கருணைக் கொலை - உலக நாடுகளின் பார்வை!

Euthanasia
Euthanasia

கருணைக் கொலை பற்றிய விவாதம் இன்று நேற்று பிறந்ததல்ல. கருணைக் கொலையின் மருத்துவப்பெயரான யுதநேஷியா என்பதற்கு அர்த்தம் ‘நல்லசாவு.’ இந்த அர்த்தம்தான் கொஞ்சம் மாறிவிட்டது. ‘நல்ல கொலை’ என்பதுபோல்!

கருணைக் கொலை (Euthanasia) என்பதற்கும் தற்கொலைக்கு உதவுதல் (Assisted Suicide) என்பதற்கும் சட்டத்தின் கோணத்தில் மயிரிழை வித்தியாசம் உண்டு. நோயாளியின் இறுதிச் செயலைப் பொறுத்து இது வேறுபடும். நோயாளியின் விருப்பப்படி டாக்டர் விஷ ஊசியை ஏற்றினால் அது கருணைக் கொலை. டாக்டர் கொடுக்கும் விஷத்தை நோயாளியே உட்கொண்டால் அப்போது டாக்டர் 'தற்கொலைக்கு உதவுகிறார்'!

நெதர்லாந்து, பெல்ஜியம், ஒரேகான் - இந்த மூன்று இடங்களில்தான் கருணைக் கொலை சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டிருக்கிறது. நெதர்லாந்தில் இந்த இரண்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. பல வருடங்களாக கருணைக் கொலை பரவலாக அங்கு நடைபெற்றாலும், 2002ல்தான் இது சட்டமானது.

படுக்கையில் வீழ்ந்த தன் நோயாளி அம்மாவை போஸ்ட்மா என்ற டச்சு மருத்துவர் கருணைக் கொலை செய்தார். வழக்கம் போல் இதை அங்கு யாரும் கண்டுகொள்ளாமல் போயிருப்பார்கள். ஆனால், தனது செயலை பகிரங்கப்படுத்தினார் அந்த மருத்துவர். இதற்குக் காரணம் கருணைக் கொலை தொடர்பான சட்டம் மாற்றப்பட வேண்டும் என்ற அவரது எண்ணம்தான். அச்சமயத்தில், அந்த காலகட்டத்தில், (1973) கருணைக் கொலைக்கு அதிகபட்சமாக 12 வருட சிறைதண்டனை உண்டு என்றாலும் நீதிமன்றம் அவருக்கு ஒரு வார சிறைதண்டனை மட்டுமே அளித்தது. கருணைக் கொலை தொடர்பான விவாதங்கள் சூடு பெற்றன. நாளடைவில் சட்டம் மாற்றப்பட்டது. (பெல்ஜியத்திலும் 2002வில்தான் இது சட்டமானது என்பது குறிப்பிடத்தக்கது.)

பலரும் ஆஸ்திரேலியாவில் கருணைக் கொலை சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக நினைக்கிறார்கள். ஆனால் அப்படி அல்ல. 1995ல் அந்த நாட்டின் வடக்கு எல்லைப் பகுதியில் இது சட்டமானது என்றாலும் ஆஸ்திரேலிய மருத்துவக் குழு இதை எதிர்த்ததால் அந்த சட்டம் வாபஸ் பெறப்பட்டது.

சுவிட்சர்லாந்து சட்டம் 'சுய நலத்திற்காக' கருணைக் கொலை செய்பவர்களுக்கு மட்டும் ஐந்து வருட அதிகபட்ச தண்டனை அளிக்கிறது. அதே சமயம் சுயநலமற்ற கருணைக் கொலை சட்டத்தால் அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும் அது தண்டனைக்கு உரியதல்ல!

இதையும் படியுங்கள்:
கருணைக் கொலையா? கருணையுடன் கொலையா? 'ஜொராயா டெர் பீக்' கோருவது என்ன? ஏன்?
Euthanasia

பொதுவாக கருணைக் கொலை எப்படி நடக்கிறது?

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிட்செக் (NITSCHKE) என்ற டாக்டர் கருணைக் கொலையின் தீவிர ஆதரவாளர். அவர் இந்தச் செயலை இப்படி செயல்படுத்தினார்.

நோயாளியின் சிரையில் ஒரு குழாய் செருகப்பட்டிருக்கும். எதிரில் உள்ள கணினியை நோயாளி இயக்க வேண்டும். அடுத்தடுத்து மூன்று கேள்விகள் கணினித்திரையில் தோன்றும்.

1. இப்போது ''ஆமாம்'' என்ற பொத்தானை நீங்கள் அழுத்தினால் உங்களுக்கு விஷ மருந்து அளிக்கப்பட்டு நீங்கள் இறந்து விடுவீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

2. அடுத்து தோன்றப்போகும் அறிவிப்பில் ''ஆமாம்'' என்ற பொத்தானை அழுத்தினால் நீங்கள் இறந்து விடுவீர்கள் என்பதை அறிந்து வைத்திருக்கிறீர்களா?

3. அடுத்த பதினைந்து நொடிகளில் உங்களுக்கு விஷ ஊசி மருந்து செலுத்தப்படும். சரியா?

மூன்று கேள்விகளுக்கும் தங்கள் விரல் அசைவின் மூலம் ஆமாம் என்று பதிலளித்தால் நோயாளியின் உடலில் விஷம் ஏற்றப்பட்டு (இதற்கான ப்ரோக்ராம் தயார் நிலையில் இருக்கும்) அவர் இறப்பார்.

அதாவது டாக்டர் நேராக விஷ மருந்து ஏற்றவில்லையாம்!

இப்போதெல்லாம் மேலைநாடுகளில் சிலர் உயில் எழுதி வைக்கிறார்கள். அதில் குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மேல், தான் கோமாவில் விழுந்தாலோ, தன் உடல்நிலையை மேம்படுத்த முடியாது என்று டாக்டர்கள் கை விரித்து விட்டாலோ கருணைக் கொலை மூலம் தங்கள் உயிரை பறித்துக்கொள்ள வேண்டும் என்று அந்த உயில்களில் குறிப்பிடுகிறார்கள். இதை அந்த நாட்டு சட்டங்கள் ஏற்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com