மாணவர்கள், சிறுவர்கள் தற்கொலைகளைத் தடுக்க என்ன செய்யவேண்டும்?

மாணவர்கள், சிறுவர்கள் தற்கொலைகளைத் தடுக்க என்ன செய்யவேண்டும்?
Published on

- நடராஜன் சுந்தர்

மாணவர்களின் தற்கொலைக்குப் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் தொடர்ச்சியான மாணவர்கள் தற்கொலைக்கு ஒருமித்த காரணம் இருப்பதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்கள் வெவ்வேறு காரணங்களுக்காக அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர். இதில் சில மாணவர்களின் தற்கொலைக்கான காரணம் தெரியாததால் காவல் துறை சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறது. 

ஆசிரியர்கள் பணி எதுவரை? 

அண்மையில்  சென்னையில் உள்ள தனியார் கல்லூரி விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவர்களின் தொடர் தற்கொலை நிகழ்வு மனவேதனை அளிப்பதாக கூறினார். 

"கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள் அதனைத் தொழிலாக நினைக்காமல் தொண்டாக கருத வேண்டும். மாணவர்கள் பட்டங்கள் வாங்குவதற்கு மட்டும் கல்வி நிறுவனத்திற்கு வரவில்லை. முதலில் தன்னம்பிக்கை, துணிச்சல், மனஉறுதி ஆகியவற்றை அவர்களுக்கு அளிக்க வேண்டும்.

படிப்போடு பள்ளி நிறுவனங்களில் பணி முடிந்து விடக்கூடாது. பாடம் நடத்துவதோடு ஆசிரியர்களின் பணி முடிந்து விடக்கூடாது. குழந்தைகளைப் பெற்றதோடு பெற்றோரின் பணி எப்படி முடியாமல் இருக்கிறதோ அதுபோன்ற படிப்போடு ஆசிரியர் பணி முடிந்துவிடாது. ஆசிரியராக இருந்தாலும், பெற்றோராக இருந்தாலும் மாணவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். மாணவர்களும் அவர்கள் பிரச்னைகளை, நோக்கங்களை, கனவுகளைப் பெற்றோரிடமும், ஆசிரியரிடமும் பகிர்ந்து கொள்ளவேண்டும்," என்றார் ஸ்டாலின். 

உளவியல் வல்லுநர் கூறுவது என்ன? 

இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது குறித்தும், எதனுடைய தாக்கம் மாணவர்களைத் தொடர்ச்சியாக தற்கொலைக்கு தூண்டுகிறது? உளவியல் ரீதியாக மாணவர்களைத் தற்கொலை எண்ணத்தில் இருந்தும் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து வெளிக்கொண்டு வருவது எப்படி? என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்குக் கல்வி உளவியலாளரும், தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினருமான முனைவர் சரண்யா ஜெயக்குமார், பதிலளிக்கிறார்… 

தொடர்ச்சியாக மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இந்த தற்கொலைக்கு என்ன காரணம்? 

உளவியல் ரீதியாக இது Herd Behaviour (மந்தை நடத்தை) என்று அழைக்கப்படுகிறது. அதாவது, ஒரு நிகழ்வு தொடர்ச்சியாக அடுத்தடுத்து நடக்கும்போது “நானும் அதைப்போன்று செய்ய வேண்டும்” என்ற மன நிலை உருவாகிறது. எடுத்துக்காட்டாகச் செய்தி ஊடங்களில் மரணம் தொடர்பாக எப்படி உயிரிழந்தார்? எவ்வாறு உயிரிழந்தார்? எந்த காரணத்திற்காக உயிரிழந்தார்? என்று அடுத்தடுத்து வரும்போது அதைப்பார்க்கும் ஒருவருக்கு “தமக்கும் இறப்பதற்கான கரணம் இருக்கிறது” என்ற எண்ணம் தோன்றலாம். எல்லோருக்கும் அப்படித் தோன்றாது.

தனிமையில் இருப்போர், நீண்ட நாட்களாக மனதிற்குள் எதையாவது வைத்துக்கொண்டு புழுங்கிக் கொண்டிருக்கும் நபர்கள், கவனம் கோர நினைக்கும் குழந்தைகள் தம்மைக் காப்பாற்றிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் தற்கொலைக்கு முயல்வார்கள்… ஆனால், அவர்களை காப்பாற்ற முடியாமல் போய்விடும்.

சரியா தவறா என்று புரியாமல் பலர் இப்படி செய்துவிடுகின்றனர். 

குழந்தைகள் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்தால் எப்படி கண்டறிவது? அவர்களை எவ்வாறு அணுகுவது? 

தனிமையில் இருக்கக்கூடிய குழந்தைகளைக் கவனிக்க வேண்டும். மனச்சோர்வு என்பது சோகமாக இருப்பது மட்டுமில்லை... சிரித்த முகத்தோடு இருப்பார்கள்… ஆனால், அவர்களது மனதிற்குள் ஏதாவது ஒன்றினால் புழுங்கிக் கொண்டிருப்பார்கள். சிரிப்பதால் அந்த குழந்தைக்கு பிரச்னை இல்லை என்று எண்ணிவிடக் கூடாது.

எந்த ஒரு குழந்தை மனம்விட்டு, வாய்விட்டுப் பேசுகிறதோ அந்த குழந்தைக்குப் பிரச்னைகள் குறைவு. ஆனால், அதற்கு நேரெதிராக இருக்கும் குழந்தைகளுக்கு பிரச்னை இருக்கக்கூடும். சிரிப்பார்கள், மகிழ்ச்சியாக இருப்பார்கள்… ஆனால், எதை பற்றியும் பேச விருப்பப்பட மாட்டார்கள். இப்படி இருக்கும் குழந்தைகள் ஆபத்தானவர்கள்.

எப்பொழுதும் குழந்தைகளுக்கு “என்ன செய்ய வேண்டும்” என்று சொல்ல வேண்டுமே தவிர, “என்ன செய்யக்கூடாது” என சொல்லக்கூடாது. நிறைய நேரங்கங்களில் குழந்தைகளிடம் “வீடியோ கேம் விளையாடாதே, நண்பர்களுடன் வெளியே போகாதே” என்றுதான் சொல்கிறோமே தவிர, அதற்கு மாற்றாக “என்ன செய்யவேண்டும்” என்று சொல்லத் தவறுகிறோம்.

நண்பர்களுடன் வெளியே செல்வதற்கு மாற்று, நான்கு மணி நேரம் வீட்டிலிருந்து படிப்பது கிடையாது. அவர்களால் செய்யக்கூடிய விஷயத்தை அதற்கு மாற்றாக கொடுக்கும்போது நாம் சொல்வதை அவர்களால் கேட்க முடியும். இல்லையென்றால் அது அவர்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தும். 

தற்போதுள்ள குழந்தைகள் அதிகமாக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். சின்ன சின்ன விஷயங்களுக்கு பெரிய பெரிய முடிவுகளை எடுக்கின்றனர். 'இந்த காரணத்திற்காக இறந்து போகலாம்’ என்று சொல்வதற்கு இந்த உலகத்தில் ஒரு காரணம்கூட இல்லை. 

 வகுப்பில் மன உளைச்சலில் இருக்கும் குழந்தைகளை ஆசிரியர்கள் கையாள்வது எப்படி? 

ஆசிரியர்களைப் பொறுத்தவரை அடுத்து சில நாட்களுக்கு எந்த பிரச்னை இருந்தாலும் மாணவர்களை அதட்டாமல் இருக்க வேண்டும். குழந்தைகள் மனதில் என்ன இருக்கிறது என்பது தெரியாது. அவர்களை தோழமையுடன் கையாள்வதே சிறந்தது.

தேவையற்ற அறிவுரையைக் குழந்தைகளுக்குக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். முக்கியமாகப் படிப்பு விஷயத்தில் அவர்களுக்குப் பயம் ஏற்படுத்த வேண்டாம். அதிகமாக எதிர்பார்ப்பை அவர்கள் மீது திணிக்க வேண்டாம். 

மாணவர்கள் தங்களை மன அழுத்தத்தில் இருந்து வெளிக்கொண்டுவர என்ன செய்யவேண்டும்? 

குழந்தைகளும் அவர்களது சின்ன சின்ன பிரச்னைகளைப் பெற்றோரிடத்தில் கூறி தீர்வு காணலாம்.

எப்போதும் ஒரு குழந்தைக்கு அவர்களைச் சுற்றியிருக்கும் நட்பு சூழல் சிறப்பாக இருந்தால் அந்த குழந்தை தவறான முடிவெடுக்காது. இப்போதெல்லாம் குழந்தைகளுக்குள்ளேயே பாகுபாடு பார்க்கிறார்கள், அவர்களுக்குள் சின்ன சின்ன அரசியல் உள்ளது. எல்லாரும் சேர்ந்து ஒரு குழந்தையை ஓரங்கட்டுவது, தனிமைப்படுத்துவது, பிறர் அந்த குழந்தையிடம் பேசினால் அவர்களையும் ஒதுக்கி வைப்பது, இந்த மாதிரியான குழுவாக செயல்படும் நடவடிக்கையில் குழந்தைகள் ஈடுபடக்கூடாது.

எல்லாரையும் நண்பர்களாக பார்க்கவேண்டும், எல்லாரையும் எல்லாவற்றிலும் சேர்த்துக்கொள்ள வேண்டும். யாரிடமும் பாகுபாடு மட்டும் வேண்டாம். நெருங்கிய நண்பர்கள், நண்பர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் எதிரி என்று கூறி யாரையும் ஒதுக்காதீர்கள்.

ஒரு வகுப்பில் அனைத்து மாணவர்களும் ஒற்றுமையாக இருந்தால், அந்த வகுப்பில் தற்கொலை என்ற எண்ணம் யாருக்குமே வாராது. ஒரு குழந்தை தனியாக இருந்தால், ஏன் தனியாக இருக்கிறாய் எங்களுடன் அமர்ந்து சாப்பிடு என்று சொல்வதற்கு எவ்வளவு நேரமாகிவிடும்? ஆனால், குழந்தைகளுக்கு இந்த பெருந்தன்மை வருவதில்லை. அந்த பெருந்தன்மையை வரவழைக்க நாம் உதவலாம்.  

மாணவர்கள் தற்கொலையைத் தடுக்க மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பாக அரசிடம் பரிந்துரை செய்தது என்ன? 

 தமிழக அரசிடம் எங்கள் தரப்பில் வலியுறுத்துவது தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் உளவியல் ஆலோசகர் நியமிக்கப்பட வேண்டும் என்பது. தற்போது அவ்வளவு உளவியல் ஆலோசகர்கள் இல்லை என்றால் இப்போது இருப்பவர்களை பணியமர்த்திவிட்டு. அடுத்தடுத்து கல்லூரி முடித்துவரும் நபர்களை இந்த பணிக்கு நியமிக்கலாம். ஆகவே, ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் உளவியல் ஆலோசகர் அவசியம் ஒருவர் இருக்க வேண்டும்.

"ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் உளவியல் ஆலோசகரை அரசு நியமிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் எங்களிடம் பள்ளி ஆசிரியரை அனுப்புங்கள் நங்கள் அவர்களை உளவியல் ஆலோசகராக மாற்றித் தருருகிறோம்" என்கிறார் சரண்யா ஜெயக்குமார். 

நன்றி : பிபிசி தமிழ்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com