கிராமத்து நினைவலைகள்: வைகாசிப் பொங்கலும், காளியம்மன் அருளும்!

Village Festival - வைகாசிப் பொங்கல்
Village Festival - வைகாசிப் பொங்கல்AI Image
Updated on
Kalki Strip
Kalki Strip

கதைக்கலாம் கலக்கலாம் வாங்க… கல்கி ஆன்லைன் வழங்கும் எழுத்து  மேடையில் “எங்க ஊர் சாமி எனும் தலைப்பில் உங்க ஊர் சாமியின் மகிமையை சொல்லுங்க’’ன்னு கேட்டிருந்தோம். அதில் தேர்வான சுவாரஸ்யமான கட்டுரைகளில் மூன்றாவது கட்டுரை இதோ…

விருதுநகர் மாவட்டத்தில் தியாகராஜபுரம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து பதினெட்டு வயதுவரை அங்கிருந்தேன். ஊருக்குள் நுழையும் இடத்தில் அமைந்துள்ளது காளியம்மன் கோவில். அங்குள்ள அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். அவளைத்தவிர வேறு எந்தக் கடவுளுக்கும் அங்கு சன்னதி கிடையாது.

அங்கிருந்து சிறிது தூரத்தில் பிள்ளையார் கோவில் ஒன்று உண்டு. வருடம்தோறும் வைகாசி மாத பௌர்ணமி தினத்தை ஒட்டி அம்மன் கோவிலில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்படும். இரண்டு வாரத்திற்கு முன்பே கோவில் முழுக்க பெயிண்ட் அடிக்கும் வேலை ஆரம்பித்துவிடும். சிறுவர் சிறுமிகளுக்கெல்லாம் பொங்கல் விழா நெருங்கி விட்டதென்று புரிந்துவிட, அன்று முதலே கொண்டாட்டம்தான்.

Village Festival - வைகாசிப் பொங்கல்
ஜெயகாந்தி மகாதேவன்

விழா திங்கட்கிழமை ஆரம்பித்து புதன்கிழமை முடிவுறும். கிராமத்தில் வளர்ந்த பல பெண் பிள்ளைகள், வெவ்வேறு கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு மணமுடித்து சென்றிருப்பர். அவர்கள் எல்லோரும் பொங்கலுக்கு முன்னதாகவே ஊருக்கு வந்துவிடுவார்கள்.

மாவிளக்கு ஊர்வலமும் வைகாசிப் பொங்கல் திருவிழாவின் சிறப்புகளும்:

எனது மூத்த சகோதரிகள் இருவர் முறையே அருப்புக் கோட்டையிலிருந்தும், சென்னையிலிருந்தும் தவறாமல் வந்து விடுவார்கள். இரண்டு சிஸ்டருமே சினிமா பைத்தியங்கள். அம்மா சமைத்ததை சாப்பிட்டுவிட்டு மொட்டை மாடிக்கு சென்று விடியும்வரை சினிமா கதை பேசியே நேரத்தை கழித்துவிடுவார்கள்.

ரெகார்ட் பிளேயர், ஸ்பீக்கர் செட்டெல்லாம் ஊருக்கு வந்து பக்திப் பாடல்களை ஒலி பரப்பிக்கொண்டிருக்க மற்றொரு பக்கம் திறந்த வெளி அரங்கில் கட்டபொம்மன், பவளக்கொடி நாடகங்கள் பாவைக் கூத்து போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும். கன்னிப் பெண்களை சைட் அடிக்கும் காளையர்கள் மற்றும் குட்டைப் பாவாடையணிந்து கரகாட்டமாடும் பெண்களும் கவனத்தை ஈர்ப்பதுண்டு. செவ்வாய்க்கிழமை இரவு பெண்கள் அனைவரும் மாவிளக்கு ஏந்தி பிள்ளையார் கோவிலுக்கு ஊர்வலமாக செல்வோம். அங்கே பூஜையை முடித்துவிட்டு அம்மன் கோவிலுக்கு வருவோம். மாவிளக்கு ஒளியில் காளியம்மன் முகம் ஜொலி ஜொலிக்க பிரமாதமாக பூஜை நடைபெறும்.

Village Festival - வைகாசிப் பொங்கல்
Village Festival - வைகாசிப் பொங்கல்AI Image

நெஞ்சம் உருகவைக்கும் காளியம்மன் அருள்வாக்கும் வைகாசிப் பொங்கல் நிறைவும்:

மறுநாள் கோவிலின் முன், அலங்கரிக்கப்பட்ட பந்தலுக்குள் அனைத்து வீட்டாரும் நெய்யொழுகும் பொங்கலிட்டு அம்பாளுக்கு படையலிடுவர். பூசாரி பூஜை ஆரம்பிக்கும் முன் அங்குள்ள பெண்களில் ஒருவர் மீது சாமி வந்து அவர் ஆட ஆரம்பித்துவிடுவார்.

அவரிடம் பலரும் தங்கள் வீட்டுப் பிரச்னையை சொல்லி தீர்வு கேட்பர். அந்த அம்மாவும் குறி சொல்வது போல் பதிலளிப்பார். சுமார் முக்கால் மணி நேரம் அங்கே நிசப்தமான அமைதி நிலவும். அம்மன் அருள் வாக்கை கேட்டு அதை அப்படியே நிறைவேற்றுவதில் அனைவரின் கவனமும் நிலைத்திருக்கும். இதுதான் விழாவின் ஹைலைட் எனலாம்.

பின்னர் அந்தப் பெண் மயக்கமடைந்துவிட, அவளை தண்ணீர் தெளித்து எழுப்புவார்கள். மேற்கொண்டு பூஜை சிறப்பாக நடைபெற்று, அனைவரும் வீடு திரும்புவோம். அன்றிரவு பெண்கள் தலையில் முளைப்பாரி சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்று பூஜை செய்வார்கள். விழா முடிந்து விருந்தினர்கள் விடை பெற்ற பின் ஊரே வெறிச்சோடிப் போகும். மற்ற நாட்களில் பூசாரி தினமும் சாயங்காலம் கோவிலை சுத்தப்படுத்துவார்.

இதையும் படியுங்கள்:
உருவ வழிபாடு தேவையா, இல்லையா? - பாபா கொடுத்த 'குதிரை' உதாரணமும் ஆன்மீக உண்மையும்!
Village Festival - வைகாசிப் பொங்கல்

பச்சரிசியை குழைய வேகவைத்து தட்டில் வைத்து நடுவில் ஒரு அச்சு வெல்லத்தை பதித்து அம்மனுக்கு நைவேத்யம் படைத்து பூஜிப்பார். இந்த எளிமையான பூஜையை மனமுவந்து ஏற்றுக் கொள்ளும் காளியம்மா, எங்க ஊர் வாரிசுகள், வெளியூர் மற்றும் வெளி நாடுகளில் சென்று ஆல மரம்போல் வேரூன்றி விழுது பரப்பி செழித்து வாழ வழி காட்டிக்கொண்டிருக்கிறாள். வைகாசிப் பொங்கல் விழாவில் அனைவரும் ஒன்றுகூடி அவளை ஆராதிப்பதே அவளுக்கு நாங்கள் செய்யும் கைமாறாகும்.

நவீன நகரத்து அவசர வாழ்க்கையில் நாம் தொலைத்து விட்ட கிராமத்து உறவுகளின் பிணைப்பையும், மண்ணின் மண மாறாத பாரம்பரிய திருவிழா வழிபாடுகளின் ஆன்மீக சக்தியையும் மீண்டும் உங்கள் நெஞ்சார உணர்ந்து, உங்கள் சொந்த ஊர் நினைவுகளில் மூழ்கித் திளைக்கும் உன்னதமான மன அமைதியைப் பெறலாம்.

logo
Kalki Online
kalkionline.com