சிவபெருமானைப் போற்றும் ‘நமசிவாய’ என்ற மந்திரச் சொல்லின் பொருள் என்ன?

சிவபெருமான்...
சிவபெருமான்...

"நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே".

நமசிவாய -  எனும் திருவைந்தெழுத்து சிவபெருமானைப் போற்றிப் பாடும் மந்திரச் சொல்லாகும்.

நமச்சிவாய, சிவாயநம என இரண்டு வடிவங்களில் போற்றப்பட்டாலும் இதன் சரியான பொருள் நம்மில் பலர் அறியாதது!

வாருங்கள்... விளங்கிக் கொள்வோம்!

வடமொழியில் ' நம: ' என்று எழுதப்பட்டு
நமஹ - என உச்சரிக்கப்படும் இச்சொல்லின் மூலம் தமிழ் மொழி ஆகும்.

”சுமந்து மாமலர் நீர்சுடர் தீபங்கொண்டு
அமர்ந்து வானவர் வானவர்கோனொடும்
நமன்றெ ழும்திரு வேங்கடம் நங்கட்கு
சமன்கொள் வீடு தருந்தடங் குன்றமே” - என நம்மாழ்வார் அளித்த திருவாய்மொழியில் இடம்பெற்ற இப்பாடலில் ’நமன்று எழும்’ என்பது ’வணங்கி யெழும்’ என்ற பொருள் குறித்ததாகும்.

நமல் > நமன்று என்றால் 'வணங்கி' என்பது பொருள்.
நமல் > நமல்தல் > நமலுதல் = வணங்குதல், தொழுதல்.
நமல்க/ நமலுக = வணங்குக , போற்றுக (போற்றி).
நமல் = வணக்கம்.

நமர்த்தல் /நமுத்தல் = குழைதல், உடலை வளைத்து வணங்குதல், கை கூப்பி தொழுகை செய்தல்.
நமக்கரித்தல் = வணங்குதல்,
ஒரு தெய்வத்திற்கான பயபக்தியின் முறையான வெளிப்பாட்டை உருவாக்கும் வழிபாடுகள், செயல்கள் / சடங்குகள்.

நமகம் = வழிபாட்டுக்குரிய மந்திரங்கள்.
நமசிதன் = வழிபடத்தக்கவன்.
நமதன் = ஆண்டவன்.
திருவரங்கத்துத் திருமாலை – ’நம்பெருமாள்’ என்றழைப்பதையும் இலக்கியங்களில் காணலாம்.

நமல்க - என்ற தூய தமிழ்ச்சொல்லே பேச்சுவழக்கில் 'நமக' என்றாகி வடமொழி சென்று நம: ஆனது.

நமல்க > நமக > நம:
நமஹ, நமகம், நமஸ்கார், நமஸ்தே - ஆகிய அனைத்தும் நம் தமிழ் வேரிலிருந்து கிளைத்த சொற்களே!
இஸ்லாமியர் தொழுகை செய்தலை நமாஸ் என்றழைக்கப்படுதலையும் நோக்குக!.

நம > நமக்கரித்தல் > நமக்காரம் > நமஸ்கார்!

அடுத்து, ஆய - என்ற சொல் ஆகுதல், ஆகும் செயலைக்குறிக்கும். ஆயனென்ற பெயர்ச் சொல் 'ஆய' என்றாகும்.

உதா:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

இதன் அடிப்படையில் நம + சிவ + ஆய = நமசிவாய என்றால்  'சிவனாகிய நின்னை வணங்குகிறேன் ' - என்பதே பொருள்!

இதையும் படியுங்கள்:
பயண அனுபவம் - வாருங்கள் நயாகரா செல்வோம்!
சிவபெருமான்...

கடைக்குறிப்பு :
நமர்த்தல், நமைச்சல், நமட்டுச் சிரிப்பு ஆகிய சொற்களும்… இதனடி தோன்றியவேயே!

நமசம் = இணக்கம்.
நமக்காரி = தொட்டாற்சிணுங்கி செடி.
நமர்த்தல் /நமுத்தல் = குழைதல், உடலை வளைத்து வணங்குதல், கை கூப்பி தொழுகை செய்தல்.
நமுகுதல் = கடின நிலையிலிருந்து நெகிழ் நிலைக்கு மாறுதல், இளகுதல்.(To become damp, moise ).அப்பளம் நமுத்துவிட்டது எனச் சொல்வதை நோக்குக!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com