3வது ஆகஸ்டு, 2023, வியாழக்கிழமை அன்று, டுவிட்டரில் வெல்ஸ் பார்கோ வாடிக்கையாளர் வேகஸ் டாடி என்பவர் , தான் பற்று வைத்த (deposit), 4000 டாலர் பணம் இன்னும் கணக்கில் காட்ட வில்லை என்று தெரிவித்தார். மேலும், இதன் காரணமாக, வங்கி தனக்கு மிகைஎடுப்பு (over draft) அபராதமும் விதித்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.
தொழில்நுட்பக் காரணத்தினால், இவ்வாறு நிகழ்ந்துவிட்டதாக மன்னிப்புத் தெரிவித்து, சீக்கிரமாக இது சரிசெய்யப்படும் என்று வெல்ஸ் பார்கோ தெரிவித்தது.
இதன் பிறகு, வெள்ளிக்கிழமையும், இத்தகைய புகார்கள் சமூக வலைதளங்களில், தொடர்ந்து வரத் தொடங்கின. இது சீக்கிரம் சரி செய்யப்படும் என்று வெல்ஸ் பார்கோ, தொடர்ந்து தெரிவித்து வந்தது.
குறைந்த எண்ணிக்கையில் வாடிக்கையாளர்கள் தங்களது பற்று வைப்புகளை கணக்கில் காணமுடியவில்லை எனவும், பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு இந்தப் பிரச்சனை சரி செய்யப்பட்டுவிட்டது எனவும், இடைஞ்சல்களுக்கு மன்னிப்பு கோருகிறோம் என்றும் வெல்ஸ் பார்கோ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். எப்பொழுது இந்தப் பிரச்சனை சரியாகும் என வெல்ஸ் பார்கோ தெரிவிக்கவில்லை.
கடந்த மார்ச் மாதமும் இத்தகைய தொழில்நுட்பப் பிரச்சனை சில வாடிக்கையாளர்களுக்கு நேர்ந்தது. 2016ஆம் ஆண்டு, வெல்ஸ் பார்கோ போலிக் கணக்கு அவதூறில் சிக்கியது. அதன் காரணமாக, 2020 இல், 3 மில்லியன் அமெரிக்க டாலர்களை , அபராதமாக செலுத்தியது. இது தவிர, வீட்டுக்கடன், வாகனக் கடன் போன்றவற்றிலும் பல்வேறு அவதூறுகளில் சிக்கியுள்ளது.
வெல்ஸ் பார்கோ போன்ற ஜாம்பவான் வங்கிகளுக்கே இத்தகைய பிரச்சனை வரலாம் என்பதால் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியது, ஒரே வங்கியில் பணத்தைச் சேமிக்காமல், குறைந்தபட்சம் இரண்டு வங்கிகளில் சேமித்துக் கொள்ள வேண்டும். ஏதேனும் வங்கியில் பிரச்சனை இருந்தாலும், மற்றொரு வங்கியின் மூலம், நமது பணப் பரிவர்த்தனைகளைச் எந்த ஒரு பிரச்சனையும் இன்றி செய்ய முடியும்.