
ஆன்மாவை கடவுளுடன் இணைத்து ஆன்ம பலத்தை அதிகரிக்கும் யோகாவில் ஏழு முக்கிய வகைகள் உள்ளன
ஹத யோகா, ராஜ யோகம், கர்ம யோகம் பக்தி யோகா, ஞான யோகா, தந்திர யோகா மற்றும் மந்திர யோகா.
தற்கால யோகாவின் தந்தையாகக் கருதப்படுபவர், மகரிஷி பதஞ்சலி யோக சாஸ்திரம் எழுதிய இந்த மாமுனிவர், 196 சூத்திரங்களில் யோகா பயிற்சிகளை முறைப்படுத்தினார்.
யோகாவின் அர்த்தத்தையும் , அது வழங்க வேண்டிய அறிவையும் போதித்தார்.
இந்த யோகம் ராஜயோகம் என்று அழைக்கப்பட்டது .
யமங்கள், நியமங்கள், ஆசனங்கள், பிராணாயாமம் பிரத்யாஹார, தாரணை, தியானம் மற்றும் சமாதி ஆகியவற்றை உள்ளடக்கிய அஷ்டாங்க யோகா என்னும் எட்டு அங்கங்களை யோகாவில் உருவாக்கினார்.
யோகா ஆசனங்கள் உடலை சுத்தப்படுத்தவும், உடல் நிலைத்தன்மை, சகிப்புத்தன்மை மற்றும் வலிமையை வழங்கவும் வடிவமைக்கப்பட்ட உடல் தோரணைகளின் ஒரு ஒழுங்குமுறை ஆகும் பதஞ்சலி முனிவர்,”ஸ்திரம் சுகம் ஆசனம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட அளவு நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும் சொல்லே யோகாசனம்.
மனதை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்தி செய்யப்படும் உடற்பயிற்சி இது.
ஆசனங்கள் என்பவை யோகக் கலையின் முதல்கட்டம் என்று சொல்லப்படுகிறது.
யோகாசனங்கள் அனைத்தும் மானிட உடம்பில் உள்ள தசை, எலும்பு, கல்லீரல் போன்ற உறுப்புக்களுக்காக செய்யப்படுகின்றன.
சில யோகாசனங்கள் இரத்த ஒட்டத்தை சீர்படுத்தினாலும் அவை இரத்த ஒட்டத்திற்காக மட்டும் செய்யப்படும் பயிற்சி ஆகாது. இதைப் போலவே சில யோகாசனங்கள் சுவாசத்தைச் சீர்ப்படுத்தினாலும், சுவாசம் சீர்ப்படுத்தலுக்கு என்று சுவாச சுபந்தனம் பிராணயாமா போன்ற தனிப்பயிற்சிகள் உள்ளன.
அதனால் யோகாசனம் என்பது உடற்பயிற்சியும் அவை சார்ந்த நிலைகளும் மட்டுமே. யோகாசனங்களில், 84 அடிப்படை ஆசனங்கள் உள்ளன. நின்று செய்யும் ஆசனங்கள், அமர்ந்து செய்வது, மல்லாக்கப் படுத்து அல்லது கவிழ்ந்து படுத்து செய்வது என்று ஆசனங்களில் பல நிலைகள் உள்ளன.
அதே போல் யோகாவில் பல ஸ்டைல் எனப்படும் பாணிகளும் இருக்கின்றன. தோப்புக்கர்ணம், பத்மாசனம் பர்வதாசனம், தனுராசனம் போன்ற பல எளிய ஆசனங்கள், சிறார்கள் செய்யத் தகுந்தவை.
மற்றவர்களுக்காக நூற்றுக்கணக்கான ஆசனங்கள் உள்ளன. முக்கிய ஆசனங்கள் ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.
உத்தித ஹஸ்த பாதாங்குஸ்தானம்
கால்கள் மற்றும் கணுக்கால் பகுதிகளை பலமாக்கும் ஆசனம் இது.
சசகங்காசனம்
கைகள், தோள்கள் மற்றும் மேல் முதுகில் பலப்படுத்த உதவுகிறது. தொடர்ந்து செய்தால் முதுகெலும்பு சிக்கல்களைக் குறைக்க முடியும்.
சர்வங்காசனம்
இதயத்தில் அழுத்தம் இல்லாமல் இரத்த ஓட்டத்தை சீராக்கவும், தைராய்ட் பிர்ச்னை வராமல் காக்கவும் உதவும்.
வீரபத்ராசனம்
கவனம், சமநிலை மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துகிறது. உடலில் நல்லசுழற்சி உண்டாவதால் சுவாசத்தை சரியாக்கி உடல் முழுவதும் உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவும்.
உத்தன்படசனா
ஜீரணஉறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு,மலச்சிக்கல் பிரச்சனையை நீக்குகிறது.கணையம் மற்றும் நீரிழவு நோயால் பாதிக்கப்படுவர்களுக்கு இந்த ஆசனம் மிகவும் நல்லது.
தடாசனா
தொடை, முழங்கால், கணுக்கால் பகுதிகளை பலப்படுத்துகிறது. மேலும் இடுப்பு, கால், மற்றும் பாதங்கள் வலிமை பெறுகிறது.
திரிகோணாசனா
இடுப்பு மற்றும் தொடைகளிலுள்ள கொழுப்புகளை நீக்குவதற்கான ஆசனம் இது.
இவற்றைப் போல பல வித ஆசனங்கள் உள்ளன. அவற்றை தகுந்த முறைப்படி ஆசான் ஒருவரிடம் கற்பதுதான் சிறந்தது. யோகா செய்ய சில விதி முறைகளைப் பின் பற்றுவது நல்லது.
இந்தியாவின் வெப்ப மண்டல பகுதிகளில் யோகா செய்வதானால் காலை 8.30 மணிக்கு முன் அல்லது மாலை 4, 4.30 க்கு பிறகு செய்ய வேண்டும்.
உடல் சுத்தம் செய்யும் சில கடமைகளை முடித்து பயிற்சிகள் ஆரம்பிக்கலாம். வெறும் தரையில் செய்யக் கூடாது. துணி விரித்து கொள்ளலாம். வெறும் வயிறோடு தான் பயிற்சி செய்ய வேண்டும்.
நேரம் கிடைக்க வில்லையெனில் உணவு முடிந்து 6 மணி நேரம் கழித்தே பயிற்சி செய்ய வேண்டும்.
சர்வதேச யோகா தினத்தில், யோகா பயிற்சிகளில் ஈடுபட்டு உடல் மற்றும் மனம் இரண்டையும் நலம் காப்போம்.