சிறப்பு: இந்திய நாட்டின் பாதுகாப்பு மணிமகுடம்... உலகின் உயரமான விமானப்படைத் தளம்... எங்கே உள்ளது தெரியுமா?

Airplane
worlds highest airbase
Published on
Kalki Strip
Kalki Strip

ஆகாய விமானத்தை, 1903 ஆம் ஆண்டு ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்துப் பறந்து காட்டியது வரலாறு! கடந்த 120+ ஆண்டுகளில் அது பெற்றுள்ள வளர்ச்சி ஆச்சரியமானதும், ஆனந்த அதிர்ச்சி அளிப்பதுமாகும்!

200+ நாடுகள் கொண்ட பூமிப்பந்தை, க்ளோபல் வில்லேஜ் (global village) அதாவது உலகளாவிய கிராமம் ஆக்கியதில் பெரும் பங்கு, தொலைத் தொடர்போடு, இந்த ஏரோப்ளேனுக்கும் உண்டு.

ப்ரேக் ஃபாஸ்டைச் சென்னையில் முடித்து விட்டு ப்ளைட் ஏறினால், துபாயில் லஞ்சை முடித்துவிட்டு, லேட் நைட் டின்னரை சுவிட்சர்லாந்தில் சாப்பிட்டுத் தூங்கச் செல்லலாம். அந்த அளவுக்கு விரைவாகி விட்டது உலகம்!

நான் சிறுவனாக இருந்தபோது, எங்களூரிலிருந்து சிங்கப்பூர் செல்பவர்கள், நாகப்பட்டிணம் துறைமுகம் சென்று, தூரத்தில் நங்கூரம் பாய்ச்சி நிற்கும் கப்பலில் ஏறப் படகில் போய், கப்பலில் ஏறி, சுமார் ஒரு வாரக் கடற்பயணத்திற்குப் பிறகே சிங்கப்பூரை அடைவார்களாம்.

ம்! அதெல்லாம் அந்தக் காலம்! என்று சொல்ல வைத்தவை நமது ஆகாய விமானங்களே! இப்பொழுதெல்லாம் ஊரிலிருந்து வந்து விமானத்தில் உறவினர்களைச் சிங்கப்பூர் அனுப்புபவர்கள், திரும்பி ஊருக்குச் செல்லப் பாதி தூரம் போவதற்குள்ளாகவே, சிங்கப்பூர் செல்பவர், நலமுடன் சேர்ந்துவிட்டதாகச் செய்தி வந்து விடுகிறது. ப்ளைட்டுகள் பயண நேரத்தைக் குறைத்து, பயணங்களை இனிமையாக்கி, உலகத்தைச் சிறியதாக்கி, உள்ளங்களைச் செழுமையாக்கி வருகின்றன.

இது ஒரு புறமென்றால், நாடுகள் தங்கள் பாதுகாப்பை மேலும் உறுதி செய்து கொள்ள விமானப் படையை வளர்த்துக் கொள்கிறார்கள். விமானங்களை ஏற்றவும், இறக்கவும் பயன்படும் விமானப்படை தளங்களையும் (worlds highest air base) அமைத்துக் கொள்கிறார்கள். அந்த விதத்தில் உலகத்திலேயே மிகவும் உயரமான விமானப் படை தளம் உள்ள நாடு எது என்பதைச் சொன்னால், காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு களிப்படைவீர்கள்.

மக்கட் தொகையில் நம் நாடு மகத்தான இடத்தைப்பெற்று முன்னிலை வகிப்பதைப் போல, இன்னும் பலவற்றிலும் விரைந்து முன்னுக்கு வந்து கொண்டுதான் இருக்கிறது.

புவியிலேயே அதிக உயரமான இடத்தில் விமானப்படைத் தளத்தை அமைத்துப் பயன்படுத்தி வருவது நமது நாடுதான்!லடாக்கில் உள்ள நியோமா (Nyoma) கிராமத்தில் இத்தளம் அமைக்கப்பட்டுப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த இடம் 13,700 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மிகவும் நீளமான ஓடு பாதையையும் (runway) கொண்டுள்ளது. ரன்வேயின் நீளம் 2.7 கி.மீ., அதோடு மட்டுமல்ல! உடலையே உறையச் செய்யும் -40 டிகிரி குளிரிலும் இந்தத் தளம் இயங்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நமது இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு மணிமகுடமாக இது விளங்குகிறது. இமாலயப் பகுதியில் நமது படைகளின் பாதுகாப்பு இதன் மூலம் மேலும் சிறப்படைகிறது.

நமது நாட்டின் விமானப்படையின் வளர்ச்சியில் இது ஒரு மகத்தான சாதனை! இதனை நினைத்து நாம் ஒவ்வொருவரும் பெருமைப்படலாம். ஜெய்ஹிந்த்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com