
உலகிலுள்ள நாடுகளில், அதிக இயற்கை வளங்களும், மிக அதிகமான இளைஞர் எண்ணிக்கையும், பாரம்பரியமும், பண்பாடும் கொண்டதாக இலங்குவது நம் இந்திய நாடு என்பதில் நம் அனைவருக்குமே பெருமைதான்! ஆனால், இவ்வளவு இருந்தும், நாம் இன்னும் ஏழ்மையிலேயே உழன்று கொண்டிருக்கக் காரணம் என்ன? என்பதை நம்மில் எத்தனை பேர் யோசித்துப் பார்க்கிறோம்? சிந்தித்துப் பார்த்தால்தானே சிக்கல்கள் யாவை? என்பது தெரியவரும்? மேலும் சிந்தித்தால், சிக்கல்களைக் களைய வழி தோன்றுமல்லவா?
எவைதான் காரணம்?: பணக்கார நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்குமான வித்தியாசத்திற்கு எது அல்லது எவைதான் காரணம்?
1. வயது: ஒரு நாட்டின் வயது, அதாவது அதன் பழமை அதன் வளத்துக்கு ஒரு காரணமாக இருக்க முடியுமா?
அவ்வாறாயின், இந்தியாவும், எகிப்தும் 2000 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த நாடுகள் என்கிறார்களே! இந்த இரு நாடுளுமல்லவா இன்றைக்கு உலக நாடுகளில் முன்னிலை பெற்றிருக்க வேண்டும்! இவை இரண்டுமல்லவா பணக்கார நாடுகளாக, வளம் பெற்று... வளர்ந்த நாடுகளாக இருந்திருக்க வேண்டும்?ஆனால், இல்லையே! இரண்டுமே ஏழ்மையில்தானே உழல்கின்றன!மாறாக, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகள், சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த இடங்கூடத் தெரியாமல் இருந்தன. இன்றைக்கோ... அவையெல்லாம் வளர்ந்த பணக்கார நாடுகள்! எனவே,நாட்டின் வளர்ச்சியை நிர்ணயிப்பது வயதல்ல!
2. இயற்கை வளங்கள்: இயற்கை வளங்கள் செரிந்த நாடுகள் எளிதில் வளர்ந்து விடுமா?
ஜப்பான் நாட்டின் எல்லை மிகக் குறுகியது! அதிலும் 80 விழுக்காடு வெறும் மலைகள்! விவசாயம் செய்வது அரிது! வேறு பயிர்களும் தழைக்காது. ஆனால், உலகத்தின் வளர்ந்த பொருளாதாரத்தில் ஜப்பானுக்கு இரண்டாம் இடம்! சிறிய நாடான அது, தொழிற்சாலைகள் அமைக்க நிலப்பகுதி இல்லாததால், நீரில் மிதக்கும் பாக்டரிகளை அமைத்துப் பொருட்கள் தயாரிப்பில் கொடி கட்டிப் பறக்கிறது! உலகின் பல நாடுகளிலிருந்தும் மூலப் பொருட்களை இறக்குமதி செய்து, அவற்றிலிருந்து பொருட்களை முழு வடிவில் தயாரித்து உலகின் பெரும் பாலான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது! இது முதல் உதாரணம்!
இரண்டாவது உதாரணமாக சுவிட்சர்லாந்து நாட்டைக் கூறலாம்! இதுவும் நிலப் பரப்பில் மிகச்சிறு நாடே! தமிழ் நாட்டின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதியே இந்நாட்டின் மொத்தப் பரப்பளவு! இங்கு, சாக்லட் தயாரிப்பதற்கான கோகோ விளைவதில்லை! ஆனால்,உலகின் முதல்தர சாக்லட்கள் இந்நாட்டில்தான் உற்பத்தியாகின்றன! நாட்டின் சிறிய பரப்பில் பசுக்களை வளர்த்து, அவற்றின் பால் மூலம் பால்பொருட்களையும், மிகச் சிறந்த சாக்லட்களையும் தயாரித்து அசத்துகின்றனர் இந்நாட்டு மக்கள்! மாதத்தில் 4 மாதங்கள் மட்டுமே விவசாயம் செய்து அதிக விளைச்சலைப் பெறுகிறார்கள்! சிறிய நாடாயினும், பாதுகாப்பையும் மக்களின் உயரிய வாழ்க்கைத் தரத்தினையும் நிலைநாட்டி, உலகத்திலேயே பாதுகாப்பான வங்கிச் சேவையைச் செய்து வருகிறது இந்நாடு! இவற்றிலிருந்து, நாடு வளர்ச்சி பெற இயற்கை வளம் மட்டும் காரணமில்லை என்பது புரிகிறது!
3. அறிவு ஜீவிகள்: அதிகமான விஞ்ஞானிகளும், அறிவு ஜீவிகளும் உள்ள நாடு வளர்ச்சி பெறுமா?
வளர்ந்த பணக்கார நாடுகளின் மிகச்சிறந்த செயல்தலைவர்களும், ஏழை நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளும் பல மாநாடுகளில், ஏழ்மை நாட்டினரின் அறிவும், விஞ்ஞானமும் மிக வியக்கத்தக்கதாக இருப்பதாகவே வளர்ந்த நாட்டினரே ஒத்துக் கொள்கின்றனர்! எந்தப் பணக்கார நாட்டினரின் அறிவுக்கும் குறைந்ததாக இல்லையாம் ஏழை நாட்டினரின் அறிவு! அறிவு சார்ந்தவையும் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமில்லை!
4. பண்பாடு, நாகரீகம், இன, மத வேறுபாடுகள்: பண்பாடோ, நாகரீகமோ, இன, மத வேறுபாடுகளோ கூட வளர்ச்சி நிலை மாற்றங்களுக்கு முக்கியக் காரணமில்லை! என்றே ஆய்வியலார் கூறுகின்றனர்!
சரி! அப்படியானால் எதுதான் காரணம்! இதுதான் காரணம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்!
தங்கள் நாடுகளில், மிகுந்த சோம்பேறிகளாய், வீணாக ஊர் சுற்றுபவர்களாய் இருப்பவர்களெல்லாம் பணக்கார ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் மிக அதிகமாக உழைக்கிறார்கள்! கொடுக்கப்பட்ட குறியீடுகளுக்கும் மேலாகவே சாதிக்கிறார்கள்!
இப்பொழுது தெரிகிறதா? எதில் இருக்கிறது வித்தியாசமென்று? மக்களின் மன நிலையிலும், அவர்களின் அணுகு முறையிலும்தான்!
வளர்ந்த பணக்கார நாட்டு மக்கள், சட்டங்களை மதிப்பவர்களாகவும், அதனை எக்காரணங்கொண்டும் மீறாதவர்களாகவும் வாழக் கற்றுக் கொண்டு விட்டார்கள்!அவர்கள் கற்ற கல்வியும், பண்பாடான வாழ்க்கை முறையும் அதற்கு அவர்களுக்கு உதவுகின்றன! அவர்களின் மனோநிலையை ஆராய்ந்து பார்த்ததில், பெரும்பாலான மக்கள் கீழ்க் கண்டவற்றை ஏற்று, அதற்குக் கீழ்ப்படிந்து நடப்பதுதான் அவர்களின் வளர்ச்சிக்கும், பணத்துக்கும் காரணமென்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது!
1. நல்ல வாழ்க்கை நெறிமுறைகளைக் கடைப்பிடித்தல்
2. பொறுப்புகளைச் சரியான வழிகளில் நிறைவேற்றல்
3. சட்டங்களுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் உரிய மதிப்பளித்துப் பின்பற்றல்
4. பெருவாரியான மக்கள், தங்கள் உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் அவற்றை மதித்துக் காப்பாற்றிக் கொள்ளல்
5. செய்யும் தொழிலை நேசித்து, மனமுவந்து செய்தல்
6. சேமிக்கவும், அதனை முழுமையாக முதலீடு செய்யவும் சரியான முயற்சிகள் எடுத்தல்
7. சமுதாயத்திற்குப் பயன்படும் விதமாக வாழ்தல்
8. நேரந்தவறாமை மற்றும்
9. நேர்மையான வாழ்க்கை
மேற்கண்டவற்றை ஏழை நாடுகளில் மிகச்சிலரே பின் பற்றுகிறார்கள்! அதிலும், அன்றாட வாழ்வில் இவற்றைப் பின் பற்றுவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவு!
நம் நாடு ஏழ்மையுடன் இருப்பதற்கு, இயற்கையோ அதன் கொடூரமோ காரணமல்ல!நாம் ஏழ்மையில் சீரழிய, நம் மனநிலையே முழுக்க முழுக்கக் காரணம்! முன்னேறிய பணக்கார நாடுகளில் உள்ளவர்களைப் போல், நெறிமுறைகளின்படி, மனவுறுதியோடு வாழக்கற்றுக் கொண்டால் நாமும், நம் நாடும் விரைந்து முன்னேறலாம்!
தவறு செய்தவர்களைத் தண்டித்துத் திருத்துவதற்குப் பதிலாக, நாமும் தவறு செய்ய ஆரம்பித்து விடுகிறோம்! 'எப்படியோ வாழ்க்கை ஓடட்டும்!' என்று இருந்து விடுகிறோம்!
அரசியல்வாதிகள், அதிகாரிகளின் தவறுகளை எளிதாக மறக்கும் மனோநிலையே நம் வளர்ச்சியின் எதிரி!
இவற்றையெல்லாம் மாற்றிக் கொண்டால்தான் நம் வாழ்வில் நல்ல மாற்றங்கள் வரும்!
நாட்டையும், மக்களையும் நேசிக்கும் யாரும், மேற்கண்டவற்றை நிச்சயம் ஒத்துக்கொள்ளவே செய்வார்கள்! ஒத்து, ஏற்றுக் கொண்டால் மட்டும் போதாது!நடைமுறைப் படுத்த வேண்டும்! என்றோ இல்லை! நாளைக்கு இல்லை! இன்றே!இப்பொழுதே! இக்கணத்திலிருந்தே! சிந்தியுங்கள்! செயலில் இறங்குங்கள்!
மலையளவு இயற்கை வளங்களும், மகத்தான இளைஞர் பட்டாளமும் கொண்டுள்ள இந்தியா, நம்பர் ஒன் நாடாவது நம் கைகளில்தான் உள்ளது! ஆக்கிக் காட்டுவோம்!