“நான் நிரபராதி என்றால், குற்றம் புரிந்தது யார்?”  

“நான் நிரபராதி என்றால், குற்றம் புரிந்தது யார்?”  
Published on

ராக்கெட்ரிநம்பி விளைவு சினிமா விமர்சனம்

– லதானந்த்

நாட்டையே உலுக்கியது இஸ்ரோவின் ராக்கெட் விஞ்ஞானியான நம்பிநாராயணன் மீது சுமத்தப்பட்ட தேசத் துரோக வழக்கு. அதிலிருந்து அவர் விடுதலையானதோடு அவருக்கு மிகப் பெரிய நஷ்டஈடு வழங்கப்பட்டதும், அவருக்கு இந்திய அரசின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் வழங்கப்பட்டதும் வரலாறு.

இந்த உண்மைச் சம்பவங்களைக் கோர்த்து உருவாகியிருக்கும் படம் இது. நிரபராதி ஒருவரைப் பொய்வழக்கு என்ன பாடுபடுத்தியிருக்கிறது என்பதைச் சொல்லும் படம். மாதவன் நடிப்பில் இயக்கத்தில் விஞ்ஞானி நம்பி நாராயணன் ஆக மிக அற்புதமாக வாழ்ந்திருக்கிறார். மிக இயக்குனராக மாதவனுக்கு இது முதல் படம்.  நம்பவேமுடியவில்லை. பயோ பிக். அதுவும் நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒருவரை பற்றி படம் எடுப்பது கம்பி மேல் நடக்கும் வித்தை. மிக அசாதாரணமாக அதை செய்து வெற்றியும் பெறுகிறார்.

ஒரு குத்து பாட்டு இல்லாமல்.. டூயட் இல்லாமல்.. காமெடி இல்லாமல்.. ரத்த களரி இல்லாமல..ஒரு நல்ல தரமான படம் கொடுக்க முடியும் என நிருபித்த இயக்குநருக்கு பாராட்டுகள்.

தொலைகாட்சியில் சூரியாவின் நேர்காணல் மூலமாகக் கதை நகர்கிறது.

ஆரம்பத்திலேயே நம்பி நாராயணன் தாக்கப்படுவதையும் அவர் மீதான பொதுமக்களின் ஆவேசத்தையும் காண்பிக்கும்போது, 'அட… எடுத்த எடுப்பிலேயே படம் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டதே' என்று நினைப்பீர்களானால் ஏமாந்துதான் போவீர்கள்.

படத்தில் சொல்லப்படும்  தொழில் நுட்பங்களின் அடிப்படையில் இடைவேளைக்கு முன்பு வரையிலும், 'ராக்கெட்டை இயக்க திரவ ரூப எரிபொருளைப் பயன்படுத்துவது' என்றும் இடைவேளைக்குப் பிறகு 'கிரையோஜெனிக் எஞ்சின்களைப் பயன்படுவது' என்றும் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். இடைவேளைக்குப் பிறகு கொஞ்சமே கொஞ்சம் நம்பி நாராயணன் மீது நடத்தப்படும் விசாரணக் கட்சிகளும், அவருக்கு இழைக்கப்படும் அநீதிகளும், அவரது இழப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

வசனங்கள் அத்தனை கூர்மை. 'ஒரு நாயைக் கொல்லணும்ன்னா அதை வெறிநாய்ன்னு சொன்னாப் போதும், ஊரே அடிச்சுக் கொன்னுடும். ஒருத்தன் பெயரைக் கெடுக்கணும்ன்னா அவனை 'தேசத் துரோகி'ன்னு முத்திரை குத்திட்டாப் போதும். ஒரு நாடே சேர்ந்து அவனைக் கொன்னுடும்!' ..

இந்தப் படத்தில் பேசப்படும்   வழக்கு பல ஆண்டுகள் நடந்திருக்கிறது. அப்போது இவர் மீது அரசுத் தரப்பில் புனையப்பட்ட ஆதாரங்கள் என்ன? மாலத் தீவுப் பெண்களையும் இவரையும் எந்தப் புள்ளி இணைத்ததாகச் சொல்லப்படுகிறது? இவருடன் சேர்த்து இன்னும் சில விஞ்ஞானிகளையும் ஏன் கைது செய்தார்கள்? இப்படிப் பல கேள்விகளுக்கு விடைகள் சொல்லப்படவேயில்லை. பொய் கேஸ் போட்ட காவல் ஆய்வாளரை, 'உரிய' விதத்தில் விசாரித்தால், ஏன் இந்த வழக்கு புனையப்பட்டது என்ற விவரம் வெளிவந்திருக்குமே என்ற சந்தேகமும் எழுகிறது.

இடைவேளைக்கு முன்பு வரைக்கும் மற்றும் இடைவேளைக்குப் பின்னர் கணிசமான நேரம் வரைக்கும், ராக்கெட்டின் தொழில்நுட்பங்களையே மாறி மாறிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஏராளமான டெக்னிகல் சமாசாரங்களைப் பற்றி மிக விரிவாக விஞ்ஞானிகள் விவாதித்துக்கொண்டே இருக்கிறார்கள். அதைக் குறைத்திருக்கலாம். இதனால் படம் நகர்புற ரசிகர்களைத் தாண்டிச் செல்வது கடினம்.

படத்தின் கடைசியில் உண்மையான நம்பிநாராயணன்  திரையில் தோன்றி பேசும்  ஒரு வசனம் : "நான் நிரபராதி என்றால், குற்றம் புரிந்தது யார்?"  அது நம் மனத்திலும் எழும் கேள்வி.

மொத்தத்தில் ராகெட்ரி நம்பி நாராயணன் விளைவு = முற்பாதி புரியாத ராக்கெட் தொழிநுட்பம்; பிற்பாதி விடை தராத வினாக்களின் தொகுப்பு

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com