-மதுவந்தி
உலங்கு வானூர்தி என்னும் ஹெலிகாப்டர் செங்குத்தாக மேலே எழும்பி வானில் பறக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. ஹெலிகாப்டரின் மேலே உள்ள பிளேடுகள் காற்றைக் கிழித்துகொண்டு மேல பறக்க உதவுகின்றன. ஒரு ஹெலிகாப்டரினால் ஆகாயத்தில் ஒரே இடத்தில் நிற்கவும் முடியும்.
அனைத்து நாடுகளின் இராணுவத்திலும் ஹெலிகாப்டரின் பங்கு மிக முக்கியமானது. இயற்கைப் பேரழிவின் பொழுது இடர்பாடுகளில் சிக்கித் தவிப்போரை மீட்கவும், சாலைகள் இல்லாத இடத்தில் செல்லவும், மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியமான பொருட்களைக் கொண்டு சேர்க்கவும் ஹெலிகாப்டர் தேவைப்படுகிறது. இதனால்தான் உலகின் பல நாடுகளில் அதன் தலைவர்கள் ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கும், இயற்கைப் பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட இடங்களைக் காணவும் ஹெலிகாப்டரைப் பெரிதும் பயன் படுத்துகிறார்கள்.
ஆனால், சமீப காலங்களில் அதிகம் விபத்துக்குள்ளாவதும் ஹெலிகாப்டர்களே. இந்தியாவிலும் மற்றும் பிற நாடுகளிலும் மிகப் பெரிய அரசியல் தலைவர்களை நாம் பறிகொடுத்தது ஹெலிகாப்டர் விபத்துகளில்தான்.
ஒரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாவதற்கு நிறையக் காரணங்கள் இருப்பினும் மிக முக்கியமாக இருப்பவை, மோசமான வானிலை, தீவிரவாதத் தாக்குதல்கள், விமானியினால் அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போகுதல், பறவைகள் வந்து மோதுவது மற்றும் நிலத்தைச் சுற்றியுள்ள மிக அதிகமான காற்றழுத்தம். உலகில் ஒரு வருடத்தில் சராசரியாக 515 விபத்துக்கள் நடப்பதாக ஓர் அறிக்கை கூறுகிறது. நடிகை சௌந்தர்யா தொடங்கி அரசியல் தலைவர்களான ஈரான் நாட்டின் ஜனாதிபதி ரசி ஜோன்ஸ், ஆந்திர பிரதேஷ் முன்னாள் முதல் அமைச்சர் திரு.Y.S. ராஜசேகர் ரெட்டி, சிலி ஜனாதிபதி செபாஸ்ட்டியன் பினேரா, இந்திய இராணுவ ஜெனரல் பிபின் ராவத் போன்ற பலரின் அகால மறைவுக்கு ஹெலிகாப்டர் விபத்துத்தான் காரணம்.
விமான விபத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள BRACE எனப்படும் தற்காப்பு முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். இதில் ஒருவர் தங்களின் தலையைத் தங்களின் முழங்காலிற்கு நடுவே வைப்பதாகும். லைஃப் ஜாக்கெட் அணிவதும் மிக முக்கியம்.
இத்தகைய விபத்துகள் நிறைய நடப்பினும் அரசியல் தலைவர்கள் ஹெலிகாப்டரைத் தேர்ந்தெடுப்பதற்குக் காரணம் ஹெலிகாப்டர் தரை இறங்கவோ மேலே எழும்புவதற்கோ ஓடுபாதை தேவை இல்லை.
ஒரு இடத்திலிருந்தது மற்ற இடங்களுக்குச் செல்ல ஹெலிகாப்டர்கள் பலவகைகளில் மிகவும் செளகரியமாக இருக்கின்றன.
மனிதனால் உருவாக்கப்பட்ட அனைத்து கண்டு பிடிப்புகளுக்கும், ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போலவே, நன்மையும் தீமையும் உள்ளது. நன்மையின் பக்கம் நாம் இன்னும் கொஞ்சம் திரும்புவோமேயானால் உலகமும், நம் நாடும், நம் வீடும் சுபிக்ஷம் பெரும். அதே போலவேதான் ஹெலிகாப்டரும். விபத்துகள் நிறைய ஏற்படினும் நன்மைகளும் அதிகம். அதை நாம் உபயோகப்படுத்தும் விதத்திலும் ஊர்திகளைச் சரிவர பழுதுபார்த்து, பராமரித்து, பாதுகாத்து வருவதிலும்தான் உள்ளது.