Vijay Sathish
Vijay Sathish

"விஜய்க்கு நான் தேவையில்லை" - 'வித்தைக்காரன்' சதீஷ் நேர்காணல்!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் கதாநாயகர்களாக நடித்து வருவது இன்றைய ட்ரெண்ட். அந்தப் பட்டியலில் சமீபத்திய சேர்க்கை சதீஷ்.

சதீஷ் ஹீரோவாக நடித்து, சென்ற வாரம் வெளிவந்துள்ள ‘வித்தைக்காரன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. ஹீரோ இமேஜ்க்கான அனுபவம் எப்படி இருந்தது? சதீஷிடம் பேசினோம்.

Vithaikkaaran movie hero Sathish
Vithaikkaaran movie hero Sathish
Q

படத்தில் மேஜிக் செய்பவராக நடித்துள்ளீர்களே... உங்களுக்கு மேஜிக் தெரியுமா?

A

இந்தப் படத்தின் கதையை டைரக்டர் வெங்கி சொல்லும்போது, இது ஒரு சவாலான, அதேசமயம் நடிக்க ஸ்கோப் உள்ள கேரக்டர் என்பதைப் புரிந்துகொண்டேன். மேஜிக் விஷயங்கள் சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக வெங்கி சில மேஜிக் ஆர்டிஸ்ட்களை வரவழைத்து எனக்கு மேஜிக் கற்றுத் தந்தார். சிறு வயதில் மாஜிக் பார்க்கும்போது பிரமித்துப் போனதுண்டு. கற்றுக்கொண்ட பின்புதான் தெரிந்தது இது எல்லாம் சில ட்ரிக்ஸ்தான் என்பது.

Q

வில்லன் ஆனந்த ராஜ் உங்களுடன் சேர்ந்து, காமெடி செய்யும்போது பயந்தீர்களா? சிரித்தீர்களா?

A

ஆனந்த்ராஜ் சாரை பார்க்கும்போது இன்று வரை எனக்கு பயம்தான். சிறு வயதில் ‘புலன் விசாரணை’ படம் பார்க்கும்போது ஆனந்தராஜ் சார் படத்தில் பிணத்தை வீட்டில் வைத்து புதைக்கும் காட்சியைப் பார்த்து பயந்துள்ளேன். நான் நடிக்க வந்ததும், ‘நானும் ரௌடிதான்’ படத்தில் ஆனந்தராஜ் சார் செய்யும் காமெடியைப் பார்த்து, எனக்கு போட்டியாக வந்து விடுவாரோ என்று பயந்தேன். ஆக மொத்தம், ‘புலன் விசாரணை’ முதல் ‘வித்தைக்காரன்’ வரை அண்ணனைப் பார்த்து பயந்துகொண்டுதான் இருக்கிறேன்.

Actor Sathish
Actor Sathish
Q

ஒரு தலை காதல் கான்செப்ட்... சொந்த அனுபவம் ஏதாவது...?

A

எனக்கு டி.ராஜேந்திர் சார் எடுத்த ‘ஒரு தலை ராகம்’ படம் பிடிக்கும் . ஆனால்,  ஒரு தலை, இரு தலை காதல் எல்லாம் வாழ்க்கையில் கிடையாது. காதலிக்க வேண்டிய வயதில் சேலத்தில் இருந்து சென்னை வந்து சினிமாவில் போராடி வெற்றி பெறவே நேரம் சரியாக இருந்தது. எனவே, காதலிக்க நேரமில்லை.

Q

நீங்கள் சந்தானத்திற்குப் போட்டி என்று மீடியா பேசுகிறதே?

A

என்னடா வில்லங்கமா ஏதும் கேள்வி கேட்கலேயேன்னு பார்த்தேன். சந்தானம், நான் நடிக்க வருவதற்கு முன்பிருந்து சினிமாவில் நடிக்கிறார். எனக்கு அவர் போட்டி கிடையாது. எங்க இரண்டு பேர் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் தேவை இருப்பதாக நினைக்கிறேன்.

Vithaikkaaran movie hero Sathish
Vithaikkaaran movie hero Sathish
Q

காமெடி ஹீரோவாக நடிக்கிறதால, இனி மத்த ஹீரோ படங்களில் காமெடியனாக நடிக்க மாட்டீங்களா?

A

சார் நீங்க ஏதாவது இப்படி கிளப்பிவிடாதீங்க. நடிக்க வந்தபிறகு காமெடியன் யார், ஹீரோ யார் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. நான் ஒரு படத்திற்குத் தேவை என அப் பட  டைரக்டர் நினைத்தால் அந்தப் படத்தில் நான் கண்டிப்பாக இருப்பேன்.

Q

விஜயுடன் சேர்ந்து சில படங்கள் நடித்துள்ளீர்கள். விஜய் - சதீஷ் கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. சமீப கால படங்களில் நீங்கள் இல்லேயே, ஏன்?

A

விஜய் சார் சமீப காலமாக ஆக்ஷன், கிரைம் கதைகளில் நடிக்கிறார். இக்கதைகளில் காமெடிக்கு முக்கியத்துவம் இல்லாததால் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைக்காமல்  இருக்கலாம். விஜய் சார் இன்னும் ஒரு படத்தில் நடித்துவிட்டு அரசியலுக்கு வரப்போவதாக சொல்லி இருக்கிறார். தளபதியின் கடைசி படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்புக்  கிடைத்தால் கண்டிப்பாகப் பெரும்பாக்கியமாகக் கருதுவேன்.

sathish vijay
sathish vijay
Q

விஜய்யிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம் எது?

A

‘கோட்’ பட ஷூட்டிங்கில் விஜய் சாரை  மீட் செய்தேன். என் கையைப் பிடித்துக்கொண்டு  "நீங்க பண்ண கான்ஜுரிங் கண்ணப்பன் நல்ல சக்ஸ்சஸ்ன்னு கேள்விப்பட்டேன். ரொம்ப சந்தோஷம் "என்றார். ஒரு பெரிய மாஸ் ஹீரோ என்னை மாதிரி வளர்ந்துவரும் நடிகரின்  படத்தை மனம் திறந்து பாராட்டுவது மிகவும் அரிதான விஷயம். தளபதியிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் மனம் திறந்து பாராட்டுவதுதான்.

Q

விஜய்க்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்திற்குச் செல்வீர்களா?

A

விஜய் சார் ஒரு இடத்திற்கு போனால் அவரை பார்க்க மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கும். தேர்தல் நேரத்தில் விஜய் சார் பிரச்சாரத்திற்குச் சென்றால் அவர் பேச்சைக் கேட்க மக்கள் கூடுவார்கள். விஜய் சார்க்கு வராத கூட்டமா என் முகத்திற்கு வரப்போகிறது?
எனவே, விஜய் சார் பிரச்சாரத்திற்கு நான் தேவையில்லை.

Q

கைவசம் இருக்கும் படங்கள்?

A

அடுத்து ‘சட்டம் என் கையில்’ என்ற ஒரு சீரியஸ் படம் பண்ணப்போறேன். வித்தியாசமாக ட்ரை பண்றேன். பாத்துட்டு சொல்லுங்க.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com