யோகாவின் வரலாறு!

ஜூன் 21 - சர்வதேச யோகா தினம்!
யோகாவின் வரலாறு!
Updated on

தியோகியிடம் யோக ஞானம் பெற்ற ரிஷிகள் ஏழு பேரும் , ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் உட்பட உலகின் பல பகுதிகளுக்கும் சென்று யோகக் கலையைப் பரவச் செய்தார்கள்.

பல நாடுகளின் அடிப்படை பண்டைய  கலாசாரங்களில் சில ஒற்றுமைகள் இருப்பதை, இன்றைய அறிவியல் ஆராய்ச்சியாளர்களும் கண்டு வியப்படைகிறார்கள்.

சப்தரிஷிகளில் ஒருவரான அகத்திய முனிவர், இந்தியா முழுவதும் சென்று யோகாவை  வாழ்க்கைக் கல்வியாக்கி, பயிற்றுவித்தார்  என்று சொல்லப்படுகிறது.

3300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து சமவெளி  நாகரீகத்தில் கண்டெடுக்கப்பட்ட சில முத்திரைகள் மற்றும் பாறைப் படிமங்களில், யோகா சாதனா செய்யும் உருவங்களும் சிற்பங்களும் உள்ளன.

எனவே பண்டைய இந்தியாவிலேயே யோகாவை மக்கள் செய்து வந்திருக்கிறார்கள். கி.மு.1500க்கு முற்பட்ட ரிக் வேதத்தில் யோகா  பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

கி.மு.1200க்கு முந்தைய அதர்வ வேதத்தில் யோகா, மற்றும் பிராணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சி பற்றி சொல்லப்பட்டுள்ளது.

வேதங்கள் தவிர, பண்டைய மனிதரின் நாட்டுப் புற வாழ்க்கை முறைகள், உபநிஷத்துகள், புத்த, ஜைன மதக் கோட்பாடுகள், மகாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாசங்கள், ஸ்ம்ருதிகள் இவற்றில் எல்லாமே பரவலாக யோகா பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன

108 உபநிடதங்களில் உள்ள 20 யோக உபநிடதங்களும்  பிரத்யாஹாரா (புலன்களை விலக்குதல்), சுவாசப் பயிற்சிகள், ஒலி மற்றும் தியானம் போன்ற பல்வேறு யோக நுட்பங்களைப் பற்றி பேசுகின்றன.

சைவ, வைணவ மதங்களின் வழிபட்டு முறைகளிலும் யோகா சொல்லப்பட்டுள்ளது.

தெற்கு ஆசியாவின் சில பகுதிகளில், சில ரகசிய சடங்குகளில்  முழுமையான யோகா கடைப் பிடிக்கப் பட்டு வந்தது என்று ஒரு கருத்து நிலவுகிறது.

பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் ஆற்றும் உரை யெல்லாமே, பிரபஞ்ச உணர்வுக்கும் (கிருஷ்ணர்) மனித உணர்வுக்கும் (அர்ச்சுனர்) இடையே நடைபெறும் உரையாடல்களே.

வேத காலத்திற்கு முற்பட்டு ஆரம்பித்த யோகக் கலை, பதஞ்சலி முனிவரின் காலம் வரை தொடர்ச்சியாக மக்களால் கடைப் பிடிக்கப்பட்டு வந்துள்ளது.

இரண்டாம் நூற்றாண்டிலிருந்து, நான்காம் நூற்றாண்டு வரை இடைப்பட்ட காலத்தில் யோகாவின் தந்தையாகக் கருதப்படும் மகரிஷி பதஞ்சலி  வாழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

யோக சாஸ்திரம் எழுதிய  இந்த மாமுனிவர்,  196 சூத்திரங்களில் யோகா பயிற்சிகளை முறைப் படுத்தினார். யோகா மூலம் ஞானத்தையும், தன்னை உணரும் பரிபூரணத்தையும் அடையும் நெறிதான் அந்த சூத்திரங்கள்.

யோகாவின் அர்த்தத்தையும் , அது வழங்க வேண்டிய அறிவையும் போதித்தார்.

இந்த யோகம் ராஜயோகம் என்று அழைக்கப்பட்டது . 

யமங்கள் , நியமங்கள் , ஆசனங்கள், பிராணாயாமம் பிரத்யாஹார,  தாரணை , தியானம் மற்றும் சமாதி ஆகியவற்றை உள்ளடக்கிய அஷ்டாங்க யோகா என்னும் எட்டு அங்கங்களை யோகாவில் உருவாக்கினார்.

கி.மு.500லிருந்து, கி.பி 800 வ்ரையிலான காலகட்டம்,  யோகாவின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது எனலாம். தொடர்ந்து, ஆதி சங்காராச்சார்யா, ராமானுஜாச்சார்யா, மத்வாச்சார்யா போன்ற பெரும் மகான்கள்,  ராஜயோகம் மற்றும் ஞான யோகாவின் வளர்ச்சிக்காக, யோகாவைப் பற்றிய அறிவை மக்களிடம் கொண்டு சென்றனர்.

யோகாவின் போதனைகள் மற்றும் நுட்பங்களை ஏற்றுக்கொண்டு கட்டமைத்தனர்.

இந்த பயிற்சிகள் மூலம்  ஒருவர் முக்தி  அல்லது விடுதலையை அடைய முடியும் என்றும், மனதைத் தெளிவுபடுத்த தியானம் அவசியம் என்றும் எடுத்துரைத்தனர்.

சூர்தாசர், புரந்தரதாசர், துளசி தாசர், மீராபாய் . போன்றோரும் நாத யோகிகள் என்றே குறிப்பிடப் படுகிறார்கள். இவர்கள் காலத்தில் ஹத யோகம் பிரபலமாயிற்று.

இன்று பயிற்சி செய்யப்படும் பெரும்பாலான  ஆசனங்கள் ஹத யோகாவின் ஒரு பகுதியே. 

யோகா பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் மேற்குலகில் பரவியது. வேதாந்தம், பக்தி, ஹடயோகம் ஆகியவை இக்காலத்தில் வளர்ந்தன.

மேற்கத்திய நாடுகளில்  யோகா பரவுவதற்கு சுவாமி விவேகானந்தர் பெரிதும் காரணமாக இருந்தார்.bஅங்கே உடல் ஆரோக்கியம் முக்கியமாக கருதப்பட்டது.

ரமண மகரிஷி, ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் இவர்களோடு, பிகேஎஸ் ஐயங்கார், கே பட்டாபி ஜோயிஸ், பரமஹம்ச யோகானந்தா ஆகியோரால்  ராஜயோகம் மேலும் உருவாக்கப்பட்டது.

உலகம் முழுவதும் யோகாவைப் பரப்பியவர்களில் சுவாமி சிவானந்தா, டி.கிருஷ்ணமாச்சார்யா ஸ்ரீ அரவிந்தர், சுவாமி குவலாயனந்தா, மகரிஷி மகேஷ் யோகி, ஆசார்யா ரஜனீஷ்,சுவாமி சத்யானந்த சரஸ்வதி போன்றோர் முக்கியமானவர்கள்.

இன்று பாரதப்  பிரதமர் திரு. நரேந்திரமோதி அவர்கள், சர்வதேச யோகா தினத்தை  ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21ம் நாளன்று  பல நாட்டு மக்களுடன் சேர்ந்து அனுசரித்து வருகிறார்.

இப்படி எல்லா நாட்டு மக்களையும் கவர்ந்த யோகக் கலை நமக்கு எவ்விதம் அவசியமான ஒன்றாகிறது? 

logo
Kalki Online
kalkionline.com