இந்திய விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்களும் பங்கேற்கலாம் என கடந்த 2020ம் ஆண்டு ஒன்றிய அரசு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து, விண்வெளி துறையில் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகின. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டை வரும் 12 முதல் 16ம் தேதிக்குள் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்திய வரலாற்றில் முதல் முறையாக இந்திய தனியார் நிறுவனம் உருவாக்கிய ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ நிறுவனம் உருவாக்கி உள்ள விக்ரம்-எஸ் ராக்கெட் வரும் 12 முதல் 16ம் தேதிக்குள் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ஏவ திட்டமிட்டப்பட்டுள்ளது.
இது குறித்து ஸ்கைரூட் நிறுவன சிஇஓ நாகா பரத் தகா கூறுகையில்...
‘‘காலநிலையைப் பொறுத்து வரும் 12ல் இருந்து 16க்குள் விக்ரம்-எஸ் ராக்கெட் விண்ணில் ஏவப்படும். இத்திட்டத்திற்கு பிரரம்ப் (தொடக்கம்) என பெயரிட்டுள்ளோம். விலைகுறைவான செயற்கைக்கோள்களை குறைந்த செலவில் அனுப்புவதற்கு ஸ்கைரூட் நிறுவனம் உதவும்’’ என்றார்.
இந்திய விண்வெளி திட்டத்தின் நிறுவனரான விக்ரம் சாரபாய் நினைவாக ராக்கெட்டிற்கு விக்ரம் என பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.