
“வசுதேவ குடும்பகம் “
“உலகம் முழுவதும் ஒரே குடும்பம்”
ஒன்பதாவது சர்வதேச யோகா தினத்தின் இந்த வருடத்திற்கான தீம்..
இந்த வருடம் ஜூன் மாதம் 21ம் தேதியன்று, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நம் நாட்டின் பிரதமர் திரு. நரேந்திர மோதி பங்கேற்கும் சர்வ தேச யோகா தினத்தில் 180 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இணைகிறார்கள்.
கலைஞர்கள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள்,அரசு அதிகாரிகள், நல்லெண்ணத் தூதர்கள் என பல துறைகளிலிருந்தும் அன்றைய யோகாவில் பங்கேற்கிறார்கள்.
முதலில் 2014ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச யோகா தினம் கொண்டாடும் தீர்மானம் நிறைவேறியது. அன்று உரையாற்றிய திரு. மோதி அவர்கள், பூமிப் பந்தின் வட கோளத்தில் நீண்ட பகல் கொண்ட ஜூன் 21ம் தேதியைத் தேர்ந்தெடுத்தார். இது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு,
2015 ம் ஆண்டு நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கான (Yoga for Harmony and Peace) தீமுடன் தொடங்கப் பட்டது சர்வதேச யோகா தினம்.
பல விஷயங்களில் கருத்து வேறுபாடு கொண்ட உலக நாடுகளால், ஏன் எதனால் ஒற்றுமையுடன் யோகா ஏற்றுக் கொள்ளப்பட்டது?
அதுதான் நம் இந்திய மண்ணின் பெருமை…
மனிதர்கள், நாடுகள் இடையே ஒரு நல்லிணக்கம் வர வேண்டுமானால், முதலில் ஒரு மனிதனின் உடலுக்கும் மனதுக்கும் இடையே நல்லிணக்கம் வேண்டாமா? அதைத் தருகிற சுய ஒழுக்கத்தை , உள் மனக் கட்டுப்பாட்டை இயல்பாக நமக்குள் ஏற்படுத்தும் பயிற்சிதான் யோகா. அறிவியல் பார்வையுடன் சேர்ந்த ஒரு ஆன்மீக அனுபவம் மற்றும் கலை யோகா..
“யூஜ்” என்ற சொல்லுக்கு இணைத்தல் என்று பொருள்.
மனத்தையும் உடலையும் இணைப்பதால், யூஜ் மருவி யோகா ஆயிற்று என்பது பொதுவான கருத்து. அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் கலை யோகா.
நம் மன உணர்வுகளை இந்த பிரபஞ்சம் முழுதும் வியாபித்திருக்கும் பொது உணர்வுடன் இணைப்பதினால், மனிதருக்கும் இயற்கைக்கும் இடையே ஒரு புரிதல் ஏற்படுகிறது.
மனம் உடல் இரண்டும் ஒரு கட்டுப்பாட்டில் இயங்குகிறது. உடல் ஆரோக்கியத்துக்கு இது மிக மிக அவசியம்
பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொரு பொருளும், (நம்மையும் சேர்த்து) ஒரே அடிப்படையிலான ஒரு தொகுப்பிலிருந்து வெளிப்பட்ட பகுதிகள் தான் என்கிறது அறிவியல்.
கடவுள் உலகம் முழுதும் டோம் வடிவிலான ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்தார் என்று பைபிளின் மோசஸ் குறிப்பிடுவதும் அனேகமாக இந்த கருத்தை பிரதிபலிக்கிறது அல்லவா?
கோடிக்கணக்கானபேரைக் கவர்ந்த யோகா என்ற இந்தக் கலை, எங்கே தோன்றியது ?
பதஞ்சலி முனிவர் நவீன யோகாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். அவர் காலத்துக்கு முன்பே இந்தியாவில் 1800 வகையான யோகாசனங்கள் இந்தியாவில் இருந்தன.
அவற்றை யார் உருவாக்கியிருப்பார்கள்?
சுமார் பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இமய மலையில் பலர் ஒரு யோகியைப் பார்த்தனர். அவர் யார் எங்கிருந்து வந்தார் என்று யாருக்குக்கும் தெரியவில்லை.
பல நேரம் அசைவின்றி தியானத்தில் கண்களை மூடி இருந்தார். உணவு ஓய்வு என்ற எந்தக் கட்டுப்பாடும் அவரிடம் இல்லை. சில நேரம் பரவசமாக நடனம் ஆடினார். உடற்பயிற்சி போன்ற சில ஆசனங்களைச் செய்தார்.
இவற்றைக் கண்ட ஏழு பேர், தங்களுக்கும் அவற்றை கற்றுத்தர வேண்டுமென்று அவரிடம் பல நாட்கள் தொடர்ந்து வேண்டிக் கொண்டனர்.
சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரும் காலமான தக்ஷிணாயணத்தின் முதல் பௌர்ணமி அன்று அவருடைய பார்வை இந்த ஏழு சாதகர்கள் மீது விழ, மனமிரங்கி அவர் ஆசனங்கள் கற்றுத்தந்தார்.
அவரை ஆதி யோகியாக, தங்கள் முதல் யோகா குருவாக ஏற்று பல வருடங்கள் செய்து தேர்ச்சி பெற்றார்கள்.
ஆதியோகி அவர்களுக்கு “யோக விஞ்ஞானத்தை” வழங்கினார்.
தென்திசை நோக்கி அமர்ந்த ஆதி குருதான் தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.
ஆதியோகியின் யோகா ஞானத்தை சாதகம் செய்த ஏழு பேரும் சப்த ரிஷிகள் ஆவார்கள்.
1800 வகை யோகக் கலையை, எளிய சூத்திரங்கள் ஆக்கி எட்டு அங்கமாகப் பிரித்து எல்லோருக்கும் எளிதாக்கினார் பதஞ்சலி முனிவர். ஆக இந்தியாவில்தான் யோகா தோன்றியது என்பது உறுதியாகிறது.