வாட்டி வதைத்தவருக்கும் வாரி வழங்கிய வள்ளல்!

வாட்டி வதைத்தவருக்கும் வாரி வழங்கிய வள்ளல்!
Published on

படித்ததில் பிடித்தது

பல தமிழ் படங்களை இயக்கியவர் ‘எல்லீஸ் டங்கன்’ என்ற அமெரிக்கர்! ‘சதிலீலாவதி’ என்ற படத்தில் எம்.ஜி.ஆர். அவர்களை முதன்முதலில் சிறு வேடத்தில் நடிக்க வைத்து அறிமுகப் படுத்தியவர்! ஜூபிடர் பிக்சர்ஸ்  சோமு  அவர்கள் 'மந்திரி குமாரி'  என்ற படத்தைத் தயாரித்தார். அந்தப் படத்தையும்  எல்லீஸ் டங்கன்தான் இயக்கினார். சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த எம்.ஜி.ஆர் அவர்களை மந்திரி குமாரிப் படத்தில் கதாநாயகனாக நடிக்கவைத்தார் ஜூபிடர் சோமு!

சிறு வேடங்களில் நடித்துவந்த எம் ஜி ஆர்,  கதாநாயகனாக நடிப்பதை டங்கன் விரும்பவில்லை!.

சேர்வராயன் மலைப் பகுதி பாறைகளில் , மந்திரி குமாரியின் படபிடிப்பு நடந்து கொண்டிருந்தது. சுடும் பாறையின் மேல் , எம்.ஜி.ஆர் மஸ்லின் துணியால் ஆன உடைகளை அணிந்து மல்லக்க படுத்தவாறு வில்லன் நடராஜுடன் வாள் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். காட்சி சரியாக வரவில்லை என்று மீண்டும் மீண்டும் நீண்ட நேரம் அந்தக் காட்சியை எடுத்தவாறு, எம்ஜி ஆரை வாட்டி வதைத்தார் டங்கன்.

இறுதியில் டேக் ஓ கே சொல்லி முடிந்ததும், , எம் ஜி ஆர் அணிந்து இருந்த மஸ்லின் உடை அவர் முதுகைப்பதம் பார்த்தது! அவரால் எழ முடியாமல் தவித்த போது , சோமு அவர்கள் தேங்காய் எண்ணையை எம்ஜி ஆர் முதுகில் தடவி பாறையில் இருந்து அவரை பிரித்தெடுத்தவர்,  எம்.ஜி.ஆரிடம், "உன்னைக் காயப் படுத்தியவர்கள் எல்லாம் ஒரு நாள் உன் முன் கைகட்டி நிற்கும் காலம் வரும்" என்று சொல்லி ஆறுதல் படுத்தினார்.

சோமு சொன்னதை போல், எம் ஜி ஆர் 1981 ல் தமிழக முதல்வராக இருந்தபோது,அவரைப் பார்க்க கசங்கிய கோட்டும், கலங்கிய கண்களுமாய் எல்லீஸ் டங்கன் வந்தார். தன்னை வதைத்தவர் என்பதை மறந்து, அவரை வரவேற்று, உபசாரங்கள் செய்து தன்னை பார்க்க வந்த காரணத்தைக் கேட்டார் எம் ஜி ஆர் அவர்கள்!

"லண்டனில் வசதியாக வாழ்ந்த நான், தற்போது வறுமையில் சிக்கி இருக்கிறேன். மிஞ்சி இருப்பது ஊட்டியில் இருக்கும் எஸ்டேட்தான். அதை விற்கலாம் என்றால் சில சட்டப் பிரச்சனைகளால் விற்கவும் முடியவில்லை! அதனால் உங்கள் உதவியை நாடி வந்தேன்" என்று வருத்தமும் வெட்கமும் கொண்டு டங்கன் சொல்லவும், அரைமணியில் அவர் எஸ்டேட்டை விற்க ஏற்பாடு செய்துவிட்டு, சூட்கேஸ் நிறைய பணத்தையும் கொடுத்து அனுப்பினார் நமது எம் ஜி ஆர்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com