இறங்கி வருமா தபால் துறை?

Post office Saving scheme
Post office Saving scheme
Published on

இந்திய பெண்கள் குடும்பத்தை நடத்தும் விதத்தை வைத்து ஒரு வரலாறு எழுதிவிட முடியும். ஏனெனில் குடும்பத் தலைவன் நூறு ரூபாய் சம்பாதித்துக் கொண்டு வந்தாலும், ஆயிரம் ரூபாய் கொண்டு வந்தாலும் அதற்குள் குடும்பம் நடத்தும் திறன் நம் இந்திய பெண்களுக்கு அத்துபடியான ஒன்று. இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது கொண்டுவரும் சொற்ப பணத்திலும், குடும்பச் செலவு போக சேமித்தும் வைப்பது நம்முடைய பெண்களின் கைவந்த கலையாகும். அதனால்தான் பல குடும்பங்களில் சம்பாதிக்கும் ஆண்மகன்கள், அதை அப்படியே பெண்களிடம் கொடுத்து விடுகின்றனர்.

இப்படி சேமிக்கும் பழக்கமுடைய பெண்கள் பெரும்பாலும் நாடுவது தபால் அலுவலகங்களையே. ஏனெனில் ஒவ்வொரு கிராமத்திலும் இயங்கி வரும் தபால் அலுவலக ஊழியர்கள் நமது குடும்பத்தார் போலவே பழகுவார்கள். அதனால் நம்முடைய பெண்களும் தபால் அலுவலகத்தில் சேமிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இப்படி சேமிக்கும் பணத்தை வைத்து ஆண்டுக்கு ஒரு முறையோ, ஐந்தாண்டுக்கு ஒரு முறையோ பணத்தை எடுத்து தங்கள் குடும்ப முன்னேற்றத்திற்காக செலவிட்டு  வருகின்றனர்.

இந்த வகையில் சேமிப்பு இருக்கும் போதே தங்களுக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் அந்த தபால் கணக்குக்கான வாரிசாக தங்கள் கணவர்களையே பரிந்துரைக்கின்றனர். இதுவும் நல்ல விஷயம் தான். ஏனெனில் மனைவி இல்லையென்றால் கணவரின் நிலை பரிதாபம் தான். அவர்களிடம் பணம் இருந்தால் தங்களை தாங்களே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற எண்ணத்தில் தங்கள் கணவர்களை வாரிசுதாரர்களாக நியமிக்கின்றனர்.

இப்போது இதில் ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. வயதான பெண்மணி ஒருவர் தபால் அலுவலகத்தில் கணக்கு தொடங்கி பணம் செலுத்தி வரும் நிலையில், அவர் இறந்து விட்டால் அந்த பணம் அவரது கணவருக்கு செல்லும். ஆனால் அந்தத் தொகையை பெறுவதற்காக தபால் அலுவலகம் செல்ல வேண்டும் என்ற விதி உள்ளது. இது சிலருக்கு பொருந்தினாலும், பல வீடுகளில் கணவர்கள் மூத்த குடிமக்களாக அதாவது 70 அல்லது 80 வயதுக்கும் அதிகமான நபர்களாக இருக்கின்றனர். அவர்களால் தபால் அலுவலகம் செல்ல முடியாத நிலை உள்ளது.

இதையும் படியுங்கள்:
சம்பாதிக்க தொடங்கியாச்சா? சேமிக்க தொடங்குங்கள்... அஞ்சல் துறை முதலீடு 100% பாதுகாப்பானது!
Post office Saving scheme

சில தபால் அலுவலக கணக்குகளின் பணம் பெறுவதற்கு உள்ளூரில் இயங்கி வரும் தபால் அலுவலகத்தில் பெற முடியாது. அதைவிட பெரிய தபால் அலுவலகத்தில் தான் அந்த பணத்தை பெற முடியும். அப்படி இருக்கையில் வயதானவர்களால் கண்டிப்பாக அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது. ஆனால் இது குறித்து தபால் அலுவலக ஊழியர்களிடம் கேட்டபோது, வாரிசுதாரர்கள் கண்டிப்பாக அலுவலகத்துக்கு நேரடியாக வரவேண்டும் என்கின்றனர். இதனாலேயே வயது முதிர்ந்த கணவர்களின் வங்கிக் கணக்கு பணம் எடுக்கப்படாமல் அப்படியே பல தபால் நிலையங்களில் உள்ளது.

இது போன்ற நிகழ்வுகளில் அந்தந்த பகுதிகளுக்கு தபால் வழங்க செல்லும் தபால் ஊழியர்கள், இதுபோன்ற நபர்களிடம் வீட்டுக்கு வந்து கையெழுத்து வாங்கி சென்றால் நன்றாக இருக்கும். ஏனெனில் தபால் அலுவலகத்திற்கு செல்ல முடிந்த நபர்கள் யாரும் இது போன்று சொல்வதில்லை. முடியாதவர்கள் மட்டுமே தபால் கணக்கில் பணம் இருந்தும் எடுக்க முடியாத நிலையில் காணப்படுகின்றனர். இது போன்ற வயதானவர்களின் நிலையை கருத்தில் கொண்டு மாற்று ஏற்பாட்டில் தபால் துறை இறங்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com