தொழிலாளி. அவர் பின்னால் சிறுவர் கூட்டம் ஒன்று தொடர்ந்தது.

பொழுது சாய்ந்ததும் முத்தையன் வேலை முடிந்து வந்தான். கட்டிடப் பணியில் கொத்தனார் வேலை. ஐந்து வருடங்களுக்கு முன்னால், சித்தாளாகச் சுற்றி வந்துகொண்டிருந்த பொன்னம்மாவை ஜாடைமாடையாகப் பேசி கட்டடத்தோடு காதல் கோட்டையும் சேர்த்துக் கட்டினான். வயதான அப்பாவுடன் வேலைக்கு வந்து கொண்டிருந்த பொன்னாவிற்கு முத்தையனைக் கல்யாணம் செய்து கொள்வதே மேல் என்று தோன்றியது. இரண்டு வருடங்களுக்கு முன்னால் பையன் பிறந்தான். எல்லாம் லட்சுமி வந்த வேளை என்பான் முத்தையன்.

முத்தையன் வீட்டிற்குள் வரும்போதே வாயில் சரக்கு வாடை அடித்தது. நல்ல விஷயம் என்னவென்றால், அளவாய் அடித்து விட்டு வருவான். கண்டபடி பேசமாட்டான். சாப்பிட்டவுடன் சிறுது நேரம் டிவியைப் பார்த்துவிட்டு தூங்கப் போய்விடுவான்.

சாப்பிடும் சமயத்தில், “என்ன பொன்னா, வர வழியெல்லாம் நோட்டீசா எறஞ்சு கிடக்கு?” என்றான்.

பொன்னம்மா விபரமாகச் சொன்னாள். சாப்பிட்டுக் கொண்டே அவள் சொல்வதைத் தலையாட்டியபடி கேட்டுக் கொண்டான்.

சரியாக இரண்டு நாட்கள் கழித்து தண்டோரா ரயிலின் வெள்ளோட்டம் விடப் போவதாக செய்தி வந்தது. புதிய ரயிலுக்குத் தண்டோரா ரயில் என்று  பெயர் வைத்தவள் பக்கத்துவீட்டுக் கிழவி.

ரெண்டாம் நாள். ரயில் பாதையை ஓட்டிய தெருவில் , ரயில் வரும் திசையை நோக்கி சிறுவர்களும், பெரியவர்களுமாக கூட்டம் திரண்டு நின்றது.

கிழவியும் இடுப்பில் வைத்து ஒரு கையில் குச்சியை ஊன்றியபடி வந்து நின்றாள்.

“ரொம்பத்தான் சொல்றாங்களே.. தண்டோரா ரயில் எவ்வளவு வேகமாகத்தான் போகுதுன்னு பாக்கணும்” என்றாள்.

“பாட்டி, அதுக்கு பேரு வந்தே பாரத்” ஒரு சிறுவன் திருத்தம் கொடுத்தான்.

ரயில் நெருங்கும் சப்தம் கேட்டது. தண்டவாளங்கள் அதிர்ந்தன. தொலைவில்  அதன் வெள்ளை முகப்பு தெரிந்தது. அதன் தலைக்கு மேல் இருந்த உலோகச் சாட்டையை  சொடுக்கையில் மின்கம்பிகளில் நெருப்புப் பொறிகள் பறந்தன. வெளைக் குதிரை ஓடி வருவது போல் இருந்தது.

“பொம்பளைங்க எல்லாம் புடவையை புடிச்சிக்கிங்க.. வண்டி போற ஸ்பீடுல காத்தடிச்சு அலாக்கா தூக்கிடப் போகுது” என்று கிழவி முன்னெச்சரிக்கை மணி ஒலித்தாள். ஏகப்பட்ட அனுபவம் போல.

அருகில் நெருங்கிய வண்டி அம்பு போல்  சீறிப் பாய்ந்தது.

கிழவி அதிசயித்தபடி, “வந்துச்சே பாரத்து.. உண்மையிலேயே வேகந்தான் போலிருக்கு..” என்று பாராட்டுப் பத்திரம் படித்தாள்.

“கிழவி மண்டையைப் போடறதுக்கு முன்னால் அதுக்கு நூறு பேரு வெச்சுரும் போலிருக்கே..” என்றபடி கிழவியின் ரசிகைகள் கிளம்பிப் போனார்கள்.

இரவு நேரம். வேலை முடித்துவிட்டு திரும்பி வந்த முத்தையன் எப்பவும் போல் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

ரயில் வரும் சப்தம் கேட்டது.

பொன்னாதான் கேட்டாள். “ஏன்யா.. காலேல போன வண்டி திரும்பி வரநேரம் இப்போ. வந்து பாக்குறியா?”

“நெதமுந்தான் ஓடப் போகுதே. அப்போ பாத்துக்கலாம்.. இப்போ இருட்டுல என்னத்தைப் பாக்குறது?” என்றான் .

அடுத்த கவளம் கையில் எடுக்கையில், ரயில் எதன் மீதோ மோதியது போலவும் அதைத் தொடர்ந்து க்ரீச்சென்ற பலத்த ஒலியும் கேட்டன.

கையிலிருந்த சோற்றை உதறிவிட்டு எழுந்தான் முத்தையன். “ஏதோ ஆயிருச்சு பொன்னா. வாய் போய்ப் பாக்கலம்”.

குடிசையை விட்டு வெளியில் இருவரும் வேகமாக வெளியில் வந்தனர். வாசல் படல் திறந்து இருந்தது.

“ஏன்யா.. வீட்டுக்குள்ள வரும்போது படலைச் சாத்திட்டு வரலியா?” என்று கேட்டுக் கொண்டே சுற்றிலும் பார்த்தாள். மாட்டைக் காணவில்லை.

‘குழந்தை?’

அவனையும் காணவில்லை.

அலறி அடித்துக் கொண்டு பொன்னா வெளியில் ஓடினாள். முத்தையன் நெஞ்சம் பதைபதைக்க பின்னால் ஓடினான்.

வெள்ளோட்டம் போய்விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த வண்டிதான்.  பிரேக் அடித்ததில், தண்டவாளங்களைத் தேய்த்தபடி சற்று தள்ளிப் போய் நின்றிருந்தது. 

முன்பகுதியை நோக்கி இருவரும் ஓடினர்.

“டேய் இளவல்… எங்கடா இருக்கா.. என்னாச்சுடா ராசா ?” மாரில் அடித்தபடி ஓடினாள் பொன்னா.

சுற்றுவட்டாரத்தில் இருந்த மக்கள் எல்லாம் கும்பலாகச் சேர ஆரம்பித்தனர்.

வண்டியில் அடிபட்டு ரயில் பாதையிலிருந்து சற்று தள்ளி அவர்களது வீட்டு மாடு-லட்சுமி விழுந்து கிடந்தது.

வண்டியின் முகப்பு தெறித்து விழுந்திருந்தது.

“யோவ் நம்ம மாடுதான்யா அடிபட்டு செத்துக்கிடக்கு”  மாட்டை நோக்கி ஓட ஆரம்பித்தவளுக்கு சட்டென்று உறைத்தது. “அப்போ இளவலுக்கு என்னாச்சு?”

முத்தையனும் மாட்டின் அருகில் நெருங்கினான். சமயோசிதமாக இடுப்பிலிருந்த  மடக்குக் கத்தியை விரித்து மாட்டின் காதிலிருந்த டோக்கனைக் காதுடன்  வெட்டி எடுத்துத் தூர வீசினான். பின்னர் கூட்டத்துடன் கலந்து பொன்னியுடன் பின்னால் போய் நின்று கொண்டான்.

“இந்தாடி என் பேரன்.. அப்படி தனியாவா விடுவீங்க.. ” என்றபடி  இளவலை பக்கத்து வீட்டுக் கிழவி பொன்னம்மாவிடம் கொடுத்தாள்.

ரயில் கார்டு கடைசி கோச்சிலிருந்து மெதுவாக நடந்து வந்து சேர்ந்தார்.

கூட்டத்தைப் பார்த்து, “மாடு தண்டவாளத்தில் வந்து அடிபட்டுச் செத்திருக்கு.. இப்படியெல்லாம் ஆகக்கூடாதுன்னுதான் ஒரு வாரமா நோட்டிசு கொடுத்தோம். தண்டோரா போட்டுச் சொன்னோம்.. நீங்க கேக்கல.. யாரோட மாடுப்பா இது?”  கேட்டார்.

இதுமாதிரி சந்தர்ப்பங்களில் ஏரியாவாசிகள் ஒன்று சேர்ந்து கொள்வார்கள். மாடு யாருடையது என்று காட்டிக் கொடுக்க மாட்டார்கள்.

‘மாடு இறந்து போன நஷ்டம் மட்டுமில்லாமல், அபராதத் தொகை வேறு யாரு கட்டுவது?’

மாட்டின் காது அறுபட்டிருப்பதைப்  பார்த்துவிட்டு, “இதிலெல்லாம் உஷாருதான்.. விவரம் தெரியக்கூடாதுன்னு அதன் காதில இருந்த டோக்கன வெட்டி எடுத்துட்டீங்க… உங்களுக்காக உழைச்ச ஜீவன் இப்போ அனாதை ஆயிடுச்சு.”

கூட்டம் மௌனமாகத் தொடர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

“நாளக்கி உங்க கிராம அதிகாரி இங்க வந்து விசாரணை பண்ணுவாரு.. அப்பத் தெரிஞ்சு போகும்.. இது யாரோட மாடுன்னு”

கூட்டத்தில் சலசலப்பு நிலவியது.

எல்லாம் சில விநாடிகளுக்குத்தான்..

தடுத்து நிறுத்திய முத்தையனின் கையை உதறிவிட்டு, கூட்டத்தைக் கிழித்துக் கொண்டு முன்னால் வந்து நின்றாள் பொன்னா.

அவளை நிமிர்ந்து பார்த்தார்

“இது அனாதை இல்லீங்க.. என்னோட தாய்.. லட்சுமி.. என் குலசாமி” என்று கைகூப்பி நின்றாள். அவள் கண்களிலிருந்து நீர் அருவியாகக் கொட்டிக் கொண்டிருந்தது.

“ஏம்மா அவ்வளவு தண்டோரா போட்டுச் சொன்னோமே கேக்க மாட்டீங்களா.. “ என்றவர் தனது கோட்டுப் பையிலிருந்து சிறு நோட்டை எடுத்துக் கொண்டார்.

“சரி.. சரி.. கோர்ட்டுலேர்ந்து நோட்டிசு வரும்.. தண்டத் தொகை கட்டவேண்டியிருக்கும்.. “ பெயர் , விலாச விபரங்களைக் குறித்துக் கொண்டார்.

முத்தையனுக்கோ கோபம். அவளை இழுத்துக் கொண்டு போனான். “ஏண்டி உனக்கு அறிவில்ல.. ஏற்கெனவே மாடு செத்ததில நஷ்டம்.. பாங்கு கடன் எப்படிக் கட்டப் போறோம்னு தெரியல... இந்த எளவுல தண்டச் செலவு வேற.. .. அந்தக் காசை உங்கப்பனா கொடுக்கப்போறான் “ சீறினான்.  

“முதல்ல இவனைப் பிடியுங்க.. படலைச் சாத்தாம வந்த மனுசன்தானே நீங்க..” என்றபடி மகனை முத்தையனிடம் கொடுத்தாள்.

“பொன்னா.. யதேச்சையா வெளில வந்து பாக்குறேன். இருட்டுல உம்புள்ள மாட்டைக் கையில பிடிச்சுக்கிட்டு தண்டவாளத்துல நடந்துக்கிட்டிருக்கான். அவனுக்கு ரயில் விடற ஆசை போலிருக்குன்னு நெனச்சிக்கிட்டிருக் கையில, திடீர்னு ரயில் சத்தம் கேட்டுச்சு. அந்த தண்டோரா ரயில்தான் திரும்பி வருதுன்னு தெரிஞ்சதும் எனக்கு பக்குன்னு ஆயிருச்சு. உன் மவனுக்கு என்னா தெரியும். திகைச்சுப் போய்ட்டான். வண்டி வேகமா பக்கத்துலேயே வந்திருச்சு. உன் வீட்டு லட்சுமிதான் அவனை முட்டி வெளியில தள்ளிடுச்சு. நான் ஓடிப்போய் உன் மவனைத் தூக்கிட்டு வந்தேன்.  அதுக்குள்ளாற அந்த ரயில் மாடு மேல மோதிடுச்சு.. இன்னிக்கு உம்புள்ள உசிரோட இருக்கான்னா அதுக்கு லட்சுமிதான் காரணம்..“ பக்கத்துவீட்டுக் கிழவி சற்று முன்  கிசுகிசுத்தது இன்னமும் அவள் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.

விவரத்தைச்  சொன்னால் முத்தையன் அவளைக் கட்டாயம் புரிந்துகொள்வான்.

வந்தே பாரத் ரயில் பயணத்தைத் தொடர்ந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com