
இணையதளங்களில் பயனராக (user) உள்நுழையும் போது, நம்மை சோதிக்க, ஒரு படத்தைக் காட்டி, அதிலுள்ள வார்த்தைகளை உங்களை மறுபடி உள்ளீடு (input) செய்ய சொல்வதைக் கண்டிருப்பீர்கள் அல்லது ஒரு சிறிய கூட்டல் கணக்கினைக் கொடுத்து, அதன் விடையை உள்ளீடு செய்யுமாறு சொல்வதைக் கண்டிருப்பீர்கள். எதற்கு இந்த கூடுதலான பரிசோதனை என்று தோன்றியிருக்கலாம். இந்த கூடுதலான பரிசோதனைக்கு காப்ட்சா (CAPTCHA) என்று பெயர்.
CAPTCHA - Completely Automated Public Turing Test to Tell Computers and Humans Apart.
தமிழில், மனிதர்கள் மற்றும் கணினிகளை வேறுபடுத்திக் காட்டும், முழுவதுமாக தானியங்கி முறையில் செயல்படும் டூரிங் சோதனை
காப்ட்சா உருவான கதை;
இங்கிலாந்தில் இரண்டாம் உலகப்போரின் போது, ஜெர்மானிய நாஜிக்களின் ரகசிய சங்கேத செய்திகளை புரிந்து கொண்டு, இங்கிலாந்து மற்றும் நேச நாடுகள் போரில் ஜெயிக்க உதவியவர் அலன் டூரிங் (Alan Turing). அவர் பிரபல கணினி மேதை. அவர் இயந்திரங்கள் மனிதர்களைப் போன்று அறிவாட்சித்தரம் பெற்றிருக்க முடியுமா என்பதற்கு டூரிங் சோதனை (Turing Test) என்ற ஒன்றைக் குறிப்பிட்டார். அதில், ஒரே கேள்வியை மனிதன் மற்றும் இயந்திரத்திற்கு எழுப்பி, அதன் மூலம், கிடைக்கும் பதிலைக் கொண்டு, இயந்திரத்தினால் மனிதனைப் போல, வேஷமிடமுடியுமா (Imitate) என்று கண்டுபிடிக்கலாம் என்றார்.
அதுதான் இன்று கணினி உலகில், காப்ட்சா(CAPTCHA) என்று அழைக்கப்படுகிறது. இது 2000 ஆம் ஆண்டு, லூயிஸ் வான் ஆன் (Luis Von Ahn) மற்றும் அவரது பேராசிரியர் மேனுவல் பிளம் (Manuel Blum) அவர்களால் , கணினிகளை மற்றும் கணினி வலையமைப்புகளை(computer network), தானியங்கி நிரல்களின்(automated programs) தாக்குதலிலிருந்து காப்பாற்ற கண்டுபிடிக்கப்பட்டது.
இயந்திர செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) பெருகியுள்ள இந்தக் காலத்தில், இந்த காப்ட்சா தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. திருடர்களைக் கொண்டு, பூட்டு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதைப் போல், இதுவும் தொடர்ந்து கடினமாகிக் கொண்டே வருகிறது.
ஏன் சில இணையதளங்கில் காப்ட்சா எளிமையாகவும், சில இணையதளங்கில் கடினமாகவும் உள்ளது என்ற கேள்வி எழலாம். இது ஒவ்வொரு இணையதளத்தின் நிரலாளர்கள் (programmers) மற்றும் இணையதளத்தில் கட்டமைப்பு நிபுணர் குழு (architects) எடுக்கும் முடிவு. சில இணையதளங்களில் ஏற்கனவே பல்வேறு சோதனைகள் உள்ளன. கடவுச்சொல் (password), ஒருமுறை கடவு எண் (one time password) போன்றவைகள் உள்ளன. இணையதளம் Https (Hypertext transfer protocol secure) என்ற அதிக பாதுகாப்பு அம்சத்தில் இயங்குகிறது. இந்த காப்ட்சா என்பது இன்னொரு அதிகப்படியான பாதுகாப்பு அம்சம் மட்டுமே. இதன் காரணமாக, இது அந்த இணையதளத்தில் எளிமையாக இருக்கலாம். வாடிக்கையாளர்களில் வயதானவர்களுக்கு எளிமைக்காகவும் இருக்கலாம். மற்ற இணையதளங்களில், மற்ற பாதுகாப்பு அம்சங்கள் இன்றி இருந்து, ஒருவேளை அவர்கள் தானியங்கி நிரல்களால் பாதிக்கப்பட்டால், ஏற்படும் விளைவு அதிகமாக இருக்கலாம். அதன் காரணமாக அவர்கள் கடினமாக வைத்திருக்கலாம். தானியங்கி நிரல், அதிக வேலையாட்களைக் கொண்டு (worker processes), சிறிய நேரத்தில், ஒரு இணையதளத்தையே தரைமட்டமாக்க முடியும். வடிவேல் சொல்வதைப் போல், பில்டிங் ஸ்டார்ங் , பேஸ்மண்ட் வீக் என்பதைப் போல், ஒரு இணையதளத்தின் அடித்தளம் எளிதாக தகர்க்கப்படக் கூடியதாக இருந்தால், அதனைப் பாதுகாக்க கடினமான காப்ட்சா கொண்டிருக்கலாம்.
இது ஒவ்வொன்றும் அந்தந்த இணையதளங்களின் நிரலாளர்கள் எடுக்கும் முடிவு. கூகுள் நிறுவனத்தின் ரீகாப்ட்சா (Recaptcha) போன்றவை, மிகவும் கடினமானவை. அவை பல்வேறு இணையதளங்களில் பயன்படுத்தப் படுகின்றன. உங்களது வீட்டிற்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் பூட்டு , உங்களது முடிவு. இதனை மற்றவர்கள் தடுக்க முடியாது. பூட்டு சரியில்லை யென்றால், அதற்கான பலன்களை நீங்களே அனுபவிக்க நேரிடும்.
எனவே, கடுமையான காப்ட்சாவை வைத்திருப்பது இணையதளத்திற்கும், நமது தரவுகளுக்கும் நல்லது.
இனிமேல், இணையதளத்தில் காப்ட்சாவைப் பார்த்தால், அதற்கு நன்றி கூறுங்கள். அது நம்மை காப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு பூட்டு.
நமக்கு பாதுகாப்பினைக் கொடுக்கும் காப்ட்சா விற்கு நன்றி.