இந்தியாவைப் பொருத்தமட்டில் ரேஷன் கார்டு என்பது மிக மிக அத்தியாவசியமான ஒன்றாகும். ஒருவருக்கு திருமணம் ஆகி அவர்கள் வாழ்க்கையை தொடங்கும் போது, முதலில் பெரும்பாலானவர்கள் செய்யும் பணி புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது தான். ஏனெனில் நம் ஊரைப் பொறுத்தமட்டில் எங்கு சென்றாலும் முதலில் கேட்கப்படுவது ரேஷன் கார்டு ஜெராக்ஸ், ஆதார் கார்டு ஜெராக்ஸ்.
மேலும் அரசால் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட பணிகள் குறிப்பாக ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படும் பொங்கல் தொகுப்பு, இலவச வேட்டி சேலைகள், கரோனா காலத்தில் வழங்கப்பட்ட நிதி உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் ரேஷன் கார்டை மையமாக வைத்து வழங்கப்படுகிறது.
இதனால் மாநிலத்தில் எந்த தாலுகா அலுவலகம் சென்று பார்த்தாலும் அங்குள்ள வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக ரேஷன் கார்டில் பெயர் மாற்றம் செய்வது, முகவரி மாற்றம் செய்வது, புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது என எழுதிக் கொண்டே இருப்பார்கள்.
இங்கு வரும் அப்பாவி மக்களை ஏமாற்றுவதற்கு ஒரு கும்பல் காத்திருக்கும் என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம். எழுதப் படிக்கத் தெரியாமல் வரும் பாமரர்களிடம் ரேஷன் கார்டுக்கு 5,000 ரூபாய் பணம் வேண்டும், 6,000 ரூபாய் பணம் வேண்டும் எனக் கேட்டு வாங்கி சற்று அலையவிட்டு ரேஷன் கார்டு வாங்கி கொடுப்பார்கள்.
இதற்கு அலுவலகங்களில் பணியாற்றும் ஒரு சில கீழ்மட்ட அலுவலர்களும் உடந்தையாக இருப்பது உண்டு. இதனால் அரசு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுக்குள் வழங்க வேண்டிய ரேஷன் கார்டை, இது மாதிரி புரோக்கர்கள் தங்களுடைய செல்வாக்கால்தான் வாங்கிக் கொடுத்தோம் என பாமர மக்களை நம்பச் செய்கின்றனர். அவர்களும் இது போன்ற புரோக்கர்களிடம் பணத்தை மட்டும் கொடுத்து விட்டால் போதும். ரேஷன் கார்டு வந்துவிடும் என்ற நம்பிக்கையில் பணத்தை கொடுத்து ரேஷன் கார்டுகளை வாங்கி செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு மேலாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்படாமலேயே இருந்தது. இதனால் பல வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகங்களில் மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இதற்கு முதலில் கூறப்பட்ட காரணம் ரேஷன் கார்டு வழங்குவதற்கான சர்வர் அப்டேட் செய்யப்படுவதாக கூறப்பட்டது. அதன் பின்னர் எம்பி தேர்தல் வந்தது. இப்படியாக ரேஷன் கார்டு வழங்குவதில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்தன.
இப்போது ஆகஸ்ட் மாதம் முதல் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியாக 2 லட்சத்து 80 ஆயிரம் பேர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட உள்ளன. இது தவிர்த்து புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு உடனடியாக அந்த விண்ணப்பத்தின் மீது ஆய்வு செய்து புது ரேஷன் கார்டு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற உத்தரவுகள் அரசு பிறப்பிக்கும் போது இடைத்தரகர்களின் கட்டுப்பாட்டில் மக்கள் மாட்டிக் கொள்ளாத படி, ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும். அதாவது ரேஷன் கார்டு வாங்க வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கு செல்லும் போது அங்கு நேரடியாக அதிகாரிகளை சந்திக்கும் வாய்ப்பு பொது மக்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். அப்படி இல்லாத நிலையில் தான் இது போன்ற அலுவலகங்களில் புரோக்கர்கள் அட்டகாசம் அதிகமாக உள்ளது. இதனால் அரசு செய்யும் பெரும்பாலான நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு எட்டா கனியாகவே உள்ளன.
மக்களும் ஒரு விண்ணப்பம் கொடுத்தால் அதற்குரிய காலக்கெடு வரை பொறுத்து இருக்க வேண்டும். ஆனால் காலக்கெடுவுக்கு முன்னதாகவே தங்கள் பணி முடிக்கப்பட வேண்டும் என்பதனால் தான் ஒவ்வொரு அரசு அலுவலக வளாகங்களிலும் புரோக்கர்கள் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது.
இதை கட்டுக்குள் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.