உலக கோப்பையை வென்ற மெஸ்ஸியும் “ஆடு”ம்.

உலக கோப்பையை வென்ற மெஸ்ஸியும் “ஆடு”ம்.

லக கோப்பை கால்பந்து தொடரின் ஆரவார ஓசைகள் மெல்ல அடங்கிக்கொண்டிருந்தாலும் இன்னும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும் ஒரு பெயர் மெஸ்ஸி.

உலகம் முழுவதும் கால்பந்து போட்டிகள் ஆதிக்கம் செலுத்தாத நாடுகளில் கூட இறுதிப் போட்டியை ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். இதற்குக் காரணம் மந்திரக்காரன் மெஸ்ஸியே. ஏனெனில் மெஸ்ஸி கால்பந்து உலகில் சாதிக்காதது எதுவும் இல்லை. அவர், உலக கோப்பையை மட்டுமே கைகளில் ஏந்தாமல் இருந்தார். அந்த மாயாஜாலமும் கத்தாரில் நிகழ்ந்துவிட்டது. இதன் மூலம் மெஸ்ஸியின் கால்பந்து வாழ்க்கை முழுமைப் பெற்றுள்ளது.

கூகுள் நிறுவன செயல் அதிகாரி சுந்தர்பிச்சை தனது ட்விட்டர் பதிவில், “நேற்று இரவு மக்கள் எல்லோரும் ஒரே விஷயத்தை தேடி உள்ளனர். உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியின்போது கூகுள் தேடல் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமான டிராஃபிக்கைப் பதிவு செய்தது. இது முழு உலகமும் ஒன்றைப்பற்றித் தேடுவதுபோல் இருந்தது. உலகில் இதற்கு முன் கடந்த 25 வருடங்களில் இவ்வளவு பெரிய அளவில் மக்கள் எதை பற்றியும் தேடியது இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

மெஸ்ஸி தான் அறிமுகமான 2006 உலகக் கோப்பையில் அடித்த முதல் கோலுக்கும் தற்போது கத்தாரில் அடித்த கடைசி கோலுக்கும் இடைப்பட்ட காலம் 16 வருடங்கள் 184 நாட்கள்.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் பரிசளிப்பு விழாவின்போது கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி அந்நாட்டின் கௌரவமிக்க பிஷ்ட் (Bisht) அங்கியை மெஸ்ஸிக்கு அணிவித்து கௌரவப்படுத்தினார். இந்த அங்கி தூய்மையான தங்கத்தால் செய்யப்பட்டது. வளைகுடாவில் பல நூற்றாண்டுகளாக விசேஷ காலங்களில் இந்த ஆடை அணியப்படுகிறது. இது மரியாதையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. பொதுவாக அரசியல்வாதிகள், ஷேக்குகள், உயர் அந்தஸ்துள்ள அதிகாரிகளால் இந்த ஆடை அணியப்படுகிறது. இந்த அங்கியை அணிவித்து அதன் பின்னர்தான் தங்க கோப்பை வழங்கினார் மன்னர். மிக சிலருக்குகே இந்த அங்கியை மன்னரே அணிவித்து கெளரவப்படுத்தியிருக்கிறார்.

மிகச்சிறந்த கால் பந்தாட்டக்காரரான மெஸ்ஸியின் மற்றொரு பக்கம் பலர் அறியாதது. மகிழ்ச்சியளிக்க கூடியது. இந்த ஆண்டின் இறுதிவரை மெஸ்ஸி 900 மில்லியன் யூரோக்களை சம்பாதிருக்கிறார். அதில் பெரும்பகுதியை நன்கொடையாக வழங்கியிருக்கிறார். யுனெஸ்கோவின் அறக்கட்டளையின் வருவாயில் 48 சதவீதம் மெஸ்ஸியின் நன்கொடையில் இருந்து வருகிறது.மெஸ்ஸி 189 நாடுகளில் 9847 பள்ளிகளை சொந்த செலவில் உருவாக்கியுள்ளார்.

உலகில் உள்ள 40 மில்லியன் குழந்தைகளின் பள்ளிச் செலவுகள் அனைத்தையும் அவரே ஏற்றிருக்கிறார். அவர் தனது தொண்டு அறக்கட்டளை மூலம் உலகின் 15 மில்லியன் தெருக் குழந்தைகளுக்கு உதவுகிறார்.

ஓவியம் : ஸ்ரீதர்
ஓவியம் : ஸ்ரீதர்

மெஸ்ஸி ஆரம்பத்தில் அர்ஜென்டினா அணியில் இருந்தபோது அர்ஜென்டினா உலகக் கோப்பையில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இரண்டாம் இடத்துக்கான முழுப் பணத்தையும் அர்ஜென்டினாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு நன்கொடையாக வழங்கினார

ஃபோர்ப்ஸ் கணக்கெடுப்பின்படி உலகில் உள்ள 50 நன்கொடையாளர்களில் மெஸ்ஸியும் ஒருவர். சரி இதில் எங்கிருந்து ஆடு வந்தது?

சமூக வலைதளங்களில் லயோனல் மெஸ்ஸிக்கு வாழ்த்து தெரிவிக்கும் அனைவரும், #Messi என பதிவிட்டு வருகின்றனர். மெஸ்ஸியின் பெயர் அருகே ஏன் இந்த ஆட்டின் படம் உள்ளது? இது எதற்கு? என பலரும் குழம்பினர்.

சமகாலம் மட்டுமின்றி எல்லா காலத்திலும் மிகச் சிறந்தவர் என்பதை குறிக்கும் Greatest Of All Time-ன் சுருக்கமே GOAT என சமூக வலைதளங்களில் அழைக்கப்படுகிறது. அந்த GOAT என்ற சொல் ஆங்கிலத்தில் ‘ஆடு’ என பொருள்படுவதால் ரசிகர்கள் பலர் ஆடு படம் பயன்படுத்தி மெஸ்ஸிக்கு வாழ்த்தி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com