
-பிரபஞ்சன்
பிந்து, மரத்தடியில் போட்டிருந்த கள்ளிப் பெட்டியின் மேல் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தாள்.
அப்பா, காய்கறிகளைத் தண்ணீரில் கழுவிக் களைந்து, தட்டுகளில் போட்டுக்கொண்டிருந்தார். அருகே அம்மா. கீரைகளைக் கட்டுக்கட்டாகக் கட்டிக்கொண்டிருந்தாள். அம்மா கேட்டாள்.
"கத்தரி, வெறும் சொத்தையா இருக்கே. எறிஞ்சுடலாமா?"
"மூடிக்கிட்டு இரு. உன் அப்பன் கொடுத்த சீதனம் இல்லை" என்றார் அப்பா.
பிந்துவுக்கு எரிச்சலாக இருந்தது. இந்த அப்பா எப்பவுமே இப்படித்தான். அப்பா சிரித்தே அவள் பார்த்ததில்லையே.
அம்மா வேலையை முடித்துக் கிளம்பினாள்.
"வரியாடி?"
"நீ போ... அவ, படிக்கிறவளை என்னத்துக்கு எழுப்பறே?"
வியாபாரம் தொடங்கிற்று. எடை போடுவதும். பேரம் பேசுவதுமாக, இருந்தார் அப்பா.
"நல்ல கத்தரிக்காயா?" என்றாள் ஆடிட்டர் சம்ஸாரம். ஏமாறுவதற்கு என்றே ஜனித்த பிறப்பு, அந்த அம்மாள். ஸ்பஷ்டமாக முகத்தில் எழுதி இருந்தது, களை.
"பிஞ்சு. காம்பிலே நீர் கசியுது பாருங்க மாமி. எவ்வளவு போடட்டும்?" அப்பா மாமியைப் பேசவிடாமல், காயைத் தொட விடாமலும், அரைக் கிலோவைப் போட்டார்.