ஏன் இந்த பாரபட்சம்?

ஏன் இந்த பாரபட்சம்?
Published on

ண்மையில் பிரதமர் மோடி இமாச்சல பிரதேச மாநிலம், பிலாஸ்பூரில் ரூ.1,470 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்துள்ளார். கடந்த 2017, அக்டோபர் மாதம் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த மருத்துவமனையானது, ஒன்றிய அரசின் நிதியில் கட்டப்பட்டுள்ளது.

 கடந்த 2015ம் ஆண்டு, பட்ஜெட் உரையின்போது, அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தமிழகத்தில் எய்ம்ஸ் அமைக்கப்படுமென அறிவித்தார். அதற்கு கடந்த 2018, டிசம்பரில் ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தது. சுமார் ரூ.1,264 கோடி மதிப்பில் சுமார் 222 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படுமென அறிவிக்கப்பட்டது. கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தின்போது, மதுரை வந்த பிரதமர் மோடி 2019, ஜன.29ம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.

தமிழகத்தோடு சேர்த்து அறிவிக்கப்பட்ட பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு திறப்பு விழா நடந்திருக்கும் நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் கட்டுமானப்பணிகளையே இன்னும் தொடங்கப்படவிலை. ஜப்பானின் ‘ஜெய்கா’ நிறுவனத்தின் கடனுதவியுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டது. இதன்படி ஜப்பான் நிறுவனம் 85 சதவீதம் கடனுதவியும், மீதமுள்ள 15 சதவீத நிதியை ஒன்றிய அரசும் தர உள்ளதாக முடிவாகி ஒப்பந்தம் கடந்த 2021, மார்ச் மாதம் கையெழுத்தானதாக தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து ரூ.1,500 கோடி வரை ஜப்பான் நிறுவனம் நிதி ஒதுக்கியுள்ளதாகவும், அதே ஆண்டு அக்டோபரில் கட்டுமான பணிகள் துவங்கும். 2023ம் ஆண்டுக்குள் முடிவடையுமெனவும் அறிவிக்கப்பட்டது.  ஆனாலும், இதுவரை 1 சதவீதம் கூட நிதி ஒதுக்கப்படவில்லை. மேலும், கட்டுமானப் பணிகளை தொடங்குவதற்குள்  திட்ட மதிப்பீடு சுமார் ரூ.2 ஆயிரம் கோடியை தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தற்போதைய நிலவரப்படி மதுரை எய்ம்ஸ்க்கு சுற்றுச்சுவர் கட்டுமான பணிகளே 95 சதவீதம் தான் முடிவடைந்துள்ளன. ஆனால், சமீபத்தில் மதுரை வந்த பா.ஜ.க. தேசிய தலைவர்  ஜே.பி.நட்டா எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 95 சதவீதம் முடிவடைந்து விட்டதாக கூறி அதிர்ச்சியை கிளப்பினார்.

அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ், 3 ஆண்டுகள் 9 மாதங்கள் ஆன பின்னும் சுற்றுச்சுவர் பணிகள் கூட  நிறைவடையாமலிருக்கிறது . மற்ற மாநிலங்களில் எல்லாம் எய்ம்ஸ் ஒன்றிய அரசின் நிதியில் கட்டப்படும்போது, மதுரை எய்ம்ஸ்க்கு மட்டும் வெளிநாட்டு கடனை எதிர்பார்ப்பதும், அதன் மூல திட்டத்தை தாமதப்படுத்துவதும்  மாநில அரசியல் கட்சிகள் எழுப்பும்  இது மாற்றாந்தாய் மனபான்மை, பாரபட்சமானது என்ற குரல்கள்  உண்மைதான் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது.

ஒன்றிய அரசு அறிவிக்கும் மக்கள் நலதிட்டங்களில் பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில்  செயல் படுத்துவதில் பாரபட்சம் காட்டுகிறது என்று மக்கள் மனதில் எழும் எண்ணங்களைக் களையவேண்டியது  ஒன்றிய அரசின் கடமை.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com