16 ஆம் நூற்றாண்டின் பெரிய கவிஞர் மற்றும் ஸ்ரீகிருஷ்ணர் மீது பெரும் பக்தி கொண்ட நாராயண பட்டத்திரி எழுதிய ஸ்ரீமன் நாராயணீயத்தின் தசகம் 100-ல் ஆரம்பமாகும் முதல் ஸ்லோகத்தின் இரு வார்த்தைகளான ‘அக்ரே பஷ்யாமி” என்கிற பெயரில் அருமையான ஒரு நாட்டிய நாடகம் உருவெடுத்துள்ளது. இது கலை சம்பந்தமான செயல்களை மேம்படுத்த, நிதி திரட்டும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ‘தேசிக தயா’ சாரிட்டபிள் ரெஜிஸ்ட்டர்டு டிரஸ்டின் தயாரிப்பாகும்.
சம்ஸ்கிருத ஸ்காலர்; சிறந்த சொற்பொழிவாளர், எழுத்தாளர், ஆராய்ச்சியாளர் மற்றும் தன்னடக்கமும் பணிவும் உடைய துஷ்யந்த் ஸ்ரீதர், நல்ல கருத்துகளைக் கொண்ட ‘அக்ரே பஷ்யாமி’ நாட்டிய நாடகத்தை மிகச் சிறப்பாக உருவாக்க, நடன அமைப்பினை கலைமாமணி அனிதா குஹா அழகாக வடிவமைக்க, கவி பாரதியாரின் கொள்ளுப்பேரன் டாக்டர் ராஜ்குமார் பாரதி முழு தயாரிப்புக்கும் இனிமையாக இசையமைக்க, பதிவு மற்றும் மாஸ்டரிங்கை திரு சாயி ஷ்ரவணம் ரீஸெளண்ட் ஸ்டுடீயோவில் அருமையாக செய்து முடிக்க, ‘அக்ரே பஷ்யாமி’ பங்களூருவிலும், சென்னையிலும் அமர்க்களமாக அரங்கேற்றப்பட்டது. மேலும், செகந்திராபாத், மும்பையென பல்வேறு இடங்களுக்குப் பயணிக்க உள்ளது.
இந்திய பாரம்பரிய நடனத்தில் முதன்முறையாக ஸ்ரீமன் நாராயணீயத்தின் கருத்தினை எடுத்துக்கொண்டு ‘அக்ரே பஷ்யாமி’ நாட்டிய நாடகம் தயாரிக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியதாகும்.
ஸ்ரீமன் நாராயணீயம் சுருக்கம்:
இது ‘சர்வரோக நிவாரணீயமெனவும்’ கூறப்படுகிறது. கேரளத்திலுள்ள குருவாயூர் நகரருகே அமைந்துள்ள மேல்பத்தூரில் பிறந்த நாராயண பட்டத்திரி சிறு வயதிலேயே வடமொழி இலக்கியம், இலக்கணம் ஆகியவைகளில் ஒரு மேதையென அறியப்பட்டவர். இவர் இயற்றிய அநேக நூல்களில் ஸ்ரீமன் நாராயணீயம் குறிப்பிடத்தக்கதாகும். பெரும்பான்மையான மக்களால் தினந்தோறும் பக்தியுடன் பாராயணம் செய்யப்படும் வடமொழி சமய நூல்களில் ஒன்றாக இது உள்ளது.
பட்டத்திரியை பக்திப் பாதையில் திசை திருப்புவதற்கு காரணமாக இருந்த குரு பிஷரோடி, பக்கவாத நோயினால் அவதிப்பட, அவருக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக அந்நோயைதான் பெற்றுக்கொண்டு குருவை விடுவித்தார்.
பின்னர் பிரபல மலையாள பண்டிதரான துஞ்சத்த எழுத்தச்சன் உதவியுடன் குருவாயூரப்பன் சன்னிதி வெளியேயுள்ள வலப் பக்கத் திண்ணையிலமர்ந்து, ஒரு நாளுக்கு ஒரு தசகம் (10 ஸ்நோகங்களுக்கு குறையாமல்) என்கிற கணக்கில் நூறு நாட்களில் 1034 ஸ்நோகங்களை இயற்றினார். ஒவ்வொரு சதகம் முடியும் பொழுதும், தான் எடுத்துக்கொண்ட நோயிலிருந்து ஆண்டவன் தன்னைக் காக்க வேண்டுமென்பதற்கு ஏற்ப சில வாக்கியங்களும் இடம் பெற்றிருக்கும். நூறாவது நாள் ஸ்லோகங்களை எழுதி முடிக்க, நோய் முற்றிலும் நீங்கியது. பகவான் காட்சி அளித்தார். ‘நாராயணீயம்’ எழுத பட்டத்திரி எடுத்துக்கொண்ட பொருள் ‘ஸ்ரீமத் பாகவதம்’ ஆகும்.
‘அக்ரே பஷ்யாமி’ (நாட்டிய நாடகம்)
இது குறித்து சமஸ்கிருத ஸ்காலர் துஷ்யந்த் ஸ்ரீதர், கலைமாமணி அனிதா குஹா மற்றும் டாக்டர் ராஜ்குமார் பாரதி ஆகிய மூவரிடமும் பேசுகையில் கிடைத்த அரிய பல விஷயங்கள் பின்வருமாறு:
(அதை அவர்களே பகிர்கிறார்கள். அதற்கு முன்பாக கீழே கொடுக்கப்பட்டிருக்கும் linkஐ Click செய்து பருங்களேன்)
திரு துஷ்யந்த் ஸ்ரீதர்:
“நோய்கள் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம். வித்தியாசமான, வேறுபட்ட நோய்கள் 4 நாட்கள், ஒரு வாரம், ஒரு மாதமென இருக்கும். சிலவை பிறப்பிலயேயும், சிலவை பிற்காலத்திலேயும் வரும். ஆனால் சமீபத்தில், அதாவது 2020 – 2021இல் உலகம் முழுவதும் பரவிய ‘பென்டமிக்’ வியாதி பதற்றமான சூழலை உருவாக்கியது. கொத்து – கொத்தாக மக்கள் மடிந்தனர். நாம இருப்போமா? மாட்டோமா? நம்மை சுத்தி இருக்கறவா உயிரோட இருப்பாளா? மாட்டாளா? என்கிற கவலை, துயரம், மன அழுத்தம் எல்லோருக்குமே ஏற்பட்டது. இவைகள் எல்லாம் நம் கையில் இல்லை என்றாலும் ஒருவித பயம் மக்களிடையே இருந்தது. இது பற்றி யோசித்தேன்.
ஏற்கனவே ராமாயணம், திருப்பதி வெங்கடேச பெருமாள், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், ஸ்ரீராமானுஜர், வேதாந்த தேசிகர் போன்ற பல நாட்டிய நாடகங்களைத் தயாரிக்க ஸ்கிரிப்ட் எழுதியிருக்கிறேன். அது போல இப்பவும், சற்று வித்தியாசமாக தயாரித்து, தெரிந்த மற்றும் தெரியாத விஷயங்களை மக்களுக்கு உணர்த்த எண்ணினேன். அதோடகூட நல்ல ஆரோக்கியத்தைக் கொடுப்பதாக இருக்க வேண்டுமென நினைத்ததில், ஸ்ரீமன் நாராயணீயம் மனதில் தோன்றியது. நாராயன் பட்டத்திரி அனைத்து ஸ்லோகங்களையும் முடிக்கையில் ஆயுள், ஆரோக்கியம், மகிழ்ச்சியை அளிக்க வேண்டுமென முடிப்பார். அருமையாக இருக்கும்.
பென்டமிக் முடிந்துவிட்ட போதிலும், மக்களுக்கு மனதைரியத்தை அளிக்க, உலக ஷேமம், லாபம், ஆயுள், ஆரோக்கியம் ஆகியவைகளுக்காக இந்த அக்ரே பஷ்யாமி’ ஒரு சிறு சமர்ப்பணம். செல்வந்தர்கள், அறிவு ஜீவிகள் போன்றோர் வேறு லெவலில் செய்வார்கள். சாதாரணமா எங்களை மாதிரி இருக்கிறவாளால முடிந்த சின்னக் கைங்கரியம் இது. இந்த நடனத் தயாரிப்பின் பின்னணியில் உள்ள உந்துதல் இதுதான் எனலாம்.
‘அக்ரே பஷ்யாமி’ நாட்டிய நாடகத்தைத் தயாரிக்க சுமார் 1¼ வருடங்கள் ஆயின. கலைமாமணி அனிதா குஹா அவர்கள் டாக்டர் ராஜ்குமார் பாரதியுடன் கலந்தாலோசித்து சிறப்பாக நடனங்களை வடிவமைத்துள்ளார்.
டாக்டர் ராஜ்குமார் பாரதியின் இசையமைப்பு அற்புதம். ஸம்ஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி என 6 மொழிகளில் பாடல்கள். நாராயணீயத்தில் வரும் அவதாரங்கள் பிரமாண்டமாக சித்தரிக்கப் பட்டுள்ளன. சுருக்கமாக கூறப் போனால், இந்தத் தயாரிப்பு, குருவாயூர் வசிப்பிடத்துக்கு ரசிகர்களை கொண்டு செல்வதை நோக்கமாக கொண்டுள்ளது.
ஓம் நமோ பகவதே வாசுதேவாய!
ஓம் நமோ நாராயணாய!
ஓம் நமோ நம:!
கலைமாமணி அனிதா குஹா
30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் எனது ‘அனிதா குஹாஸ் பரதாஞ்சலி’ நாட்டிய அமைப்பின் 28ஆவது தயாரிப்பு ‘அக்ரே பஷ்யாமி’.
இதற்கு முன்பு துஷ்யந்த் ஜீ ‘சாகுந்தலம்’ சினிமா எடுத்த சமயம், அதில் ஒரு சிறு நடனக் காட்சிக்காக கோரியோகிராபி செய்திருக்கிறேன்.
இந்த நாட்டிய நாடகத்தில், நாராயணீயம் எழுத ஆரம்பித்த நாராயண பட்டத்திரிக்கு, ஸ்ரீகிருஷ்ணருடன் ஏற்பட்ட அனுபவங்கள் காட்சிகளாக விரிகின்றன. 30 நடனக் கலைஞர்கள், இதற்காக பயிற்சியெடுத்துள்ளனர். இவர்கள் இதில் பகவானின் பத்து அவதாரங்களில், 5 அவதாரங்களை (கூர்ம, வராக, நரசிம்ஹ, ராம, கிருஷ்ண) நடனம் மூலம் அருமையாக வெளிப்படுத்தியுள்ளனர்.
பரத நாட்டியம், மோகினியாட்டம், கிருஷ்ணாட்டம் களி போன்ற நடனங்களில் இடம் பெறும் உடல் அசைவுகள் மற்றும் கலைஞர்களின் நேர்த்தியான ஆடைகள் காண்பவர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளன.
இதற்கான ground work, ஸ்லோகங்களின் தேர்வு போன்றவைகளை துஷ்யந்த் ஜீயுடன் கலந்து பேசி விவாதித்து முடிவு செய்ய வேண்டி இருந்தது. அடிப்படை கோரியோகிராபியை, ராவா-பகலா வேலை செய்து 20 நாட்களில் முடித்தேன். 3 மாதங்கள் நடனப் பயிற்சியும், கடைசி ஒரு மாதம் தீவிரமான பயிற்சியும் நடைபெற்றது. கூர்மாவதார காட்சியில் கம்போடியன் நடனம் பிரதிபலிக்கும். துஷ்யந்த் ஜீ அவ்வப்போது வழி நடத்துவார்.
டாக்டர் ராஜ்குமார் சார் நாடக நபராக இருப்பதால், எங்களிருவரின் அலை வரிசைகளும் ஒத்துப்போக, பத்தே நாட்களில் இசையை சிறப்பாக அமைத்துக் கொடுத்தார்.
துஷ்யந்த் ஜீ நரசிம்மாவதார ஸ்லோகத்தை அழகாக உரைப்பது அருமையாக இருக்கும்.
வராக அவதார காட்சியில், நட்டுவாங்கத்தை தனியாகவும், சில இடங்களில் ராஜ்குமார் சாருடன் இணைந்தும் கூறியுள்ளேன்.
குட்டி கிருஷ்ணர் மூலவராக நிற்கும் காட்சி; பிரகலாதன் ஹிரண்ய கசிபுவை எதிர்த்துப் பேசுவதை பகவான் நேரிடையாக பட்டதிரிக்கு காட்டும் காட்சி; நாராயணீயம் பிறக்கும் காட்சி; கிருஷ்ணாவதாரத்தின் விஸ்வரூப காட்சியென எண்ணிலடங்கா அற்புதங்கள் பலவற்றை இடையில் கொண்டு வந்திருக்கிறோம். இது ஒரு சவாலான அசாதாரணத் தயாரிப்பு எனலாம்.
டாக்டர் ராஜ்குமார் பாரதி
‘அக்ரே பஷ்யாமி’ தயாரிப்புக்கு முன்பாகவே துஷ்யந்த் சாருக்கு 7 – 8 தயாரிப்புகளுக்காக உதவி செய்துள்ளேன். அவர் கொடுக்கும் விபரங்கள் மிகச் சரியாக இருக்கும். எங்கள் மீது நம்பிக்கை வைத்து ‘Do your Best’ என்பார். அவ்வப்போது வந்து பார்த்து, ஏதேனும் தேவையெனில் வழி நடத்துவார். கடைசி நிமிடம் வரை எடிட்டிங் இருந்தது.
அனிதா மேடம்கூட இணைந்து நான் செய்யும் முதல் தயாரிப்பு ‘அக்ரே பஷ்யாமி”. முதல் session இல் துஷ்யந்த் சாரும், அனிதா மேடமும் கலந்து பேசியபிறகு, நானும், அனிதாவும் ஒரு வாரம் உட்கார்ந்து இது குறித்து விபரமாக உரையாடினோம்.
“இதுதான் Scene – எப்படிப் பண்ணலாம்?” என்று அவங்க கேக்க, நான் விளக்க, அந்த அமர்வுகள் அழகாகச் சென்றன. நடனமாடும் கலைஞர்கள் ஆடிப்பாரத்து, ரெக்கார்ட் செய்துகொள்வார்கள்.
நடனத்துக்கு இசை மிகவும் முக்கியம். நான் முதலில் பாடுவேன். எக்ஸ்டரா டைம் ஆறதா? என்று முதலில் பார்க்கணும். திரைக்கதை, Sound, Spectrum (ஒலி நிறமாலை), குரல்கள் பின்னர் சேர்க்கப்படும். ரெக்கார்டிங் செய்வது சிறந்த வழி. இசை இருந்தால்கூட, பாடறவா அழகா ரசித்துப் பாட வேண்டியது முக்கியம்.
யார் – யார் என்ன செய்ய வேண்டும்? என்ன – என்ன பாடல்கள் பாட வேண்டுமென முடிவெடுத்து, இரு ஆண் பாடகர்களும், இரு பெண் பாடகிகளும் பாட, வயலின் வீணை, புல்லாங்குழல், மிருதங்கம், தபலா ஆகியவை அருமையாக இணைந்து ஒலித்தன.
11 ஆசான்கள் மற்றும் செவ்வியல் கவிஞர்கள் எழுதியவைகளிலிருந்து பிற மொழிகளுக்கான பாடல்கள் தேர்வு செய்யப்பட்டது. 40 ராகங்களின் கலவையில் பாடல்கள். பத்து இசைக் கலைஞர்கள் உழைத்துள்ளனர். ஆடியோ ரிக்கார்டிங் 15 நாட்களுக்குள் முடிவடைந்தது.
திறமைமிகு சாயி ஷ்ரவணம் சூப்பராகி Soundscape வடிவமைப்பை அமைத்துக் கொடுத்தார். இவர் இஞ்ஜினியர் மட்டுமல்ல; இசைக்கலைஞரும்கூட.
‘அக்ரே பஷ்யாமி’ தயாரிப்பு, போகப் போக பிரமாண்டமானது. மக்கள் ரசனைக்கேற்ப, எது – எது முக்கியமோ, அவைகளை வைத்து தயார் செய்தோம்.
Logistic பிரச்னைகளை அனிதா மேடம் நன்றாக கவனித்து சரி செய்தார். அவங்ககூட சேர்ந்து வேலை செய்கையில், ஒரு குடும்பம் மாதிரி இருக்கும். நடனக் கலைஞர்களும் உடன் இருக்க, கல்யாணம் மாதிரி வேளாவேளைக்கு காபி, டீ, சாப்பாடு என கலகலவென்று இருக்கும். இதில் பங்கேற்றது இறையருளே.
பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட ‘அக்ரே பஷ்யாமி’ நாட்டிய நாடகத்தை, கண்களால் தரிசிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
‘ஓம் நமோ நாராய ணாய நம:!’