ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மத்திய அரசு விருது பெற்றது ஏன்?

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி  மத்திய அரசு விருது பெற்றது ஏன்?
Published on

த்திய அரசின் உணவுப் பாதுகாப்புத் துறையின் ஆய்வுக் குழு, மதிய நேரத்தில் ஒரு நாள் திடீரென பச்சலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு வந்திருந்தனர். அப்போது பிள்ளைகளுக்கான மதிய உணவுக்கு முன்னதான நேரம். சமையல் கூடத்தில், உணவு சமைத்துக் கொண்டிருந்தார்கள். சமையலுக்கு இரண்டு பெண்கள், அமைப்பாளர் ஒருவர் என மொத்தம் மூன்று பெண்கள். அந்த நிமிடத்தில் இருந்தே அந்தக் குழுவானது, சமையல் கூடம் முதல் அடுத்து ஒவ்வொன்றாகக் கண்காணித்துக் கொண்டே வந்தது.

அனைத்து செயல்பாடுகளியும் நேரடியாகக் கண்டுணர்ந்த ஆய்வுக் குழுவினர், மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புத் துறை சார்ந்த, “சுகாதார மேம்பாடு” விருதினை அந்தப் பள்ளிக்கு வழங்கி உள்ளனர். அந்த ஆய்வுக் குழுவினருள் ஒருவருடன் நாம் போனில் பேசினோம். “பள்ளிகளில் மதிய உணவு சமைத்தல், அதனை பிள்ளைகளுக்குப் பரிமாறுதல், உணவு உண்ணும் பிள்ளைகள் கடைபிடிக்கும் தூய்மையான  நடை முறைகள் போன்றவற்றை நேரில் கண்டுணர்ந்த பின் தான், அதில் சிறந்து விளங்கும் பள்ளிக்கு மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புத் துறை சார்பாக “சுகாதார மேம்பாடு” விருது  வழங்கப்படுகிறது.” என்று அவர் நம்மிடம் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், பச்சலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் ஜோதிமணி அவர்களைத் தொடர்பு கொண்டபோது,

தலைமையாசிரியர் ஜோதிமணி
தலைமையாசிரியர் ஜோதிமணி

“எங்கள் பள்ளிப் பிள்ளைகளின் ஒவ்வொரு வகுப்பிலும் கற்றலில் மேன்மையும், செயல்பாடுகளில் கடமையும், அவைகளை நடைமுறைப் படுத்துவதில் ஒழுங்கும் எப்போதும் இருக்கும். இவைகள் அனைத்துக்குமே பள்ளி சக ஆசிரியைகளின் ஒத்துழைப்பும் மிக முக்கியக் காரணமாகும். அது போலத்தான் பள்ளியில் மதிய உணவு வேளையில், எந்தச் சத்தமும் இருக்காது. அமைதியாகவும் அதே நேரத்தில்  பொறுமையாகவும் அவரவர் உணவினை அவரவர் வாங்கிக் கொண்டு போய், தரையில் அமர்ந்து சாப்பிடுவார்கள். சாப்பிடும் இடத்திலும் எவ்விதமான அசுத்தமும் செய்யாமல் சாப்பிடுவார்கள். அவர்கள் சாப்பிட்டு விட்டு எழுந்த தரை அத்தனை சுத்தமாக இருக்கும். கீழே எதுவும் சிந்தாமல் சிதறாமல் சாப்பிடுவதால், தரை அசுத்தமாகாது. அவ்வாறு பிள்ளைகளுக்கு நாங்கள் பயிற்சி தந்துள்ளோம். அதுபோல சமையலுக்கும், பிள்ளைகளின் குடிநீருக்கும் எப்போதுமே  சுத்திகரிக்கப்பட்ட நீரை மட்டுமே பயன்படுத்தி வருகிறோம்.” என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com