
மகாகவி பாரதியார், சுதந்திரம் பெற்ற நவீன இந்தியாவில், விடுதலைப் பெண் கம்பீரமாகக் காட்சியளிக்க வேண்டும் என கனவு கண்டான் . விடுதலைப் பெண்ணின் சின்னமாக, ‘புதுமைப்பெண்’ என்ற விழுமியத்தை முன்மாதிரியாக உருவாக்கி பல பாடல்களை எழுதிக் குவித்தான்.
அண்மையில் தமிழக அரசு “புதுமைப்பெண்” என்ற பெயரில் பெண்களுக்காக ஒரு சிறப்பு திட்டத்தை அறிவித்திருக்கிறது. இத்திட்டத்தின்படி , தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
திறமை இருந்தும் வறுமை காரணமாக மாணவிகள் படிப்பை தொடர முடியாத நிலை இருந்தது. இனி அந்த நிலை அறவே இருக்காது. முக்கியமாக, புதுமைப்பெண் திட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்த திட்டம். கல்வித்துறையில் மிகப்பெரிய புரட்சியை இந்த திட்டம் ஏற்படுத்தும். அந்த அளவுக்கு அதீத முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் இது.
இதன் மூலம் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு, அவர்கள் உயர்கல்வி அல்லது பட்டயப்படிப்பு, தொழிற்படிப்பு படித்து முடிக்கும் வரை மாதம் ரூ.1000/- நேரடியாக மாணவிகளின் வங்கி கணக்கில் அரசால் செலுத்தப்படும்.
இத்திட்டத்திற்கு பாரதியின் வார்த்தைகளில் ‘‘புதுமைப்பெண் திட்டம்’’ என்று பெயர் சூட்டப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமானது.
புதுமைப் பெண் திட்டம் மூலம் தமிழகப் பெண்கள் அனைத்து துறைகளிலும் கால் பதித்து சாதிக்க முடியும். குறிப்பாக, குக்கிராமங்களில் உள்ள மாணவிகள் எளிதாக உயர்கல்விக்கு செல்ல முடியும். இதனால் அனைத்து மாணவிகளும் உயர்கல்வியைப் படிக்க அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. மாணவிகளின் கல்வித்தரம் உயர்ந்தால், சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் அறவே இருக்காது. இத்திட்டம் மூலம் படித்தவர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும். படித்த திறமைசாலிகளான பெண்கள் அதிகமாவார்கள். பெண்கள் அதிகாரம் பெறுவார்கள்.
இன்னும் பல இந்திய மாநிலங்களில் மாணவிகள் பள்ளியிறுதிவரைப் படிப்பதே பெரும் சவாலாக உள்ளது. கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் சிறப்பு வாய்ந்த இந்த புதுமைப் பெண் திட்டத்தை நாடு தழுவிய திட்டமாக ஒன்றிய அரசு செயல்படுத்த முன் வரவேண்டும்.