முட்டையிலுள்ள ஊட்டச்சத்து பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். முட்டை ஓடுகளும்கூடப் பலவிதத்தில் ஏற்கனவே பயன்பட்டு வருகின்றன.
முட்டை ஓடுகளால் வேறொரு ஒரு வித்தியாசமான பயன்பாடும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவிலுள்ள மாஸசூஸெட்ஸ் லோவெல் பல்கலைக்கழகத்தில் ஓர் ஆராயச்சிக் குழு செய்த முடிவு மருத்துவ உலகில் புதியதொரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. முட்டை ஓடுகள் புதிய, உறுதியான எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும் என்று அங்குள்ள விஞ்ஞானிகள் குழு ஒன்று கண்டுபிடித்திருக்கிறது.
எலும்புகள் பல காரணங்களால் பாதிக்கப்படலாம். மூப்படைவதால் எலும்புகளின் அடர்த்தி குறைந்து அவை பலவீனம் அடையலாம். விபத்துக்களின் காரணமாக ஏற்படும் காயங்களால் எலும்புகள் பாதிக்கப்படலாம். எல்லைகளைக் காவல் காக்கும் ராணுவ வீரர்களுக்குத் துப்பாக்கிக் குண்டுகளால் எலும்புகளில் சேதம் ஏற்படலாம். புற்றுநோய் காரணமாகவும் எலும்புகள் பாதிப்படையலாம்.
இப்படி பாதிப்புகளுக்கு உள்ளாகும் எலும்புகளை ரிப்பேர் செய்வதற்கான ஓர் எளிய முறையை மேற்படி ஆராய்ச்சிக் குழு கண்டுபிடித்திருக்கிறது.
நன்கு பொடியாக்கப்பட்ட முட்டை ஓடுகளை ஒரு ஹைட்ரோஜெல் கலவையோடு குறிப்பிட்ட விகிதத்தில் இணைய வைத்தால் பரிசோதனைச் சாலையிலேயே அது ஒரு குகை போன்ற உருவத்தை எடுக்கிறது. இதனுள் வைக்கப்படும் பாதிக்கப்பட்ட எலும்பு மிகச் சிறப்பாக வளர வாய்ப்பு உண்டாம். நோயாளியின் உடலிலுள்ள எலும்பு செல்களை எடுத்து இன்குபேட்டரில் மேற்படி கலவைக்கிடையே வளர வைத்து புதிய எலும்பு நன்கு உருவானபின் அதை நோயாளியின் உடலுக்குள் பொருத்திவிடலாம் என்கிறது இந்த ஆராய்ச்சி.
முட்டைகளின் ஓடுகளில் முக்கியமாக இருப்பது கால்ஷியம் கார்பனேட். இதை ஹைட்ரோஜெல் கலவையோடு கலக்கும்போது எலும்பு செல்கள் நன்கு வளர்கின்றன. சீக்கிரம் உறுதியாகின்றன. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதி வெகுவேகமாக ஆறுகிறது. நோயாளியின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட செல்களைக் கொண்டுதான் புதிய எலும்பு உருவாகிறது என்பதால் புதிய எலும்பை நம் உடல் வேற்றுப் பொருளாக எண்ணி ஒவ்வாமை கொள்ளாது.
இதே வழிமுறையைக் கொண்டு குருத்தெலும்புகள், பற்கள் மற்றும் தசை நார்களையும் உருவாக்கி வளர வைக்கமுடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
எவற்றை வீண் பொருள் என்று நினைக்கிறோமோ, அவற்றால் பல்வேறு பயன்களை அறிவியல் கண்டுபிடிக்கிறது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான டன் எடைகொண்ட முட்டை ஓடுகளைத் தூக்கி எறிகின்றனர். அவற்றைச் சரியான முறையில் பயன்படுத்தினால் நல்லதுதானே!