“மாறுபடும் வாசிப்புப் பழக்கம்”

“மாறுபடும் வாசிப்புப் பழக்கம்”

வேகமான வாசிப்பு என்பது எனக்கு எப்போதும் சாத்தியமானதில்லை. தீவிர வாசிப்பு மன நிலையில், வரி வரியாகக் கடந்து செல்கையில் குறைவான பக்கங்களையே நான் கடந்திருக்கிறேன். அது ஒரு தகுதிக் குறைவு என்று எனக்குத் தோன்றவில்லை. காரணம் ஆளுக்கு ஆள் வாசிக்கும் முறைகள் மாறுபடுகின்றன. வெறுமே பக்கங்களைக் கடந்து போவது என்பது வேறு. உணர்வு பூர்வமாயக் கடப்பது என்பது வேறு.  

சிலர் ஒரே நாளில், அதுவும் சில மணி நேரங்களில் இருநூறு, இருநூற்றைம்பது பக்கங்களைக் கொண்ட ஒரு புத்தகத்தைப் படித்து முடித்து விட்டதாகச் சொல்கிறார்கள். எனக்கு ஆச்சரியமாகவே இருக்கும்.. எவ்வாறு அவ்வளவு விரைவாகப் படிக்கிறார்கள் என்று யோசிப்பேன். இன்றும் யோசித்துக் கொண்டேதான் இருக்கிறேன். அதில் எனக்கு ஒப்புதலில்லாமல்தான் இருக்கிறது. படிப்பது வேறு பறப்பது வேறு.

எந்த அளவுக்கு அந்தப் புத்தகத்தை அவர்கள் உள் வாங்கியிருக்க முடியும் என்று யோசனை போகிறது. அதிகபட்சம் ஒரு நாளைக்கு ஐம்பது பக்கங்களுக்கு மேல் நகர்ந்ததில்லை நான். இருநூறு பக்க நாவலோ, கட்டுரையோ, சிறுகதைத் தொகுப்போ, கவிதையோ அல்லது வேறு எதுவோ… குறைந்தது நான்கைந்து நாட்கள் ஆகிவிடும். சமயங்களில் ஒருவாரம் தாண்டிக் கூடச் சென்றிருக்கிறது.

இந்த ரேஞ்ச்ல போனா என்னைக்கு எங்கிட்ட இருக்கிற புஸ்தகத்தையெல்லாம் படிச்சு முடிக்கிறது? என்று வருத்தம் மேலிடுகிறது. இப்படி வாங்கிக் குவித்திருக்கிறோமே என்று மனதில் சோகம் மண்டிக் கொள்கிறது. ஆயுசையும், உடல் நலத்தையும் கொடு கடவுளே என்று மனம் வேண்டுகிறது.

வாழ்க்கையில் மன நலமும், உடல் நலமும்தான் முக்கியம். மற்றதெல்லாம் ரெண்டாம் பட்சம்தான். இவையிரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. அது சரியாக இயங்கிட, இலக்கியம் பெருமளவு உதவி செய்கிறதுதான்.

வாசிப்புப் பழக்கமுள்ளவர்கள், கதையை மட்டும்  மனதில் வைத்துக் கொண்டு படித்து நகர்வது என்பது வேறு. உணர்வு பூர்வமாய்க் கடந்து செல்வது என்பது வேறு. ஏதேனும் ஒரு கதாபாத்திரமோ அல்லது ஒரு குறிப்பிட்ட நிகழ்வோ மனதை வெகுவாக பாதித்ததென்றால் அந்த இடத்தில் நின்று போகிறது என் வாசிப்பு. அப்படியான மனிதர்களை, அந்தமாதிரியான சம்பவங்களை நாமும் நம் வாழ்க்கையில் ஏதோவொரு கட்டத்தில் சந்தித்திருக்கிறோம்தானே என்று நினைக்க ஆரம்பித்து விடுகிறேன். இதைவிடக் கடுமையான வார்த்தைகளை நான் எதிர்கொண்டிருக்கிறேனே என்று எண்ணுகிறது மனம்.  அந்தச் சூழ்நிலையில் நாம் எப்படி நடந்து கொண்டோம் என்று சிந்தனை போகிறது.  கிடைக்காத அனுபவங்களைப் படிக்க நேர்கிறபோது மனது வியந்து நிற்கிறது. பெருத்த சங்கடம் கொள்கிறது.

அசோகமித்திரன் இந்தச் சங்கடம் என்கிற வார்த்தையை நிறையப் பயன்படுத்துகிறார். எளிய மக்கள் அன்றாடம் அவர்களின் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சங்கடங்களைக் கண்டு மிகுந்த மனவேதனையுறுகிறார். சின்னச் சின்னச் சங்கடங்கள் என்று ஏராளமாய் நினைத்துப் பார்க்கிறார்.

ஓடிப்போய் ஏறும் முன் பஸ் நகர்ந்து விடுவது…அது கடைசி பஸ்ஸாக இருப்பது, வரிசையை மீறிக் கொண்டு முந்திப்போய் தண்ணீர் பிடிப்பது, அதனால் தனக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்காமல் போவது, வீட்டு வேலைகளையெல்லாம் முடித்து விட்டு அவதி அவதியாகக் கிளம்பி வெளியேறுகையில் தடுக்கி விழுவது, கால் கடுக்கக் காத்துக் கிடந்து கடைசியில் தன் முறை வருகையில் மண்ணெண்ணெய் இல்லாமல் போவது…எதிர்பாராவிதமாய் வைத்திருந்த கொஞ்சப் பாலும் கொட்டிப் போவது…சின்னத் தேவைக்குக் கூடக் காசில்லாமல் அவதியுறுவது….இப்படி ஏராளமான சங்கடங்களை அன்றாட வாழ்க்கையில் எதிர்நோக்கும் சாதாரண சாமான்யர்களின் வாழ்க்கைப் பாடுகளை நினைத்து அவர் படும் வேதனை….அவரைக் மிகுந்த கருணையும், அன்பும், இரக்கமும் கொண்ட மனிதராகக் காட்டுகிறது எனக்கு.  அதுதான் வாழ்க்கை பூராவும் விடாமல் அவரை எழுத வைத்திருக்கிறது என்று எண்ணி மனம் நெகிழ்கிறது..

அதே உணர்ச்சியில்தான் என் வாசிப்புப் பழக்கத்தில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் நான் நின்று போகிறேன். அந்த அலைகளிலிருந்து மீள எனக்கு சில மணி நேரங்கள் ஆகிவிடுகின்றது.. ஏன், சமயங்களில் சில நாட்கள் கூட முடிந்து போகிறது.. இதனால் புத்தகங்கள் தேங்கி விடுகின்றன. கடந்து செல்கையில் என்னைப் பார்த்து இளிக்கின்றன. காசிருக்குங்கிற தெம்புல வாங்கி அடுக்கிட்டியாக்கும்? என்று கேலி செய்கின்றன.

வேகமாகப் படிக்கும் திறன் என்று சொல்கிறார்கள் பலர். அது வெறுமனே படித்து முடிப்பது என்பதுதான் என் கணிப்பு. எண்ணிக்கையைக் குறைப்பதற்கு வேண்டுமானால் அது உதவலாம். பறவைப் பார்வையாய்….இதானே இந்தப் புத்தகம்…என்று சொல்வதற்கா படிப்பது? பழம் பெரும் எழுத்தாளர்கள் அப்படியா எழுதி வைத்திருக்கிறார்கள்? அந்த எழுத்து இன்றைக்கு எத்தனை பேரிடம் மிளிர்கிறது? திரும்பத் திரும்பப் படிப்பதற்குத்தானே அவைகள்! நினைத்த கணத்தில் வரிசையிலிருந்து சட்டென்று உருவி அந்த வரிகளை வாசித்தாக வேண்டாமா? ஆத்ம திருப்தி அதில்தானே…!

ஆனால் ஒன்று. ஒரு புத்தகத்தை நாம் படிக்க ஆரம்பிக்கும்போது அது சட்டென்று நம்மை உள்ளிழுத்துக் கொள்ள வேண்டும். அப்படியானால்தான் அது கடைசிவரை போகும். அந்தத் திறன் அந்த எழுத்துக்கு இல்லையென்றால் சரி…இதானா… என்று பக்கங்களைத் தாண்டி அங்கங்கே மேய்ந்து, கடைசி முடிவைப் படித்து, மூலையில் கடாசிவிடத் தோன்றும். வாங்கிக் குவித்த புத்தகங்களில் பல அப்படி இருந்திருக்கின்றன.

புத்தகங்களைத் தேர்வு செய்வது  என்பது ஒரு கலை. நமக்குத் தெரியாவிட்டால் தெரிந்தவர்களிடம் கேட்க வேண்டும். வரும் விமர்சனங்களைப் படித்து அதில் எது சிறப்பு என்று குறித்துக் கொள்ள வேண்டும். சகட்டுமேனிக்கு வாங்கிக் குவித்துவிட்டு பிறகு அவஸ்தைப்படுவதில் அர்த்தமில்லை. எனக்கு அந்த அவஸ்தை இருந்தது. இப்பவும் அவ்வப்போது நான் ஏமாறுவதுண்டு. கொஞ்சம் சுதாரித்துக் கொண்டிருக்கிறேன் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

நாஞ்சில் நாடனின் “கம்பனின் அம்புறாத் தூணியும்” அஃகம் சுருக்கேலும், நவம் புத்தகமும், குஷ்வந்த்சிங்கின் “பாகிஸ்தான் போகும் ரயிலும்” ந.சிதம்பர சுப்ரமணியனின் “மண்ணில் தெரியுது வானமும்” தொ.மு.சி.யின் “புதுமைப்பித்தன் வரலாறும்“  இப்போது என் கையில் என்றால் நானும் தேறியிருக்கிறேன் என்றுதானே பொருள்?

இங்கே பிறிதொன்றையும் சொல்லித்தான் ஆக வேண்டியிருக்கிறது. படிச்சிட்டேன் என்று சொல்லி புத்தகங்களை மற்றவருக்குக் கொடுத்து விடுவது சிலரின் வழக்கமாய் இருக்கிறது. வேறு சிலரும் படிக்க அது உதவும் என்றாலும்….ரசனையின்பாற்பட்டு நினைவுகளை அசை போடுகையில், குறிப்பிட்ட அந்த இடத்துல என்னமா எழுதியிருப்பார்…? என்று எண்ணிப் பார்க்கையில் சட்டென்று அந்தப் புத்தகம் கைக்கு வேண்டியிருக்கிறதே…? பின்பு அதை எப்படித் தூக்கிக் கிடாசுவதாம்? அல்லது கொடுத்து விடுவதாம்?

இரவல் கேட்பவர்கள், வாங்கிச் செல்பவர்கள் எத்தனை பேர் அதைத் திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள்? இரவல் கொடுத்தவர்கள் எத்தனை பேர் அதனை நினைவு வைத்திருக்கிறார்கள்? நான் என்னுடைய புத்தகங்களை நூலகங்களுக்குத்தான் கொடுத்திருக்கிறேன். அங்கே அது தொடர்ந்து பலருக்கும் பயன்பட வாய்ப்பிருக்கிறதுதானே? என் கண்ணெதிரே நகர்ந்து கொண்டிருக்கிறதே…!

சிங்கப்பூரில் இருக்கும்  பிரபல பெண் எழுத்தாளர் திருமதி ஜெயந்தி சங்கர் அவர்கள் தன்னுடைய புத்தகங்களை நூலகங்களுக்கு வழங்க விரும்பிக் கேட்டார். தடி தடியான புத்தகங்கள். மொத்தச் சிறுகதைகள், பெரிய நாவல், பயணக் கட்டுரைகள் என்று. திரு.கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருதினைப் பெற நான் நாமக்கல் சென்றிருந்தபோது அவரைச் சந்திக்க நேர்ந்தது. அது 2014. அவரது ஒரு புத்தகமும் அந்தப் பரிசினைப் பெற்றிருந்தது. அப்போது அவரைச் சந்திக்க நேர்ந்தது.  நட்பு ஏற்பட்டது. என் உறவினில் ஒருவரைச் சந்தித்தது போன்ற நிறைவு.

இஃமெயிலில் அவர் இந்தக் கோரிக்கையை என்னிடம் வைத்த போது, தாராளமாய்ச் செய்யலாமே என்று அவரது புத்தகங்களை மதுரை ஆயுதப்படைக் மைதான நூலகத்திற்கு வரவழைத்துக் கொடுத்தேன். அது இருப்புப் பதிவேட்டில் ஏறி, இன்று பலருக்கும் பரந்த வாசிப்பிற்குப் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.

எல்லாம் சரிதான்… தலையணை தலையணையாய் புத்தகங்களை வாங்கி வைத்துக்கொண்டு, கொலு வைத்தது போல், அவ்வப்போது தூசி தட்டித் தட்டி அடுக்கி வைப்பதில் என்ன பயன்? படித்துக் கரைய வேண்டாமா? புதிது புதிதாய் வேறு சேர்ந்து கொண்டேயிருக்கிறது…இன்று புத்தகங்கள் வரும் வேகத்திற்குப் படிப்பது, படித்து முடிப்பது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாய் இருக்கிறது.

முன் பதிவு சலுகையில் நல்ல நல்ல புத்தகங்களை வேறு போட்டு விடுகிறார்கள். வாங்காமல் முடிவதில்லை. நாள் பூராவும் உட்கார்ந்து படித்தாலும் முடியாது போலிருக்கிறதே….! அவ்வப்போது ஏதாவது எழுதியாக வேண்டியிருக்கிறது. கொஞ்சம் நானும் பழகியிருக்கிறேனே….! படிச்சா போறாது….எழுது…எழுது என்று மனது துடிக்கிறதே…! என்ன செய்யலாம்? விழுந்தாயிற்று….கடைசி மூச்சு வரை இப்படித்தான் கழியும் போலிருக்கிறது.

வாங்கோ…இந்தக் காயை நறுக்கிக் கொடுங்கோ….இன்னைக்கு அவியல்… கூப்பிடுவது காதில் கேட்கிறதா….?

கொஞ்சம் வீட்டுக்கும்தான் உபயோகமாய் இருப்போமே…!!!!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com