
சமீபமாக மூன் லைட்டிங் என்ற வார்த்தை பரவலாகச் செய்திகளில் பேசப்படுகிறது. அது என்ன?
பிரதானமாக ஒரு பணியை செய்து கொண்டிருக்கும்போது மற்றொரு பணியை செய்வதற்கு பெயர் ஆங்கிலத்தில் 'மூன்லைட்டிங்' எனப்படுகிறது. சில நேரம் அந்த இரண்டாவது பணியை ரகசியமாக செய்வதும் இதில் அடக்கம். அதாவது, ஒரு நபர் ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களில் பகுதி நேரமாகவோ, வார இறுதியிலோ பணி புரிவதை தொழில்நுட்பத் துறையில் “மூன் லைட்டிங்” என்று சொல்லுகிறார்கள்.
சரி அதெற்கன்ன இப்போது என்கிறீர்களா?
“மூன் லைட்டிங் முறையில் பணிபுரிந்தால், பணி நீக்கம் செய்யப்படும்” என்று விப்ரோ, இன்ஃபோசிஸ், ஐ.பி.எம். நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்கள்.இந்த வரிசையில் மேலும் பல நிறுவனங்கள் இணைய வாய்ப்புள்ளது. அதேபோல இம்முறைக்கு ஆதரவு அளிக்கும் நிறுவனங்களும் உள்ளன.
மூன் லைட்டிங் முறைக்குப் பல நிறுவனங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. எனவே, இந்த மூன்லைட்டிங் குறித்து ஐடி பெரு நிறுவனங்கள் எச்சரித்துள்ள நிலையில் இதுகுறித்த பரவலான விவாதங்கள் எழுந்துள்ளன.
இப்படி எச்சரிக்கை விடுத்துள்ள முன்னணி மென்பொருள் நிறுவனமான விப்ரோ, செப்டம்பர் மாதம் இம்மாதிரி தங்களது போட்டி நிறுவனங்களுக்காகப் பணி செய்த 300 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியதாக அறிவித்தது. விப்ரோ தலைவரான ரஷத் ப்ரேம்ஜி, மூன் லைட்டிங்கை பகிரங்கமாக தொடர்ந்து விமர்சித்து வருகிறார். ஆகஸ்டு மாதம் அவர் இதுகுறித்து பதிவிட்ட ட்வீட் ஒன்றில், "இது ஒரு ஏமாற்று வேலை. அவ்வளவுதான்" என தெரிவித்திருந்தார்.
ஏன் இதைச்செய்கிறார்கள்?
மூன் லைட்டிங்கில் ஏன் ஈடுபடுகிறார்கள் என்பதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு என்கின்றனர் நிபுணர்கள். இந்த நிச்சயமற்ற பணிச் சந்தையில் சீரான வருவாயைப் பெற இவ்வாறு இரண்டாம் பணியில் ஈடுபடுகின்றனர் என்கிறார்கள் சிலர். வேறு சிலரோ தங்களுக்கு பிடித்தமான வேலையை செய்ய இவ்வாறு இரண்டாம் பணியில் ஈடுபடுகின்றனர்.
"உங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் உங்களுக்கு பிடித்தமான வேலையை செய்து அதற்கான ஊதியத்தையும் பெறுகிறீர்கள் என்பதற்கும் முழு நேரமாக இரண்டாவதாக ஒரு பணியில் ஈடுபடுவதற்கும் வித்தியாசம் உள்ளது" என்கிறார்கள் மனிதவள மேம்பாட்டு வல்லுனர்கள்.
மூன் லைட்டிங் என்பது இந்தியாவிற்கு புதிதான ஒன்று இல்லை என்றாலும், கொரோனா பெருந்தொற்று சமயத்தில்தான் இந்த டிரண்ட் அதிகரித்தது. "அந்த சமயத்தில் மக்கள் அதிகம் வீட்டிலிருந்து பணி செய்தனர். அதனால், அவர்களால் பல பணிகளை ஒரே சமயத்தில் செய்ய முடிந்தது" என்கிறார் ஒரு பெரும் நிறுவனத்தின் எச்.ஆர்.டைரக்டர் .
ஐடி துறையில் இந்த மூன் லைட்டிங் என்பது பொதுவான ஒன்றாக உள்ளது . ஏனென்றால் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் நிறுவனர்கள் தங்களின் முழு நேர பணியின்போதுதான் இதற்கான திட்டங்களை வகுத்தனர். அதற்கு ஒரு சர்வதேச எடுத்துக்காட்டு ஸ்டீவ் வோஸ்னியாக். இவர் ஹெச்.பி. நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸை வடிவமைத்தார்.
தாங்கள் செய்துவரும் முதன்மைப் பணியை விட்டுவிடவேண்டும் என்பதற்காக பலர் மூன்லைட்டிங்கில் ஈடுபடுவதில்லை. பணி மாறுவது அவர்களுக்கு வேறு அனுபவங்களை தருகிறது. திறனை வளர்த்துக்கொள்ள உதவுகிறது. பல்வேறு வாய்ப்புகள் குறித்து தெரிந்தபின் சிறந்த ஒன்றை தேர்வு செய்யலாம்," என்கிறார். இப்படி மூன்லைட்டிங் செய்துகொண்டிருக்கும் பெண்... மூன்லைட்டிங் குறித்து ஐடி துறையில் பெரிதாக பேசப்படும் அதேநேரத்தில் வீட்டிலிருந்து பணி செய்யக்கூடிய சாத்தியமுள்ள துறைகளில் தங்களுக்கு ஏற்றாற்போல பணி நேரத்தை வழங்க வேண்டும் என்று கோருகின்றனர் ஊழியர்கள்.
"பணி நேரத்தை தாண்டி நான் என்ன செய்கிறேன் என்பது அவர்களுக்கு தேவையில்லாத ஒன்று" என்பது இப்படி மூன்லைட்டிங் செய்பவர்களின் வாதம்.
ஆனால், “அது அனைத்தும் நீங்கள் நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை பொறுத்தது” என்கிறார் ஒரு மூத்த எச்.ஆர். அதிகாரி
"உங்கள் ஒப்பந்தம் நீங்கள் வேறு வேலையை செய்யக் கூடாது என்று கூறினால் நீங்கள் அதை செய்யக்கூடாது. மேலும் ஊழியர்களுக்கு அவர்கள் உரிமை குறித்து தெரியும் வேளையில் அவர்களின் கடமைகள் குறித்தும் தெரிந்திருக்க வேண்டும்" என்கிறார் அவர்.