வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு

வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு
Published on

மது சமுதாயத்தில் நிலவி வந்த சமூக கட்டுப்பாடுகளால் அழுத்தப்பட்ட  மக்களுக்குக் கல்வி மற்றும் வேலை நிலைகளில் ஓரளவு இடங்களை ஒதுக்கி காலப்போக்கில் சமுதாய சமத்துவத்தை ஏற்படுத்தும் திட்டம்தான் இந்த இட ஒதுக்கீடு.  இதற்காகவே கல்வி ரீதியாக, சமூக ரீதியாக  பின்தங்கியவர்களுக்கு  கல்வியிலும் அரசுப் பணிகளிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், காலப் போக்கில் அரசியல் கட்சிகள் இந்த ஒதுக்கீடு முறையை ஒரு தேர்தல் ஆயுதமாகப் பயன்படுத்தி  ஒதுக்கீட்டு முறையைப் பல வகைப் பிரிவினருக்கும்  வழங்கி வந்தனர். ஒரு கட்டத்தில் உச்ச நீதிமன்றம், “இத்தகைய இட ஒதுக்கீடுகள் 50%க்கு மேல் இருக்கக் கூடாது” என்று வரையறுத்தது. ஆனால், தமிழ்நாட்டில் பலவகை ஒதுக்கீடுகள் மூலம் இந்த இட ஒதுக்கீடு  இப்போது 69% எட்டியிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில்  இது குறித்த வழக்கு நிலுவையிலிருக்கிறது.

இட ஒதுக்கீடு என்பது எவ்விதப் பாகுபாடுமின்றி அனைவரையும் சமமாக நடத்த வேண்டிய கோட்பாட்டில் உருவானது. ஆனால்,  இந்த  இட ஒதுக்கீடு என்பது மதிப்பெண் அடிப்படையில் முன்னிலையில் இருக்கும் ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை அவர்கள் ஒதுக்கீடு சலுகை பெறும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர் போன்ற பிரிவில் சேராதவர்கள் என்ற ஒரே காரணத்தால் மட்டுமே   சிதைத்தது.   இட ஒதுக்கீடு என்பது உயர் சாதி என்று வரையறுக்கப்பட்டு, ஆனால்  பொருளாதரத்தில் பின் தங்கியவர்களுக்கும்  கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.  நீண்ட பல நாட்களாக விவாதிக்கப்பட்டு வந்த இந்த கருத்து அண்மையில் முடிவுக்கு வந்திருக்கிறது.

2019ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கு முன்பாக மத்திய அரசு 10% இடங்களை ஒதுக்கீட்டிற்கு உள்வராத சாதியின் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கி ஒரு சட்டத்  திருத்தத்தைக் கொண்டுவந்தது. இந்த சட்டத்திருத்தை எதிர்த்து பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில்தான்  இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.  

“உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும்” என்று உச்ச நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியுள்ளது. 10 சதவீத இடஒதுக்கீடு அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மீறுவதாக இல்லை என்றும் சொல்லியிருக்கிறது.

இந்தியாவில் 85 சதவீத மக்கள் பொருளாதாரத்தில் நலிவடைந்த நிலையில்தான் உள்ளனர். சமூக ரீதியான இடஒதுக்கீடு மட்டுமே அவர்களை முன்னேற்றத்திற்குக் கொண்டு செல்லும். “அரசியலமைப்புச் சட்டம் சொல்லும் சமூகநீதி தத்துவத்துக்கு எதிரானது இந்த  தீர்ப்பு” என்று எதிர் குரல்கள் எழுந்திருக்கின்றன.

குறிப்பாக தமிழ்நாட்டில் பொருளாதாரத்தில் நலிந்தோருக்கான இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பு  சமூக நீதிக்கு பின்னடைவு என்கிறது தி.மு.க.

ஆனால், தீர்ப்பு இப்போதிருக்கும் இடஒதுக்கீடுகளின்  (பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவருக்கானவை) அளவைக் குறைக்கவில்லை. மேலும் இப்போது இட ஒதுக்கீட்டிற்குத் தகுதியான எந்த பிற்பட்ட வகுப்பினரையோ, பட்டியலினத்தவரையோ அந்தப் பட்டியலிலிருந்து நீக்கவில்லை.

 அந்த நிலையில் இந்த சட்ட திருத்தத்தையும்   தீர்ப்பையும் எதிர்ப்பதில் எந்த நியாயமும் இல்லை.மாறாக  “சமுக நீதி” என்ற பெயரில்   தகுதி மதிப்பெண்கள் பெற்றிருந்தும், “ஏழை மாணவர்கள்  அவர்கள் உயர்சாதியைச் சேர்ந்தவர்கள்”  என்ற ஒரே காரணத்துக்காகக் கல்வி மறுக்கப்படும் அவலம் தொடரும். இது வளர்ச்சியை நோக்கி வேகமாகச் செல்லும் ஒரு நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும்.

தகுதி அடிப்படையில் ஏழை மாணவர்களுக்கான  கல்வி  வாய்ப்பு என்பதை உறுதி செய்த இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க  உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்போம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com