‘சிம்ப்ஸன்’ நீலகண்டன் ’90 களில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி நாயுடு தெரு என்பது ஒரு அலாதியான இடம். மற்ற தெருக்களில் உயர உயரமான மேன்ஷன்கள் அடுத்தடுத்து அடைத்துக்கிடந்தாலும் இந்த சிறிய தெரு மட்டும் சாதாரண வீடுகளுடன் அடக்கமாகவும் கொஞ்சம் விஸ்தாரமாகவும் காணப்படும். கடற்கரைச் சாலைக்குப் பிறகு சேப்பாக்கம் மைதானம், கோஷா மருத்துவமனை, பைகிராஃப்ட் தெரு இறக்கம் என்று அமைந்து கடல்காற்று சுகமாக வாரிக்கொண்டு வீசும். அதனாலேயே வார இறுதிகளில் மாலை நேரங்களில் மேன்ஷன்வாசிகள் அங்கங்கே கொத்துக் கொத்தாக நின்றபடியும் சைக்கிள்களில் அமர்ந்தபடியும் அரட்டை அடிப்பதைப் பார்க்கலாம். இப்போது எப்படியோ தெரியாது. கண்டிப்பாக அதன் முகம் மிகவும் மாறிப்போயிருக்கும். அப்படித்தான் ஒரு சனிக்கிழமை மதியம் ‘காசி வினாயகா’ மெஸ்ஸில் சாப்பாடு வரிசையில் வெளியே நின்றிருந்தோம். நண்பர் ரமணிக்குப் பசி மிஞ்சி விட்டிருந்தது. வரிசையும் பெரிதாக இருந்தது. கொஞ்சம் சத்தமாகவே அலுத்துக்கொண்டார். ‘அய்யோ... மெதுவா ரமணி’ என்று நான் சொன்னாலும் யாரும் அதை சட்டை செய்ததாகத் தெரியவில்லை. ஆனால், வரிசையின் முன்னால் நின்றிருந்த ஒருவருக்கு கேட்டிருந்தது போலும். “ஹேய்... ரமணி... ஹேய்... இங்க... இங்க... நாந்தான்.. இங்க நிக்கறதைப் பார்க்கலையா? சீக்கிரம் வாங்கடான்னா எங்கயோ நின்னு பராக்குப் பார்க்கறீங்களே... வா... டோக்கன் போட்டாச்சு... சீக்கிரம்..“ என்று எங்களைப் பார்த்து கை அசைத்தார். நம்மையா வேறு யாரோவையா என்று திகைத்து நிற்கும்போது அவரே பக்கத்தில் வந்து ரமணியின் கையைப் பிடித்து இழுத்துப்போனார். கூடவே நானும். “நீங்க வரும்போதே பார்த்தேன். நொந்து போயிருந்தீங்க. இப்ப புலம்பினதும் காதுல விழுந்தது. என்கூட நில்லுங்க. அடுத்த பேட்ச் உள்ள போயிடலாம். இதெல்லாம் ஒண்ணும் தப்பில்ல” என்று வரிசையின் முன்னே அழைத்துவந்துவிட்டார். கண்களைச் சிமிட்டி சிரித்தார். எங்களுக்கு ஒன்றும் புரியாவிட்டாலும் நாங்களும் கண்களாலேயே நன்றி சொன்னோம். சாப்பாட்டிற்குப் பிறகு அவருடன் பேசியபடியே எங்கள் அறைக்கு அழைத்து வந்தோம். அப்படி ஆரம்பித்த பழக்கம் அவர் அறை எங்கள் அறை என மாறி மாறி போக்குவரவுடன் வளர்ந்தது. ரமணி கும்பகோணம் என்பதாலும் அவரின் பூர்வீகமும் கும்பகோணம் அண்ணல் அக்ரஹாரம் என்பதாலும் இன்னமும் நெருக்கமாகிப் போனார். சிரித்த முகம். நிருநீற்றுப்பட்டை இல்லாமல் அவரைப் பார்ப்பது இல்லை. முழுதும் வெளுத்துப்போன தலைமயிரை படிய வாரியிருப்பார். கழுத்தில் இரட்டை ருத்திராட்சம் (“கௌரிசங்கர்... அபூர்வமாக்கும்”) பெரும்பாலும் வெள்ளை சட்டை, வேட்டி. அலுவலுக்குப் போகும்போது மட்டும் பேண்ட். குடும்பம் எல்லாம் தற்போது திருநெல்வேலி அருகில் எங்கோ ஒரு கிராமத்தில். அவர் 6 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே போய்வருவார். இங்கே அவருக்கு “சிம்ப்ஸன்ஸ்” கம்பெனியில் கோ-ஆர்டினேடர் வேலை. சென்னைக்கு உள்ளும் வெளியிலும் இருக்கும் அதன் அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு அடிக்கடி போய்வரவேண்டி இருக்கும். “அது பெரிய குரூப் தெரியுமா? அமால்கமேஷன்ஸ் குரூப். சிம்ப்ஸன், அடிசன், டஃபே, ஹிக்கின்பாதம்ஸ், பிஸ்டன் அது இது லொட்டு லொசுக்குன்னு அவங்க இல்லாத இடமே இல்லை. சேர்மன் சிவசைலம் என்னை நேரடியா இண்டர்வ்யூ பண்ணி எடுத்தார் தெரியுமா! வந்தேன். சேர்ந்தேன். அது ஆச்சு 30 வருஷம். கம்பெனி பேர் என் பேர்கூட ஒட்டிக்கிற அளவுக்கு லாயல்டி !! இன்னும் நாலோ அஞ்சோ வருஷந்தான். அக்கடான்னு கால் நீட்டி திண்ணைல உக்காரணும்னுதான் ஆசை” ஓய்வு பெறவேண்டும் என்று சொல்வாரே தவிர, வார இறுதிகளில் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் ஏதேதோ வேலைகள் வைத்திருப்பார். நண்பர்கள், சக பணியாளர்கள் வீடுகளில் நல்லது கெட்டது, யாரோ ஏழை சிறுவர்கள் இளைஞர்களுக்கு படிப்பு, கல்லூரியில் இடம், ஊருக்கு புதிதாக வரும் ஒருவருக்கு தங்க இடம் அல்லது வேலை, சிலருடைய காலேஜ் ஃபீசுக்கு டொனேஷன் கேட்டு அலைவது, கான்சர் இன்ஸ்டிட்யூட் நோயாளிகளைப் பார்க்கப் போவது என்று பரபரப்பாக இருப்பார். அவரைப் பார்க்க நாங்கள் என்னவோ வாரம் முழுதும் வெட்டிமுறித்தாற்போல சினிமா அல்லது கடற்கரை என்று சுற்றுவது கொஞ்சம் வெட்கமாவே இருக்கும். ஆனாலும் நாங்கள் ஒன்றும் மாறிவிடவில்லை. எப்போதாவது அவருக்கு ஒரு சில சில்லறை உதவிகள் செய்வதோடு சரி. எங்கள் ஆச்சரியமெல்லாம் அவர் பல இடங்களில் மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காக கொஞ்சம்கூட கூச்சமோ கவலையோ இல்லாமல் சும்மாவாவது ‘அள்ளி விடுவது’தான். “சார்... பையன் யார் தெரியுமா? தேசிகர் பரம்பரை. எள்ளுன்னா எண்ணெய். அதுக்குன்னு காது கேக்காதா? அதிகப்பிரசங்கியான்னு குறுக்க கேக்காதேங்கோ. சூட்டிகைன்னு சொல்லவந்தேன்” என்று கடகடவெனச் சிரிப்பார். பையனோ எங்காவது பராக்குப் பார்த்துக்கொண்டு நிற்பான். “என்ன சார் நீங்கபாட்டுக்கு சொல்லிட்டிங்க. பையனைப் பார்த்தா..” “ஒண்ணும் தப்பில்ல. அவனுக்கு ஒரு கால் வைக்க இடம் பண்ணிக்குடுத்தா... அப்பறம் அவன் சமத்து. ரெண்டு காலும் வெச்சு ஊனி நிக்கறானா.. பயந்துபோய் ஓடறானாங்கறதெல்லாம் அவன் பாடு.. ” இப்படி இந்த ‘ஒண்ணும் தப்பில்ல’ சொற்கள் பார்க்கும்போதெல்லாம் பேசும்போதெல்லாம் அங்கங்கே அவ்வப்போது தெறித்து விழுந்துகொண்டேயிருக்கும். “நேத்து திருவள்ளூர் ஃபேக்டரி வரைக்கும் போகவேண்டி வந்துது. ரயில்லயா எள்ளுப் போட இடமில்ல. ஒரு பெருவயசு தம்பதியானா தவிக்கறா. பார்த்தேன்... ஃபர்ஸ்ட் க்ளாஸ் கம்பார்ட்மெண்ட்ல ஏத்தி நானும் உக்காந்துண்டேன். சொல்லி வெச்சாப்ல செக்கிங் வந்தா. ரயில்வே யூனியன் ப்ரசிடெண்டு கன்னையாவோட தோப்பனார்னு என்னவோ தோணினதச் சொன்னேன். அதெல்லாம் சரி சார்... இப்படியெல்லாம் இனிமே வராதீங்கனு சும்மா வார்ன் பண்ணி விட்டுட்டான். அவ்வளவுதான்... நமக்கு காரியம் ஆச்சு. என்ன தப்பு தட்டுக்கெடறது? இனிமே அவா யாரோ நாம யாரோ. மறுபடி பாக்கவா போறோம்” “சார்... நீங்க ரொம்ப டேஞ்சர் ஆளு சார்” “டேஞ்சரும் இல்ல. ஒண்ணும் இல்ல. காபி சாப்படலாம் வாங்க” ஒருநாள் மாலை மெஸ்ஸில் பார்த்தபோது பையோடு வந்திருந்தார். “கலீக் ஒருத்தன்... சேகர்னு பேர். சின்ன வயசுதான். ஆனா மேல அழைச்சுண்டுட்டா. இன்னிக்கு வழக்கம்போல ஆபீஸ் வந்தவன் போயே போயிட்டான். பம்மல் பக்கம் அக்ரஹாரத்துல இருக்கா. எப்படித்தான் தினம் சிந்தாதிரிப்பேட்ட வரைக்கும் வந்து போயிண்டுருந்தானோ. தோ சாப்டதும் கையோட கொஞ்சம் அவா ஹெல்புக்குப் போறேன்” என்றார். போய் ஒரு வாரமாகியும் வரவில்லை. ரமணிதான் கொஞ்சம் மாய்ந்து போனார். அவர்களுக்கு உதவப் போய் இவருக்கு ஏதாவது ஆகிவிட்டதா என்று கவலைப்பட்டார். சிம்ப்ஸன் ஆபீசுக்கு போன் செய்து விவரம் சொல்லி பம்மல் வீடு விலாசம் வாங்கிவந்தார். சனிக்கிழமை துணி தோய்ப்பது போன்ற வேலைகளுக்குப் பிறகு மதியத்துக்கு மேல் அவரும் நானும் பம்மல் போனோம். அந்த அத்துவானத்தில் வீடு தேடிக் கண்டுபிடித்துப் போனால் வாசல் திண்ணையிலேயே உட்கார்ந்தபடி கண் அயர்ந்திருந்தார். “அட... நீங்க எப்படி இங்க? உங்களுக்கும் சேகரை தெரியுமா என்ன? தாயாதியா?” “இல்ல சார். உங்களைப் பார்க்கத்தான் வந்தேன். ஆளையே காணோமே... உங்களுக்கு எதாவது ஆயிடுத்தோன்னு...” என்று ரமணி இழுத்தார். .“எனக்கென்ன... உரல் மாதிரி இருக்கேன். இருங்கோ காபி கொண்டுவரேன்” என்று உள்ளே போனவர் செம்பில் காபியும் தம்ளர்களுடனும் வந்தார். “என்னத்தச் சொல்ல... போன வாரம் வரைக்கும் கல்லுக்குண்டாட்டம் நன்னாத்தானே இருந்தான் சேகர். இன்னிக்குப் பத்து. யாருக்கு எப்ப கணக்கை க்ளோஸ் பண்ணப்போறான்னு யாருக்குத் தெரியறது? ஹ்ம்ம்…. பாவம் சேகர்!! அதட்டலாக்கூட பேச வராதே அவனுக்கு. மேனேஜர் கடங்காரனுக்கு இவன்னா கிள்ளுக்கீரை. போக வர இவனை அரைக்கறதே அவனுக்கு வேலை. நானும் எவ்வளவோ சொல்லி அலுத்துப் போயிட்டேன். ‘இப்பிடி பொதி கழுத மாதிரி அவன் சொல்ற வேலையெல்லாம் இழுத்துப் போட்டுண்டு செய்யாதடா…. அவனுக்குத் தொக்காப் போச்சு. மேல மேல போடறான். நீயும் கை ஒடிய வேலை பண்ணற. காக்காசுக்குப் பிரயோஜனமில்ல. கடேசில இங்கேயும் கெட்ட பேரு. ஆம்படையா கிட்டயும் வாங்கிக்கட்டிக்கற’ ம்ஹூம். இவனை மாதிரி பிரக்ருதிகள் இப்படியேதான் இருப்பாளோ? சிம்ப்ஸன்ல அப்பிடியும் சில மேனேஜர் பாவிகள்; இப்படியும் சில அப்பாவிகள். சித்த இருங்கோ… அங்க யாரோ நீலகண்டா நீலகண்டான்னு எம்பேர ஏலம் போட்டுண்டுருக்கா. என்னன்னு விஜாரிச்சுட்டு வரேன்” என்று எழுந்துபோய்விட்டு 10 நிமிடத்தில் திரும்ப வந்தார். “அப்பாடா... பத்துக்கு வந்தவாள்ளாம் சாப்ட்டுப் போயாச்சு. அக்கடான்னு சித்தநாழி இப்பிடி உக்காரலாம். பாருங்கோ... இப்பிடித்தான் அஞ்சாறு வருஷம் மின்ன ஆபீஸ்காரா எல்லாரும் ஃபேமிலியோட யாத்ரா சர்வீஸ்ல காசி, கயான்னு போனபோது…. என்ன நடந்ததுங்கறேள்? குருப்ல பாதிக்கு மேல ஹாஃப் செஞ்சுரி போட்டவா. சுகர், பி.பின்னு ஆளுக்கு ரெண்டு வியாதி. எல்லாரும் டாண் டாண்ணு டயத்துக்கு சாப்பாடும் மருந்து சாப்பட வேண்டியவா. சமையக்காரன் விஜயவாடால கறிகா வாங்கப் போனவன் நன்னா ஊத்திண்டு எங்கேயோ விழுந்து கெடக்கான். இங்கயானா டயமாறது. என்னடா பண்றதுன்னு கையப் பெசஞ்சுண்டு நிக்கறோம்... சேகர் வந்தான். சேதியை கேட்டதும் பட்டுன்னு தலைல துண்டைக் கட்டிண்டு இருக்கறத வெச்சு சமையல ஆரம்பிச்சுட்டான். உப்புமாவோ என்னவோ கிண்டி சுடச்சுட பரிமாறின அழகே அழகு! எப்பிடிடான்னு கேட்டதுக்கு எல்லாம் என் மாமா கைப்பக்குவம் எனக்கும் கொஞ்சம் வந்துருக்குன்னான். அத்தனை பேரும் அன்னிக்கு அவனை தலைல தூக்கிவெச்சுக் கொண்டாடினா. அவனானா இதெல்லாம் சாதாரணம்கறா மாதிரி தலைக்குக் கைய வெச்சுண்டு தூங்கிட்டான்” என்று சொல்லி நிறுத்தினார். மூக்கைச் சொறிந்துகொண்டார். சுற்றிக்கொண்டிருந்த கொசுக்களை தோளில் இருந்த துண்டால் விரட்டி விட்டார். “கொஞ்சம் கிட்டக்க வாங்கோ... அவன் ஆத்துக்காரி இங்க எங்கயும் இல்லயே... அது வேற பொல்லாப்பு. அவளுக்கு அவ்வளவா தளி பண்ண வராது. தெனமும் இவந்தான் நளபாகம்னு எனக்குத் தெரியும். ஆனா, ஆபீஸ்ல வந்து மதியானம் சாப்படறச்சே 'சியாமளா கைப்பக்குவமே தனி'ன்னு ஒசத்தியாப் பேசுவான். நாங்களும் எங்கயானா கல்யாணம் காட்சின்னு சியாமளாவப் பாக்கறச்சயெல்லாம் அவ சமையலைப் பத்தி ரெண்டு வார்த்தை பேஷாச் சொல்லி வெப்போம். அவளும் சிரிச்சுண்டே 'போங்க மாமா'ன்னுட்டுப் போயிடுவா. ஏதோ இன்னிக்குக் 'கற்பகா மெஸ்'ல சொன்னதால நல்ல காப்பி. இதே நேத்திக்கு சியாமளா போட்ட காப்பியை நீங்க குடிச்சுருக்கணுமே... புளியங்கொட்டை அரைச்சு போட்டாளோ என்னமோ” என்று மெலிதாகச் சிரித்தார். பாருங்கோ... வீடு கொஞ்சம் அலங்கோலமா தாறுமாறாத்தான் கெடக்கு. இனிமே சேகரும் இல்லாம சியாமளாவுக்கு சிரமந்தான். வருமானமும் நின்னு போச்சு. ப்ரைவேட் கம்பெனி பாருங்கோ. அவனுக்கு பென்ஷன்னு ஒண்ணும் பெருசா வராது. க்ராசுட்டிய பேங்க்ல போட்டா கொஞ்சம் இண்ட்ரஸ்ட் வரும். என்ன பண்ணப் போறாளோ? இங்கயே இருக்கப் போறாளா இல்ல நாக்பூர்ல பெண் வீட்டுக்குப் போவாளா... அதெல்லாம் சரிப்பட்டு வருமா... என்னவோ போங்கோ. ஒரு புருஷன்… அதுவும் சம்பாதிக்கற புருஷன்... கட்டையைச் சாச்சுட்டான்னா அந்த வீடே ஒரு குலுங்கு குலுங்கிடும். என்னால முடிஞ்சதப் பண்ணறேன்னு சொல்லிருக்கேன். அதுவும் சேகர் மாதிரி ஒரு வ்யக்திக்காகத்தான். அவன மாதிரி ஒருத்தன இனி நான் பாப்பேனா தெரியாது” சட்டென நிறுத்தி எங்கோ தூரத்தில் பார்த்தார். “ம்ம்.... ரெண்டு நா மின்ன மாப்ளையோட ஆபீசுக்கு வந்தா. கடேசியா சேகர் ஆபீஸ் வந்தன்னிக்கு - அன்னிக்குத்தானே அந்த பாழாப்போன அட்டாக் வந்தது அவனுக்கு - அவன் கொண்டு வந்திருந்த பேக் எல்லாம் ஆபீஸ்லயே தங்கிடுத்து. அத எடுத்துக் குடுத்தேன். பி.எஃப்., க்ராச்விட்டி எல்லாத்துக்கும் ஃபாரத்துல கையெழுத்து வாங்கி வெச்சுண்டேன். இதெல்லாம் மாப்ள இருக்கச்சயே பண்ணிட்டா பெட்டர் பாருங்கோ. அவனும் தங்கம். இருந்து நல்ல பொறுப்பா எல்லாம் பாத்து பண்ணிண்டு போனான். கெளம்பறதுக்கு முன்னாடி சியாமளா என்னத் தனியாக் கூப்டா. மேனேஜர் இல்லாததால அவர் ரூமுக்குக் கூட்டிண்டு போனேன். ரெண்டு நிமிஷம் அழுது தீத்தா. ரொம்பச் சங்கடமாப் போயிடுத்து. அன்னிக்கு காத்தால ஆபீஸ்க்கு கெளம்பறச்சே அவ தங்கை ஆத்துக்காரனுக்கு ஏதோ சிரமம்; அதுக்கு கொஞ்சம் பணம் வேணும்னு கேட்டிருக்கா. சேகர் பொறுமையா இப்ப கைல இல்லயே; சம்பளம் போட்டதும் வேணா குடுக்கலாம்னு சொல்லியிருக்கான். இவளுக்கு சுருக்குனு கோவம் வந்து நாக்கு கொஞ்சம் நீண்டிருக்கு. மொம்மனாட்டிகளுக்கும் நேரம் காலம் சில சமயம் தெரியாமப் போய்டறது. சேகருக்கும் அன்னிக்கு என்ன ஆச்சோ... ஆபிசுக்கு கெளம்பறச்சே இப்படி சண்ட போடறாளேன்னு நெனச்சானோ என்னவோ.... 'நாஞ்செத்தா இன்ஷூரன்ஸ் கெடைக்கும்...போ'ன்னுட்டு வந்திருக்கான். நாக்குல சனி பாருங்கோ. என்னத்தச் சொல்றது!! ஆபீஸ்ல வந்து எதானா சொன்னாரான்னு கேட்டா. அப்பத்தான் எனக்கும் சட்டுனு உறைச்சுது. அன்னிக்கு தியானம் சாப்பிடறச்சே 'இன்னி வரை தளி பண்ணியாச்சு. நாளைக்கு நான் இல்லைன்னா சியாமளா என்ன பண்ணுவளோ?' அப்பிடின்னான். எதுக்குச் சொன்னான்னு எனக்கும் அப்ப புரியல. ஆனா, அவகிட்ட அத சொல்றதா வேண்டாமான்னு எனக்குத் தெரியல” என்று மறுபடியும் நிறுத்தி கொஞ்சம் தண்னீர் குடித்தார். “அப்பிடி கொஞ்சம் யோசிக்கறாப்பல நின்னுட்டு அப்பறம் சொன்னேன் 'ஆங்... அடுத்த மாசம் 30வது அனிவர்சரி வருது. சியாமளாவுக்கு சர்ப்ரைசா ஒரு பட்டுப் புடைவையும், நல்லதா ஒரு செயினும் வாங்கணும்னு சொன்னான். அதுக்கு மின்ன உன் தங்கை ஆத்துக்காரருக்கு ஏதோ பி.எஃப். லோன் போட்டு குடுக்கணும்னு சொன்னான்' அப்பிடின்னு ஒரு அடி அடிச்சு விட்டேன். அவாளுக்குள்ள ஏதோ மனஸ்தாபங்கள் இருக்கலாம். எதுக்கு வளர்ப்பானேன்னு தோணினதை சொன்னேன். ஓ...ன்னு ஒரு பாட்டம் அழுதுட்டுப் போயிட்டா. எனக்கு ஒண்ணும் தப்பாத் தோணல” என்றார். “ஒண்ணும் தப்பில்ல. இதுல என்ன சார் தப்பு?” என்றார் ரமணியும். “அதாஞ் சொல்றேன். யாருக்கும் பாதகம் இல்லாதவரைக்கும் ஒரு தப்பும் இல்ல” என்றபடி காலி செம்பு தம்ளர்களுடன் உள்ளே போனார். நானும் ரமணியும் பிறகு திரும்பிவிட்டோம். ‘சிம்ப்ஸன்’ நீலகண்டன் இப்போது நெல்லையில். 80 வயதில் இன்னமும் ஓடியாடி ஊருக்கு உழைத்துக் கொண்டிருக்கிறார். (தொடரும்)