
ஐரேப்பாவின் குளிர் பிராந்தியமான நார்வேல் இருந்து கொண்டு, நம் பாரத தேசத்தின் பாரம்பரிய நுண்கலைகளை மற்ற ஜரோப்பிய நாடுகளுக்கு எடுத்து செல்கிறார் இந்த இளம் பாடகி. அது மட்டுமல்ல, அங்கிருக்கும் கலைஞர்களுடன் இணைந்து பயிற்சி முகாம், கலை நிகழ்ச்சிகள், விரிவுரைகள், சிறப்பு வகுப்புகள், இசைப் பட்டறை, இசை மூலமாக தேக, மன ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் போன்ற பல வித நிகழ்ச்சிகளைத் திறம்பட நடத்திக் கொண்டிருக்கிறார் தனது Art to Heart ஸ்தாபனத்தின் முலமாக.
இவர் 5 வது வயதிலிருந்தே இசைப் பயிற்சி மேற்கொண்டவர். பிரபல இசைக் கலைஞர்களான காயத்ரி வெங்கட்ராகவன், ஈரோடு நாகராஜ் ஆகியோரிடம் இசையும், நடனக் கலைஞர் ஜெயலக்ஷ்மி ஈஸ்வரிடமிருந்து பரத நாட்டியமும் கற்றுத் தேர்ந்து, உலகெங்கும் பல கச்சேரிகளை நடத்தி வருகிறார். இந்த வருடம் சென்னை இசை விழாவில் மட்டும் எட்டு கச்சேரிகள். நாட்டிய நிகழ்ச்சிகளுக்கும் இசை வடிவமைத்து வழங்கி வருகிறார், இசை மீது தீராத காதல் கொண்ட விதூஷி உமா ரங்கநாதன்.
இசைத் துறை மட்டுமில்லாமல் பல தொழில் நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும் பணியாற்றுகிறார்.
இந்த 'Art to Heart Institute' உருவான பின்னணி பற்றி கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு உமா ரங்கநாதன் பகிர்வது;
“நான் பிறந்து வளர்ந்த டெல்லியில் 5 வயதிலிருந்து பாட்டும் பரதமும் கற்றுத் தேர்ந்து பல நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளேன். மேற்படிப்பு மற்றும் வேலை நிமித்தமாக சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிற்கு சென்று, இப்பொழுது நார்வே நாட்டில் வசிக்கிறேன். நம் பாரம்பரிய சங்கீதத்தை வெறும் பொழுது போக்கிற்காக மட்டுமல்லாமல், இசை நுணுக்கங்களை வெளி நாட்டினருக்கும் புரியும் படியாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற ஒரு குறிக்கோளை வைத்துக் கொண்டு ஆரம்பிக்கப் பட்டதுதான் இந்த முயற்சி.
இசைத் திறனை வளர்த்துக்கொள்ள உறுதுணையாக இருப்பது, இசை நுணுக்கங்களைப் பாராட்டுவதற்கு பயிற்சி, இசையின் மூலமாக உடல், மன நலத்தை பேணிப் பாதுகாத்தல் ஆகிய குறிக்கோள்களை மையமாகக் கொண்டு ஆரம்பித்தேன்.
என்னுடைய குருமார்களான பிரபல கலைஞர்கள் விதூஷி காயத்ரி வெங்கடராகவன், வித்வான் ஈரோடு நாகராஜ், என்னுடைய கணவர் மிருதங்க வித்வான் சந்திரகாந்த் , ஆன்மிக பேச்சாளர் எம் கே ராமானுஜம்,ஆயுர்வேத சிகிச்சை நிபுணர் ஜூலி ஹூயாங் மற்றும் எனது குடும்ப அங்கத்தினர்கள் இந்த முயற்சிக்கு பக்க பலமாக இருந்து எனக்கு ஊக்கம் தருகிறார்கள்.
‘Art to Heart’ தொடங்கிய ஒரு வருடத்திற்குள் 14 நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன்.
எங்களுடைய நிகழச்சிகளுக்கு முனிசிபாலிடி அதிகாரிகள் வந்து வெகுவாக பாராட்டுகிறார்கள். இதுவரை 600 பேருக்கும் மேலாக பயனடைந்துள்ளார்கள். 35 மாணவர்களுக்கும் பயிற்சி கொடுத்துள்ளோம்.
'சங்கீத யாத்ரா' என்ற நிகழ்ச்சியில் அங்கு வாழும் இந்தியர்கள், நார்வே நாட்டு மக்களைத் தவிர பல நாட்டுப் பிரஜைகள் ஆர்வமாகக் கலந்து கொள்கிறார்கள்.
இசைப்பட்டறை, விரிவுரைகள் போன்ற நிகழ்ச்சிகளும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
சிறு வயதில் நான் என் தந்தையை இழந்தேன். கஷ்டப்பட்டு வளர்ந்த ஒரு குடும்பம். சங்கீதம் எனக்கு தன்னம்பிக்கையை தந்திருக்கிறது. சவால்களை அமைதியாக எதிர் கொள்ள முடிகிறது. கல்லூரியில் மனோதத்துவம் படித்துப் பட்டம் பெற்றதால், மனரீதியாக வரும் பிரச்சனைக்கு இசை எவ்வாறு உதவுகின்றது என்பதை தெரிந்து கொள்ள ஆர்வம் மிகுந்து, மியூசிக் தெரபி சான்றிதழையும் பெற்றேன்.
கர்நாடக இசை என்பது ஸ்ருதி, ஸ்வரங்கள்,ராகங்கள், தாளங்கள், பாடல்கள் போன்ற பல வித அம்சங்களை உள்ளடக்கியது. மனதை ஒருமுகப்படுத்துதல், குணப்படுத்துதல், சரியான உணர்ச்சிகளை வெளிப்படுத்துதல், சிறு சிறு பாடல்களை இயற்றுதல் போன்ற பல வித திறன்களை குழந்தைகளிடம் வளர்ப்பதற்கு நமது கர்நாடக ஸங்கீதம் பெரிதும் உதவுகிறது.
எனது நிகழ்ச்சியில், ஏழு ஸ்வரங்களை வைத்து ஆன்மீக மந்திரங்களைப் பாட வைப்போம். நம்முடைய ராகங்களுக்கு இதயத்தையும் மனதையும் உருக்கும் சக்தி உண்டு. அதன் மூலமாக மனதை அமைதி படுத்தும் யுக்திகளைக் கையாண்டு வருகிறோம். Autusim, ADHD னால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் வகுப்புகள் நடத்தி வருகிறோம்.
ஆட்டிஸத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையுடன் எட்டு மாதம் பழகி, மியூசிக் தெரபி மூலமாக அவனை வகுப்பில் ஒருநிலைப்படுத்தி உட்கார வைத்து பாடங்களை கற்பித்தேன். சில குழந்தைகளுக்கு சிறு சிறு பாடல்களைப் பாட வைத்து, பேச்சுத் திறனை வளர்க்க முயற்சிக்கிறேன். பாடல்களைக் கற்று பாடும் போது குழந்தைகளின் social anxiety வெகுவாகக் குறைந்து, சகஜமாகப் பழகுகிறார்கள்.
இசை என்பது இனம் மொழி மதம் கலாச்சாரம் தாண்டி, மனிதருக்குள் நேர்மறையான எண்ணங்களை வளர்த்து அனைவரையும் ஒருமைப்படுத்தும் உன்னதமான சக்தியாக நான் பார்க்கிறேன்”, என்று தமது தனது புதிய முயற்சிகளைப் பற்றி விளக்கினார் கர்நாடக இசைக் கலைஞர் உமா ரங்கநாதன்.