
”ஏன்டா அனந்து, இந்த வயசில யோகா கத்துகிட்டா… ஒடம்புக்கு நல்லதுடா! வா ராசா வா!" என்று கவிதை நடையில் ரைமிங்கா கூப்பிட்ட அப்பாவிற்கு பதிலாக... ”போப்பா ஒனக்குத்தான் வேலை இல்லே, எனக்கு ஸ்கூல் ஹோம்ஒர்க் இருக்குப்பா. நான் ஸ்கூல் பேக் தூக்கி போறதே யோகாதாம்பா” என்றான்.
”இந்த வயசிலேயே அப்பா சொல்றத கேக்குறது இல்லே!... நீயெல்லாம் என்ன படிச்சு…" என்று முனகிக் கொண்டே வெளியே சென்றார் அப்பா.
அப்பா இருக்கும் வரை, யோகா பத்தி நினைவே இல்லாமல், படித்து பட்டம் பெற்று உயர்நிலை அதிகாரியாக சுழலும் நாற்காலியில் சுழன்று கொண்டிருக்கிறான் அனந்து. அவனுக்கு கீழ் ஐந்தாறு பணியாளர்கள்.
அனந்து சுழற்றும் வாய்வீச்சுக்கெல்லாம்... சுழன்று சுழன்று யோகா செய்யாத குறையாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள் அப்பணியாளர்கள். அப்படி பென்ட் எடுத்து விடுகிறான் அனந்து.
அன்று, அனந்து தன்னுடைய டேபிளில் இருந்த ஒரு பைல் கீழே விழுந்து விட, அதை எடுக்க சாதாரணமாக குனிந்தான்... திடீரென இடுப்பில் சுளுக்கு பிடித்து கொண்டது.