கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுத்தாளனாக உருவானதன் பின்னணி என்ன?

ஓவியம்; பிள்ளை
ஓவியம்; பிள்ளை

ருநாள் நாவல் ஒன்றைக் கிருஷ்ணமூர்த்தி (கல்கி) படித்து முடித்துவிட்டு, "பலே பேஷ்!" என்று வாய்விட்டுக் கூவிக்கொண்டே, அதைத் தட்டிக் கொடுத்து மூடியதை அய்யாசாமி அய்யர்  (பள்ளிக்கூட வாத்தியார்) கவனித்து, "அப்படி என்னடா பிரமாத நாவல்?" என்று கேட்டார். கிருஷ்ணமூர்த்தி அந்த நாவலின் கதையைச் சொல்லவே, "நன்றாய் இருக்கிறதே, நானும் படித்துப் பார்க்கிறேன்" என்று அதை வாங்கிக்கொண்டார். படித்து முடித்தபிறகு, சாரப்பிறை வழியே அவனை அவர் கூப்பிட்டு, "கதையின் முடிவு நீ சொன்ன மாதிரி இல்லையே!" என்று கூறினார்.

 "அப்படி முடிந்திருந்தால் இன்னும் நன்றாய் இருந்திருக்கும் அல்லவா?" என்று கிருஷ்ணமூர்த்தி கேட்டான். இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த (கல்கி) கிருஷ்ணமூர்த்தியின் அண்ணன், "இவன் இப்படித்தான் எந்தக் கதையைப் படித்துச் சொன்னாலும், தலையையோ வாலையோ மாற்றி விடுவான்" என்று குற்றம் சாட்டினான்.

தனது கிராமத்தில் காணாத, காண முடியாத விசித்திரமான ஆண்களும் பெண்களும் நிறைந்த நாவல்களைப் படிப்பதில் உண்டான மோகம், சிறுவன் கிருஷ்ணமூர்த்திக்கு முற்றிக்கொண்டது. எங்கிருந்தோ எப்படியெல்லாமோ திரட்டிய நாலைந்து நாவல்களை எடுத்துக்கொண்டு, ஆற்றங்கரை ஆல மரத்தை நோக்கிச் செல்லுவான். மரத்தடியில் சாய்ந்துகொண்டே ஆசையுடன் நாவல்களைப் படிப்பான். "பலே பலே" என்று பாராட்டுச் சொற்களைப் பொழிந்துகொண்டு பக்கங்களைப் புரட்டுவான். திடுக்கிடும் நிகழ்ச்சிகள் வரும்போது, “ஐயோ!” என்று கத்துவான். ஆச்சரியமான நிகழ்ச்சி என்றால், "போடு சக்கை!" மிகமிகச் சுவையான பகுதி ஒன்றைப் படித்து முடித்தால், "நாசமாய்ப் போச்சு!" அவனுடைய அகராதியில் அதற்கு, "பிரமாதம்" என்று பொருள். "சேச்சேச்சே!" "சீச்சீச்சீ" என்றாலும் உயர்ந்த பாராட்டே.

வறுத்த நிலக்கடலையை மடியில் கட்டிக்கொண்டு ஒவ்வொன்றாய் உடைத்துத் தின்றுகொண்டே படிப்பான்; கடலை தீர்ந்துபோனால், இலேசாக வலிக்கும்படி தலைமயிரைத் திருகிக்கொண்டே படிப்பான்; அல்லது கீழ் உதட்டை நிமிண்டிக்கொள்வான். அதன் மீதுள்ள மெல்லிய தோலை உரித்துக்கொள்வான். உதடு மிகவும் வலித்தால், அதை விட்டுவிட்டு, நெற்றியை விரல் நுனியால் தடவிக் கூச்சம் காட்டிக்கொண்டே படிப்பான். இவைகளெல்லாம் பிற்காலத்தில் அவருடைய சேஷ்டைகளாக நிலைத்துவிட்டன.

ஆலமரத்தடி அலுத்துப் போனால், வெகுதூரம் நடந்து, இருப்பைப்பட்டுக் கோயிலுக்குப் புத்தகமும் கையுமாய், வேர்க்கடலையும் மடியுமாய்ச் செல்லுவான். அங்கே உட்காருவதற்கு மரக்கிளைகள், புல் தரை, படிக்கற்கள், இடிந்து சாய்ந்த சுவர்கள் என்று வாய்ப்பான ஆசனங்கள் பல. ஏதாவது ஒன்றில் உட்கார்ந்து, பறவைகளின் இசையைக் கேட்டுக்கொண்டே, இலுப்பைப்பூவின் மணத்தில் சொக்கிக்கொண்டே, கதை உலக மாந்தருடன் உறவாடுவான். என்ன ஆனந்தம்!

கல்கி கிருஷ்ணமூர்த்தி
கல்கி கிருஷ்ணமூர்த்தி

ஏதேனும் ஒரு நாவல் அந்திப் பொழுதில்தான் கிருஷ்ணமூர்த்திக்குக் கிடைத்ததென்றால், அன்றிரவே அதை வாசித்துத் தீர்க்காவிட்டால் அவனுக்குத் தூக்கம் வராது. வீட்டுப் பெரிய திண்ணையில், பாயை விரித்துப் போட்டுக் கொண்டு தகர விளக்கின் மங்கல் ஒளியில் மண்ணெண்ணெய்ப் புகை நாற்றத்தையும் கொசுக் கடியையும் பொருட்படுத்தாமல் மாயக் கதை உலகில் புகுந்து விடுவான். எங்கெங்கோ யார் யாராகவோ மாறிவிடுவான். அற்புதப் புதையலைத் தேடி அலைவான். தேடுகையில் அலையலையாய் அபாயங்கள்; தேடிக் கண்ட பிறகு அடுக்கடுக்காய் ஆபத்துக்கள். எல்லாவற்றையும் தாண்டிக் கண்டுபிடிப்பது காணாமல் போவதை, ஒரு சிறு துரும்பையோ, துரும்பிலும் மெல்லிய ரேகையையோ கொண்டு துப்புத் துலக்கி மீட்பான். காதலியைக் கவர்ந்து செல்லும் கொடியவனைக் காடுமேடெல்லாம் துரத்திச் செல்வான். சிறைப்பட்டு, பலாத்காரத்துக்கு உள்ளாகிக் கற்பை இழக்கும் ஆபத்திலுள்ள அபலைப் பெண்ணைத் தக்க சமயத்தில் காப்பாற்றி விடுவான். காப்பாற்றுகையில் குறுக்கிடும் துஷ்டனுடன் முஷ்டி யுத்தம் செய்து அவனுடைய முழிகளைப் பெயர்ப்பான்; துஷ்டனுக்குத் துணையாய் வரும் கையாட்டங்களின் கைகளுடன் கால்களையும் ஒடித்துப் போடுவான். விடுதலை அடைந்த களிப்பில், “பிராண நாதா" என்று கூவி மூர்ச்சை போட்டு விழும் கனகாம்புஜத்தைக் கன ஜோராய்ப் புஜத்தில் தாங்கி அணைத்துக்கொள்வான்.

தமிழில் தரமான முன்னோடி நாவல்கள் என்று சாதாரணமாய் மூன்றைக் குறிப்பிடுவதுண்டு. பிரதாப முதலியார் சரித்திரம் - வேதநாயகம் பிள்ளை; கமலாம்பாள் சரித்திரம்- ராஜமையர்; பத்மாவதி சரித்திரம்- மாதவையா. இவற்றுடன் இன்னும் இரண்டு நாவல்களையும் இலக்கிய விமர்சகர் க.நா. சுப்பிரமணியம் சேர்த்துள்ளார். தீனதயாளு- நடேச சாஸ்திரி; காமாட்சி- பொன்னுசாமி பிள்ளை.

இந்த ஐந்து நாவல்களையும் அவற்றின் ஆசிரியர்கள் எழுதிய பிற நூல்களையும் கிருஷ்ணமூர்த்தி நிறையவே படித்திருப்பான். பிற்காலத்தில் தானே ஒரு மிகப்பெரிய எழுத்தாளனாக மிளிரப்போவது அன்று கிருஷ்ணமுர்த்திக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான். ஆனால் சிறு வயதில் அவனுக்கு கதைகளின்பால் இருந்த தீவிர  ஈர்ப்பு அவனை ஓர் எழுத்தாளனாக உருவாக்கியதில்  வியப்பில்லை தானே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com