தொல்காப்பியத்தைத் படிக்க உங்களைத் தூண்டியது யார்? | கலைஞர் 100

கலைஞரும் கல்கியும்
தொல்காப்பியத்தைத் படிக்க உங்களைத் தூண்டியது யார்? | கலைஞர் 100
Published on

கலைஞரின் நூற்றாண்டுவிழாவினை ஒட்டி கல்கி இதழின் 80 ஆண்டு கால களஞ்சியத்தில் இருந்து நமது நிருபர் எஸ். சந்திர மௌலி மூழ்கி எடுத்த முத்துக்களின் தொகுப்பு.

கல்கி பத்திரிகையின் மீது எப்போது தனி மரியாதை கொண்டவர் கலைஞர். அவர் முதலமைச்சராக இருந்த போதும் சரி, இல்லாத நேரத்திலும் சரி, அவரிடம் பேட்டிக்காக கல்கி அணுகிய தருணங்களில் அவர் உடனடியாக நேரம் கொடுத்துவிடுவார். பேட்டியின்போது எப்படிப்பட்ட சிக்கலான கேள்விகளானாலும் தனக்கே உரிய நகைச்சுவையுடன் எதிர்கொண்டு பதில் அளிப்பார்.

பேட்டி சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு, கல்கியின் பிரியன், ஏக்நாத் இருவருக்கும் கலைஞர் அளித்த பேட்டி 19 ஜனவரி 2003 கல்கி இதழில் கவர் ஸ்டோரியாக வெளியாகி இருந்தது. அதன் முதல் பகுதியைப் பார்ப்போம்:

தொல்காப்பியத்தைத் தொட உங்களைத் தூண்டியது யார்?

கலைஞர் நேர் முகம்:

முகம் சுளிக்க வைக்கும் புகழ்ச்சியுரைகள், முதுகில் குத்தும் அரசியல், அன்றாட அறிக்கைப் போர்கள் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு, கலைஞர் ஓய்வெடுப்பது இலக்கியச் சோலையில்தான். அவர் அப்படி ஓய்வெடுத்ததால்தான் குறளோவியமும், சங்கத் தமிழும் நமக்குக் கிடைத்தன. அந்த வரிசையில் தொல்காப்பியத்தைக் கொடுத்திருக்கும் கலைஞருடன் ஒரு சந்திப்பு.

கல்கி: உங்களுடைய மகுடத்தில் மற்றொரு சிறகாக இந்த தொல்காப்பிய உரையை... (குறுக்கிடுகிறார் கலைஞர்)

கலைஞர்: ஒரு திருத்தம். உரை எழுதவில்லை. சொல்லோவியம் தீட்டியிருக்கிறேன். திருக்குறளில் ஒவ்வொரு அத்தியாயத்திலிருந்தும் அதாவது உட்பொதிந்துள்ள கருத்தைப் படம் பிடித்து காட்டியிருந்தாலும், தனியாக உரையும் எழுதியிருக்கிறேன்.

ஓவியம் என்றால் ஒரு கதை மூலமாகவோ, வர்ணனை மூலமாகவோ, சம்பவம், உரையாடல் மூலமாகவோ எளிமையாகவும், கவரத்தக்க வகையிலும் சொற்களை அமைத்துச் சொல்லும் பாணி. எனவே, அதைப் படிப்பதற்கான விருப்பமும், படிக்கிற நேரத்திலே, அது எளிமையாக இருக்கிறது என்ற நிலையும், வாசகர்களுக்கு ஏற்படக் கூடும்.

குறளோவியத்தைத் தொடர்ந்து நான் தீட்டிய ஓவியம் எழிலார்ந்த கனவும், எளிய நடையும் கொண்ட சங்கத் தமிழ். அதிலும் புறநானூறு, அகநானூறு போன்ற கடின நடையுள்ள பாக்களை எளிமைப்படுத்திச் சொல்வது, ஒரு சவாலான

காரியம்தான். அதைத் தொடர்ந்து இப்போது தொல்காப்பியத்துக்கு உரை மட்டும் எழுதவில்லை. அதில் உள்ள பல சூத்திரங்களை, நூற்பாக்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றிற்கு உரை எழுதுகிற அதே சமயத்தில், அதை அழகுபடுத்துவது போல, பின்னணிக் கதைகளுடன் மேற்சொன்னபடி ஒரு சொல்லோவியத்தைத்தான் தீட்டியிருக்கிறேன்.

கல்கி: எளிமைப்படுத்தும்போது மூலத்தின் வேர்கள் சிதையாவண்ணம் பார்த்துக் கொள்ள முடிந்ததா?

கலைஞர்: மூலத்தின் அடிப்படை, கடந்த காலத்தில் சிதைக்கப் பட்டிருப்பினும், சீர் தூக்கிச் சொல்லியிருக்கிறேன். தொல்காப்பியம் என்பது ஓர் இலக்கணம். அது தவிர ஒரு வாழ்க்கை இலக்கியம். நான் இலக்கணத்தை இலக்கியமாக்கியிருப்பதாக, படித்துப் பார்த்த மணவை முஸ்தபா, வைரமுத்து ஆகியோர் சொன்னார்கள்.

கல்கி: எழுத்து, சொல், பொருள் என்று மூன்று அதிகாரங்களையும் முழுமையாக கையாண்டிருக்கிறீர்களா?

கலைஞர்: எல்லாவற்றையும் தொடுவதென்பது மிகப் பெரிய காரியம். ஏற்கெனவே பலர் உரை எழுதியிருக்கிறார்கள். குறிப்பாக, இளம்பூரணர் முழுமையாக எழுதியுள்ளார். பேராசிரியர் என்ற மற்றொரு உரையாசிரியர் மெய்ப்பாட்டியல், உவம இயல், செய்யுளியல், மரபியல் என்று பொருளதிகாரத்தில் ஒரு பகுதிக்கு உரை எழுதியுள்ளார்.

நச்சினார்க்கினியர், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், அகத்திணை, புறத்திணை, களவியல், கற்பியல், பொருளியல், செய்யுளியல் ஆகியவற்றுக்கு உரை கண்டிருக்கிறார். சேனாவரையர், தெய்வச் சிலையார், கல்லாடனார் ஆகியோர், சொல்லதிகாரத்துக்கு மட்டும் உரை வழங்கியுள்ளனர்.

பிற்காலத்தில் வெள்ளை வாரணார், பொருளதிகாரத்திற்கு முழுமையான உரையும், செய்யுளியல் மற்றும் மரபியலுக்குத் தொகுப்புரையும், ஆய்வுரையும் தீட்டியுள்ளார். தொல்காப்பியத்தில் சிலவற்றுக்கு மாத்திரம் உரை எழுதலாம், என்ற முன்மாதிரியை உருவாக்கியிருக்கிறார்கள்.

நான் சொன்ன புலவர்கள், அவர்கள் வழி நின்று, அதே சமயத்தில் ஒரு புதிய பாட்டையில், பொலினா, தெளிவு மிக்க வழிகண்டு தொல்காப்பியப் பூங்காவை அமைத்திருக்கிறேன்.

கல்கி: தொல்காப்பியத்துக்குச் சொல்லோவியம் தீட்ட முனைந்ததற்கு வேறு ஏதாவது சிறப்பான காரணங்கள் இருக்கிறதா?

கலைஞர்: இன்று முகிழ்ந்துள்ள சமுதாய முற்போக்குப் பேரொளியில், சங்க காலத்துக்கு முன்பு தமிழ் மக்கள் கடைபிடித்த வாழ்க்கை முறையில், பிற்போக்கு நிழல் படிந்திருப்பது போன்ற தோற்றம் காணப்படும். அவற்றை ஏற்க இயலுமா, என்ற கேள்வியும் எழக்கூடும்.

இன்றைக்குத் திருத்தம் செய்துகொள்ளக்கூடிய வகையில் சில பழைய பண்பாடுகள், வாழ்க்கை முறைகள், ஆடவர், பெண்டிர் உரிமைகள் ஆகியவை இருப்பினும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த நமது சமூக அமைப்பின் பண்பாட்டு அடிப்படையைத் தெரிந்துகொள்ள் துடிப்பது என்பது, தொல்பொருள் ஆய்வில் காட்டும் ஆர்வம் போன்றது, என்று சொல்வதில் தவறு கிடையாது.

தொல்பொருள் ஆராய்ச்சி முடிவுகளை எப்படி ஆச்சர்யத்தோடு பார்க்கிறோமோ, அந்த வகையில் என் தொல்காப்பியப் பார்வை அமைந்திருந்தது. இன்றைக்கு அணைகளும், ஆலயங்களும் நவீன மிடுக்கோடு காட்சியளித்தாலும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கரிகாலன் கட்டிய கல்லணையும், ராஜ ராஜன் எழுப்பிய தஞ்சைக் கோயிலும் புறந்தள்ளக் கூடியவை அல்லவே! இந்த எண்ண ஓட்டத்திலேயே தொல்காப்பியப் பூங்காவுக்குள் நுழைய வேண்டுமென அழைக்கிறேன்.

கல்கி: தொல்காப்பியத்தை ‘தொட’ உங்களைத் தூண்டியது யார்?

கலைஞர்: “குறளோவியம், சங்கத்தமிழ் முடித்து விட்டீர்களே. தொல்காப்பியத்தை முயற்சி செய்து பாருங்களேன்” என்று மாறன்தான் துவக்கி வைத்தார். நான்கைந்து ஆண்டுகளாகவே அந்த முயற்சியில் ஈடுபட்டிருந்தேன். ஏற்கெனவே வெளிவந்துள்ள உரைகள், அது தொடர்பாக நூற்றுக்கு மேற்பட்ட புத்தகங்கள் என்று படித்து என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டு வந்தேன்.

கல்கி: உங்கள் இலக்கிய வாரிசாக மகள் கனிமொழியைச் சொல்லலாமா?

இந்தக் கேள்விக்கு கலைஞர் கூறிய பதிலைத் தெரிந்துகொள்ள ஆர்வமா? நாளை வரை காத்திருங்கள்!

கல்கி 19.01.2003 இதழிலிருந்து

தொகுப்பு: எஸ். சந்திர மௌலி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com