“ஆள் பார்த்து ஆடுற குரங்கு, புலி முன்னால் ஆடுமா?”

எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்களின் 78வது (ஜூலை 5) பிறந்த தினம் இன்று!
“ஆள் பார்த்து ஆடுற குரங்கு, புலி முன்னால் ஆடுமா?”

றவுச்சிக்கலை தைரியமாக எடுத்துச்சொன்னவர். பலவீனங்களை தைரியமாக அணுகி அதைப் பற்றி பேசி புரிய வைத்தவர். அவரின் சிறுகதைகள் ஒவ்வொன்றும் நறுக்குத் தெறித்தாற்போல் இருக்கும். (கல்லூரி காலங்களில் அவரின் கதைகளை அக்குவேறு ஆணிவேறாக விமர்சித்ததெல்லாம் இப்பொழுது ஒவ்வொன்றாக நினைவில் வருகிறது).

அவர் தொடர்களுக்கு வைக்கும் பெயர்  ஒவ்வொன்றும் கவித்துவமாக இருக்கும். (அதைப் பற்றி பேசவே ஒரு வகுப்பு தேவைப்படும்). மெர்குரி பூக்கள், தாயுமானவன், இரும்பு குதிரை இப்படி நிறைய... ‘மனித மனம்' ‘வாழ்வு' குறித்து என்ன அசை போடுகிறதோ அதை தன் எழுத்தில் கொடுத்து நம்மை ஆசுவாசப்படுத்தியவர்.

பெண்களின் உளவியல் தெரிந்து எழுதுவதில் அவருக்கு நிகர் அவரே! பெண்களிடம் பொதுவாக ஆண்கள் கவனிக்கத் தவறும் சில குணாதிசயங்களைக் கவனித்து(சரியாகக் கணித்து) எழுதும் சாமர்த்தியம் அவருக்கு அதிகம். அது நிறைய பேருக்கு பிடிக்கும். (எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்).
உறவுகள், மனித உணர்வுகள், சிறு அத்துமீறல்கள் அவற்றின் நியாயங்கள் எல்லாவற்றையும் அவர் அலசும் விதமே அலாதி. நடுத்தர வர்க்கத்து மக்களின் உட்குரலாகவே அவரின் கதைகள் பெரும்பாலும் ஒலிக்கும். (அதைப் படிக்கும்போது அந்தக் கதை மாந்தர்களை நாம் நம் வாழ்க்கையில் தேடச் செய்வோம் என்பதும் உண்மை).

ரு முறை காயிதே மில்லத் கல்லூரியில் புத்தக கண்காட்சி நடந்தபோது அவரை சந்தித்து பேசும் வாய்ப்பு கிட்டியது. ( மிகப்பெரிய எழுத்தாளர் அவ்வளவு எளிமையாய்) ‘உடையார்’ நாவலில் அவர் கையெழுத்து இட்டுக் கொடுத்தது கல்வெட்டாய் நெஞ்சுக்குள்…
"நம் பிரச்னைகளுக்குக் காரணம் நம்முடைய தவறான கருத்துகளே. அடுத்தவரைப் பற்றிய தவறான எடை போடல், தன்னைப் பற்றிய அபத்தமான அவநம்பிக்கை, அதனால் ஏற்படும் கோபம், பொறாமை, ஆத்திரம் போன்றவைகளே... " இந்த வரிகளைப் படித்ததில் இருந்து பிரச்னைகளை சற்று தள்ளி நின்று பார்க்கக் கற்றுக்கொண்டேன். அதில் வெற்றியும் கண்டேன்.

பாலகுமாரனின் இன்னொரு முக்கியமான தத்துவம்...
"ஆசைப்பட்ட பொருள்
ஆசைப்பட்ட நேரத்தில்
ஆசைப்பட்ட விதத்தில்
கிடைக்காமல் போவதுதான்
வாழ்க்கையின் சுவாரசியம்".  

நான் யாருக்கு கடிதம் எழுதினாலும்  இதை எழுதிய பிறகு(கே) கடிதத்தை தொடர்வது  வழக்கம். அந்த அளவுக்கு வாழ்க்கையில் பல சமயங்களில் இந்தத் தத்துவத்தைப் பொருத்திப் பார்த்ததுண்டு. (பார்ப்பதுண்டு)
"அமைதிதான் ஆரம்பம். அமைதிதான் முடிவு. நடுவில் மட்டும் ஆரவாரிப்பானேன்? ஆரவாரித்தவர்கள் யாருமே சந்தோஷமாக இருந்ததில்லை. சந்தோஷம் இல்லாது போய்விடுமோ என்கிற பயம்தான் ஆரவாரத்திற்குக் காரணம்."

இந்த வரிகளை படிக்கும்போது, மனதிற்குள் கற்றது கைமண் அளவு... கல்லாதது உலகளவு... என்பது நிறைய பேருக்கு புரியவில்லையோ?! என்று தோன்றும்.
"எந்த வெற்றியையும் மனதில் ஏற்றிக்கொள்ளவும் கூடாது அதேபோல் தோல்வியையும் மனதில் புக இடம் தரவும் கூடாது." இதைவிட அழகாக சொல்லிவிடமுடியுமா என்ன? 

"நம் இயல்பு மாறாமல் எப்பவும் ஒரே மாதிரியாக இருப்பது உடலுக்கும் மனதுக்கும் நல்லது!
கோபம் ங்கிறது
ஒரு அலட்டல்
ஒரு கர்வம்
ஆள் பார்த்து ஆடுற குரங்கு
புலி முன்னால் ஆடுமா?
சுருட்டுக்கினு ஓடும்."

இது எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்பப் பிடித்த பொன்மொழி…

கர்வம் என்பது ஓர் அவசியமற்ற உதவாக்கரை என்பதே அப்பட்டமான உண்மை... அப்படி என்றால் கர்வமே வரக்கூடாதா?

கர்வம் வரலாம்... ஒரு நிபந்தனையுடன். "அடுத்தவர் கண்ணீரைத் துடைக்கிற விரல்களுக்கு சொந்தக்காரராக நாம் இருந்தால் நிச்சயம் கர்வப்பட்டுக்கொள்ளலாம் (அந்தச் சந்தர்ப்பங்களில் மட்டும்.!)

"நீ சரியான செயலை செய்யும்போது கோபப்பட எந்த அவசியமும் இல்லை. நீ தவறான செயலை செய்யும்போது கோபப்பட எந்த உரிமையும் இல்லை..." இதை என் மனதிற்குள் அடிக்கடி சொல்லிக்கொள்வேன்.

"மௌனம்தான் மிகப்பெரிய தவம். மௌனம் என்பது வெளியே பேசாதிருத்தல் மட்டுமல்ல…  உள்ளேயும் பேசாதிருத்தல்" என அவர் கூறியது எனக்கே எனக்கு கூறியதுபோல் இருக்கும். பல நேரங்களில் மௌனத்தை பேசவிட்டு  வெற்றியை ருசி பார்த்திருக்கிறேன்.!

இதையும் படியுங்கள்:
மனதை உறுதியைப் பெற வைக்கும் 5 வழிகள்!
“ஆள் பார்த்து ஆடுற குரங்கு, புலி முன்னால் ஆடுமா?”

"தன்னையும் நம்பாமல் கடவுளையும் நம்பாமல் இருக்கிறவனுக்கு பதட்டம்தான் வரும். பதட்டமாக இருந்தால் உடல் நலம் பாதிக்கும். பதட்டம் இல்லாமல் இருக்கிறதுக்கு இரண்டு வழி உண்டு. ஒண்ணு தீவிரமா யோசிக்கிறது இரண்டு தைரியமா நம்ம விரும்புற கடவுள் மேல பாரத்தை போடறது..."

ராஜராஜ சோழனை உடையாராகவும், ராஜேந்திர சோழனை கங்கைகொண்டானாகவும், சிறப்பித்து தமிழை வளர்த்த எழுத்து சித்தரின் எழுத்துகள் மனதிற்குள் என்றும் சுடர் விட்டுக்கொண்டேதான் இருக்கும்.. 
வாழ்க்கையை உளி கொண்டு செதுக்கவல்லது... அவரின் எழுத்துகள்!
அவரின் உடலுக்குதான் மரணம்... அவரின் எழுத்துக்களுக்கு என்றுமே ஜனனம்'தான்! 78வது பிறந்த தினத்தில் அவரை வணங்குகிறேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com