வீரப்பன் வழக்குகள் அனகோண்டா பாம்பு வாலாய் நீள்வது ஏன்?

வீரப்பன் வழக்குகள் அனகோண்டா பாம்பு வாலாய் நீள்வது ஏன்?
Published on

32 வருடங்கள் கழித்து 2 பேர் விடுதலை:

தெளிவுபடுத்திய மனித உரிமை ஆர்வலர்கள்

வீரப்பன் வழக்கில் சிதம்பரம் ரேஞ்சர் கொலை விவகாரத்தில் பெருமாள், ஆண்டியப்பன் இரண்டு பேர் 32 வருட சிறைவாசத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளனர். ராஜீவ் கொலைக்குற்றவாளிகள் விடுவிப்புக்குப் பிறகு இவர்களின் விடுதலை மீடியா உலகில் பல்வேறு விதங்களில் பேசப்படுகிறது.

தற்போது வீரப்பன் வழக்கில் விடுவிக்கப்பட்டிருக்கும் பெருமாள், ஆண்டியப்பன் ஆகியோருக்கு 65 மற்றும் 74 வயது. பொதுவாக 58, 60 வயதில் பணிக்காலத்தில் ஓய்வு பெறுபவர்களையே கண்டுகொள்ள ஆளிருக்காது. அரசுப்பணி, மாதாந்திரம் கணிசமான பென்சன் என்றால்தான் ஓரளவு வாழ்க்கையை ஓட்டமுடியும். மற்றவர்கள் வாழ்வது பெருங்கஷ்டம். அதிலும் வயோதிகர்கள் இப்போதெல்லாம் முதியோர் இல்லங்களில்தான் அடைக்கலமாகின்றனர்.

இப்படியான சமூக சூழலில் சிறையில் 32 ஆண்டுகள் இருந்தவர்கள், 70 வயது கடந்த நிலையில் ஊருக்குள் வந்து எப்படி வாழப்போகிறார்கள் என்றுதான் சமூக ஆர்வலர்கள் கரிசனத்துடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல, வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு இன்றைக்கு 18 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்னமும் இதுபோல் இந்த வழக்குகளில் எத்தனை பேர் சிறையில் வாடுகிறார்கள்? ஜாமீனில் வந்து எத்தனை பேர் கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதெல்லாம் தற்போது விவாதிக்கப்படும் சமாசாரமாகியுள்ளது.

இந்த சூழ்நிலையில் விடுவிக்கப்பட்ட சிறைவாசிகள் பெருமாள், ஆண்டியப்பனை முன்நிறுத்தி பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை ஈரோட்டில் நடத்தியது தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மனித உரிமை அமைப்புகள்.

‘‘இதே வழக்கில் இவர்களுடன் கைது செய்யப்பட்டு தண்டனை அனுபவித்து வந்த வீரப்பனின் அண்ணன் மாதையன் 6 மாதங்களுக்கு முன்புதான் சிறையிலேயே இறந்து விட்டார். அவர் உயிருடன் இருந்த போது இப்படியொரு விடுதலை கிடைத்திருந்தால் அவரும் கொஞ்சம் சுதந்திரக் காற்றை சுவாசித்திருப்பார். குடும்பம் குழந்தைகளை தன் வீட்டிலேயே பார்த்து மகிழ்ந்து இன்னமும் கூட கொஞ்சநாள் உயிரோடு இருந்திருப்பார். அவருக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை!’’ என்று கனிந்துருகிய விடுதலையான ஆண்டியப்பன் சிறைக்குச் செல்லும்போது இவரின் மகன் ஆறு மாதக் கைக்குழந்தையாம். இப்போது அவனே சிறையில் பார்க்க வரும்போது எனக்கே மலைப்பாக இருக்கும்!’ என நெகிழ்ந்தார்.

வீரப்பன் தொடர்புடைய வழக்கில் ஆயுள் சிறைவாசியாக இன்னமும் கர்நாடக மைசூர் சிறையில் ஞானப்பிரகாசம், மீசை மாதையன் உள்ளார்கள்.  இவர்கள் 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்களில் ஞானப்பிரகாசம் புற்றுநோய் பாதிப்பில் ஏழு மாதங்களாக படுக்கையில் கிடக்கிறார். மீசை மாதையன் வயோதிகமடைந்து மனநிலை பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளார். ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலை என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு மனித உரிமைப் பிரச்சனை. சிறைவாசியின் கண்ணியம் மற்றும் மறுவாழ்வு சார்ந்தது. ஆனால் இவர்களை வீரப்பன் வழக்கு என்று கருதுகோல் கொண்டே விடுவிக்காமல் உள்ளார்கள். அது ஒரு அரசியல். இந்த மலிவான அரசியலைத் தவிர்த்து மனிதத்தன்மையோடு இதனை பொதுசமூகம் அணுக வேண்டும்!’’ என்று கோரினார் வழக்கறிஞர் ப.பா.மோகன்.

இது குறித்து அவர் மேலும் பேசும்போது ஏகப்பட்ட புள்ளி விவரங்களைச் சொன்னார்.

‘‘1987 ஜூனில் நடந்த வழக்கு இது. இதில் கைது செய்யப்பட்ட மூவருமே நேரடியாக கொலையில் தொடர்பு இல்லாதவர்கள். வழக்கு முறையாக நடத்தப்படாமலே தண்டிக்கப்பட்டவர்கள். இதையெல்லாம் காலம் கடந்து பேசி பயனில்லை. இருந்தாலும் அந்த தண்டனையை நாம் ஏற்றுக் கொண்டுதான் இப்போது பேசுகிறோம். சிறை என்பது ஒரு குற்றவாளியை திருத்துவதற்காகவே ஒழிய, அவர்களை தண்டனை கொடுத்தே சாகடிப்பதற்காக அல்ல. சுதந்திர இந்தியாவில் சிறைவாசிகளுக்கும் மனித உரிமை உண்டு என்று சட்டம் சொல்கிறது. அது உலகளாவிய சட்டமும் கூட.

அப்படி அவர்கள் 14 ஆண்டுகள் சிறையில் இருந்தால், அவர்களின் நடத்தை, செயல்பாடு முன் வைத்து இந்த சமூகத்தில் வாழத் தகுதியானவர்கள்தானா, தன்னை திருத்திக் கொண்டுள்ளார்களா? என்று இந்த மூன்றையும் பார்க்க வேண்டும். அதை வைத்துத்தான் அவர்களின் விடுதலையைத் தீர்மானிக்க வேண்டும் என்கிறது சட்டம். இதை ஆட்சியில் உள்ளவர்கள் ஆளுபவர்கள் தங்களுக்கு சாதகமாகவே பயன்படுத்திக் கொள்கிறார்கள் அதுதான் மிகப் பெரிய கொடுமை.

மதுரை லீலாவதி கொலை வழக்கில் ஏழு வருஷத்தில் குற்றவாளிகள் வெளியே வந்தார்கள். கோவை விவசாயப் பல்கலைக்கழக மாணவிகள் பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகள்- கொடூரமான குற்றம் புரிந்த அவர்கள் வெளியே வந்துட்டாங்க. மேலவளவு வழக்கில் தலித் மக்களை வெட்டிக் கொன்றவர்களுக்கு விடுதலை கொடுத்தாங்க. குஜராத்தில் பானு வழக்கு, கர்ப்பிணிப் பெண்ணை கொடூரமாக் கொன்னாங்க. அந்த வழக்கில் கூட கைதிகள் வெளியே வந்தாங்க. 

ஆதிவாசிகள், தலித் மக்கள், உழைக்கும் மக்கள், சிறுபான்மை மக்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறபோது மட்டும் இந்த சிறை விதிகள் முன்னுக்கு வராது. அதே ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள், ஆதிக்க சமூகத்தினருக்கு மட்டும்தான் சிறை விதிமுறைத் தளர்வுகள் கொடுக்கப்படுகிறது. அதைத்தான் வருத்தத்தோடு இங்கே குறிப்பிடுகிறோம். யாரும் செய்யாத அந்த மக்களுக்கு கருணை காட்டிய தற்போதைய முதல்வர் ஸ்டாலினை நாங்கள் மனதார பாராட்டுகிறோம்!’’ என்று தெரிவித்தார்.

வீரப்பன் இறந்து 18 ஆண்டுகள் கழிந்து விட்டன. மைசூர் சிறையில் இரண்டு பேர் இப்போதும் வாடுவது ஏன்? சிறையிலேயே இறந்தவர் எத்தனை? இன்னும் கோர்ட்டுக்கு நடந்து கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர் என்பதைப் பற்றி நம்மிடம் விரிவாகப் பேசினார் அந்தியூர் அன்புராஜ்.

இவர் பழங்குடிகள் பவுண்டேஷன் தலைவர். வீரப்பன் கூட்டாளியாக ஒரு காலத்தில் காடுகளில் வாழ்ந்தவர். பின்னாளில் போலீஸில் சரணடைந்து தமிழக, கர்நாடக சிறைகளில் சுமார் 20 ஆண்டுகள் இருந்தவர். ஆறு ஆண்டுகள் முன்பு விடுதலையானார்.

அந்தியூரில் இயற்கைப் பொருள் அங்காடி ஐந்திணை இயற்கைப் பொருளகம் நடத்தும் இவர், வீரப்பன் வழக்கில் மட்டுமல்லாது நீண்டகாலமாக சிறைவாசம் அனுபவிக்கும் சிறைவாசிகளை விடுதலை செய்ய சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார். அப்படித்தான் வீரப்பன் வழக்குகளின் கைதிகளையும் மீட்கும் பணியில் ஈடுபடுகிறார். மேற்படி பெருமாள், ஆண்டியப்பன் வழக்கிலும் அவர்களை மீட்க முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

அவர் கூறுகையில், ‘‘இப்பவும் பவானி, சத்தியமங்கலம், கோபி, ஈரோடு, மைசூர் என வீரப்பன் வழக்குக்காக கோர்ட்டுக்கு நடப்பதவர்கள் 25 பேருக்கும் மேல். அவர்கள் கூலி நாழிக்குக் கூட போக முடியாமல் 20-25 ஆண்டுகளுக்கு மேலாக பாடாய்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்போதும் சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக உள்ளவர்கள் எனக்குத் தெரிந்து மைசூர் சிறையில் இருக்கும் இருவர் மட்டுமே. அவர்கள் தடா சட்டத்தின்படி தண்டிக்கப்பட்டவர்கள். இந்த தடா சட்டம் இந்திராகாந்தி கொலைக்குப் பின்னர் கொண்டு வரப்பட்டு பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டது. அதை வைத்து பத்திரிகையாளர், சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் மீதெல்லாம் அந்த சட்டம் பாய்ந்ததில் பலமான எதிர்ப்புகளும் வந்தது.

இந்தச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. இது ஜனநாயகத்திற்கும், இந்திய இறையாண்மைக்கும் எதிரானது என்று ஏற்றுகிட்டு அந்த சட்டத்தை கலைச்சிடறாங்க. ஆனால், குறிப்பிட்ட காலத்தில் அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஆட்களை அதே சட்டத்தின் கீழே விசாரிக்கிறாங்க. அதே சட்டத்தால் தண்டிக்கவும் செய்யறாங்க. இது எவ்வளவு பெரிய முரண்? இப்ப சட்டத்தை உருவாக்கிட்டாங்க. தண்டனை கொடுப்பதற்கான வழிமுறைகளையும் உருவாக்கீட்டாங்க. ஆனா இதில் தண்டிக்கப்பட்டவங்களை எவ்வளவு காலம் வச்சுக்கலாம்; எப்ப விடுவிக்கலாம்ன்னு ரூலிங் உருவாக்கப்படவில்லை. இந்தியா முழுக்க இப்படி தண்டிக்கப்பட்ட சிறைவாசிகள் நூற்றுக்கணக்கானோர் சிறையோட சிறையா கிடந்து செத்துப் போயிட்டாங்க. செத்துப் போயிட்டும் இருக்காங்க.

இந்திராகாந்தி இறப்புக்குப் பிறகு பிஜாப்பூர்ல ஒரு சினிமா தியேட்டர்ல ஒரு குண்டு வெடிக்குது. அதில் ஏழு மாசம் கழித்து ஒரு சீக்கியரை கைது பண்றாங்க. அந்த சீக்கியர் இன்றைக்கு வரைக்கும் தடா சட்டத்தில் தண்டிக்கப்பட்டு பிஜாப்பூர் சிறையில் இருக்கிறார். பஞ்சாப் அரசாங்கம், கர்நாடக அரசோட இரண்டு முறை இதற்காக பேச்சுவார்த்தை நடத்தியிருக்காங்க. எதுவும் செய்ய முடியலை. ஏன்னா இந்த தடாசட்டப்படி தண்டிக்கப்பட்டவங்களை விடுதலை செய்ய மத்திய அரசு எந்த சட்டத்தையும் இயற்றவில்லை என்பதுதான். அதனால் மாநில அரசும் இவர்களை விடுவிக்க எங்களுக்கு அதிகாரம் இல்லைன்னு விட்டுடறாங்க.

இந்த சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் 75 ஆயிரம் பேரில் 1.2 சதவீதம்தான் தண்டிக்கப்பட்டவங்க. மீதி எல்லாம் நிரபராதி என விடுவிக்கப்பட்டவர்கள். தண்டிக்கப்பட்டவர்களிலும் மேல் முறையிடுல நிறைய பேர் விடுதலை ஆகிட்டாங்க. குறிப்பிட்ட ஆட்களில் தண்டிக்கப்பட்டவங்களை அந்த வழக்குல எப்பவும் உள்ளே வச்சுட்டே இருக்காங்க. அதுல எங்க வழக்குல வந்த ஆட்களும் மாட்டிகிட்டு இருக்காங்க. அவங்க விடுதலைக்கும் சுப்ரீம் கோர்ட்ல வழக்கு நடத்திட்டு இருக்கோம்!’’ என்றவர், ‘‘தற்போது சிறையிலிருந்து வெளியில் வந்திருக்கும் இருவரும் பிழைப்பதற்கு என்ன வழி என்று யோசித்து வருகிறோம். இப்படி வயோதிகமடைந்து வெளியே வரும் சிறைவாசிகள் மறுவாழ்வுக்கு அரசு ஒரு கமிட்டி அமைத்து ஏதாவது உதவி செய்ய வேண்டும்!’’ என்றும் கோரிக்கை வைத்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com