சென்னையில் வெனிஸ்! (04-12-2023)

chennai Rain
chennai Rainwww.newindianexpress.com

‘கடவுளை நம்பினோர் கைவிடப்படார்’ என்பார்கள். நம்முடைய நியாயமான வேண்டுதலை இறைவன் நிச்சயமாக நிறைவேற்றுவார் என்பது என் நம்பிக்கை.

பல மேலை நாடுகள் சென்றிருந்தாலும், வெனிஸ் நகரம் பார்க்க வேண்டும் என்பது தணியாத ஆசை. வீதியின் இருபுறமும் வீடுகள். நடுவில் தண்ணீர். ஒரு இடத்திலிருந்து மற்றோர் இடம் செல்வதற்கு படகு சவாரி. ஆங்கிலப் படங்களில் பார்த்த வெனிஸ் காட்சிகள் ஆசையைத் தூண்டி விட்டன.

இன்று காலை தூங்கி எழுந்து தெருவைப் பார்த்தால் வெனிஸ் போலக் காட்சியளித்தது. படகு சவாரி மற்றும் இன்னும் துவங்கவில்லை. இந்த வயதான காலத்தில் நீ ஏன் வெனிஸ் சென்று கஷ்டப்பட வேண்டும்? வெனிஸ் சூழலை நீ இங்கே அனுபவிக்கலாம் என்று கடவுள் நினைத்திருக்கலாம்.

ஒவ்வொரு வருடக் கடைசியிலும், சென்னையை கண்டு களிக்க வருண பகவான் துணையுடன் வெள்ளம் வருவது வாடிக்கையாகிவிட்டது.

Chennai Rain
Chennai Rain

1985ஆம் வருடம், தீபாவளி சமயத்தில் பெய்த கனமழையால் ஏரிகள் நிரம்ப, மதுராந்தகம் ஏரி திறந்து விடப்பட்டது. அன்றைய முதலமைச்சர், அவருடைய ராமாபுரம் இல்லத்திலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். நாங்கள் இருந்த வட்டாரத்தில் தரைத்தளத்தில் இருந்த வீடுகளில் தண்ணீர் புகுந்தது. நாங்கள் முதல் தளத்தில் இருந்தோம். எட்டு முழ வேஷ்டிகள் மூன்று நான்கு எடுத்து, வேஷ்டிகளை கயிறு போல முறுக்கி, இணைத்து, அக்கம் பக்கத்தில் தரைத் தளத்தில் இருந்தவர்களை எங்கள் முதல் தளத்திற்குக் கொண்டு வந்தோம். முப்பது நபர்கள் எங்கள் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கினார்கள். மின்சாரம் இல்லை. பெரிய பாத்திரத்தில் உணவு சமைத்துப் பகிர்ந்து உண்டோம். கிடைக்கும் இடத்தில் படுத்துக் கொண்டோம்.

Chennai Rain
Chennai Rain

2015ஆம் ஆண்டு, நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழையால், சென்னை வெள்ளக்காடாயிற்று. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உயிர் சேதங்கள் அதிகம். சென்னையின் பல இடங்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப நெடு நாளாயிற்று.

இந்த வருடமும் மழைப் பொழிவு அதிகம் என்பதால், ஏரிகள் நிரம்பி விட்டன. புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் திறக்கப்பட்டன. மதுராந்தகம் ஏரி திறக்கப்படக் கூடும் என்கிறார்கள். உயிர் சேதம், பொருட் சேதம் தவிர்க்கப்பட ஆண்டவனை வேண்டுவதைத் தவிர வேறு வழியில்லை.

இயற்கையின் சீற்றங்கள் கட்டுப்படுத்த முடியாது என்பதை ஒத்துக் கொண்டாலும், சாலைகளில் தேங்கிய தண்ணீர் கடலைச் சென்று அடைய சரியான வடிகால் இல்லயென்றால் என்ன செய்வது?

மாநகராட்சிக்கு நல்ல கொள்கை “நாளை நமதே” என்று. மழைத் தண்ணீர் சேகரிப்பதற்காக அமைக்கப் பட்டவற்றை மாசு நீக்கிச் சுத்தம் செய்தால் தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்கலாம் என்று அழைத்தால் “நாளைக்குப் பண்ணிடலாம் சார்” என்று வாக்குறுதி தவறாமல் அளிக்கிறார்கள். மளிகைக் கடைகளில் ஒரு பலகை இருக்கும். அதில், ’இன்று ரொக்கம், நாளை கடன்’ என்று எழுதியிருக்கும். அதைப் போலவே மாநகராட்சி அலுவலகங்களில் “நாளை நமதே” என்ற பலகை வைக்கலாம்.

இதையும் படியுங்கள்:
ஷீரடி சாயிபாபா அமர்ந்து அருளாசி வழங்கிய ஷீலா கல்!
chennai Rain

புயலுக்கு முன்னால் பெய்த மழையால், மழைநீரும், சாக்கடையும் கூட்டணி அமைத்து ஓடிக் கொண்டிருந்தன. சீர் செய்யப் போகிறோம் என்று சொல்லி வண்டியும் வந்தது. “சொன்ன வண்ணம் செய்கிறார்கள்” என்று மனம் குதூகலிக்க, அவர்களுக்கு என்னுடைய கண் திருஷ்டி பட்டுவிட்டது போலும். அப்புறம் இதுவரை வரவில்லை.

இது இப்படியே தொடருமா? அடுத்த வருடமாவது சிங்காரச் சென்னைக்கு விடிவு வருமா? விடிவு வரும் என்று நம்புவோம். அடுத்த வருடம் சென்னையில் வெனிஸ் பார்க்க மாட்டோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

“நம்பினார் கெடுவதில்லை நான்கு மறைத் தீர்ப்பு” என்று சீர்காழி கோவிந்தராஜனின் வெங்கலக் குரலில் பாட்டு ஒலித்துக் கொண்டிருக்கிறது... என் செவிகளில்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com