
உடலையும், மனத்தையும் இணைத்து, உடல் நலத்துக்கும் மன அமைதிக்கும் வழி வகுக்கும் யோகா இன்று உலகெங்கும் பல நாடுகளில் உள்ளோரால் பயிற்சி செய்யப் படுகிறது.
எந்த வயதினருக்கும் ஏற்ற யோகா பற்றிய விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்தவும், உணர்வு பூர்வமான அந்த அனுபவத்தை அனைவரும் அடைய வேண்டும் என்பதற்காகவும், சர்வ தேச யோகா தினம் அனுசரிக்கப் படுகிறது.
நீண்ட பகல் கொண்ட, மற்றும் பல நாடுகளின் சிறப்பு தினமான ஜூன் மாதம் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாகக் கொண்டாட தேர்ந்தெடுத்தவர் நம் பிரதமர் திரு. நரேந்திர மோதி அவர்கள்.
2014ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச யோகா தினம் கொண்டாட வேண்டுமென்று இந்தியா வைத்த கோரிக்கையை,175 நாடுகளும் ஏற்றுக் கொண்டன.
இன்றைய அவசர யுகத்தில் மனத்தை ஒருமுகப்படுத்தி, உற்சாகமாக, வாழ பலருக்கும் நேரமில்லை. அல்லது தெரியவில்லை.குறிப்பாக இளைய தலைமுறைக்கு பல கவனச் சிதறல்கள் உள்ளன.
யோகா மூலம், மனத்தை ஒருமுகப்படுத்தி, அவர்கள் ஆரோக்கியமான உடல், மன நலத்துடன் ஒழுக்கத்துடன் வாழ்க்கை நெறி அமைத்துக் கொள்ள யோகா அவசியம் என்பதால், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவர்களை ஈடுபட வைக்கவும் இந்த சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
முதல் வருடத்தில் “ நல்லிணக்கம் மற்றும் அமைதி” (Yoga for Harmony and Peace) தீம் என துவங்கி, ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கருப்பொருளுடன் நிகழ்த்தப் படுகிறது.
இந்த வருடத்திற்கான தீம், “வசுதேவ குடும்பம்.”
அதாவது உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்று பொருள்.
இனங்கள், மதங்கள், பாரம்பரியம், பூகோள எல்லைகள் இவற்றையெல்லாம் கடந்து, மனித குலம் முழுக்க ஆன்ம அமைதியும் நலமும் பெற வேண்டும்.
யோகாவினால், உடல், மனம், ஆன்மா அடையும் நன்மைகளைப் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்பதுதான் இதன் முக்கிய நோக்கம்.