கூத்தபிரான் கண்டருளும் மாசி அபிஷேகம்!

கூத்தபிரான் கண்டருளும் மாசி அபிஷேகம்!
Published on

கே.சூர்யோதயன்

டல் கலையின் நாயகனாம் ஈசனின் அசைவில்தான் இந்தப் பிரபஞ்சமே இயங்குகிறது. அபிஷேகப் பிரியரான நடராஜப் பெருமானுக்கு வருடந்தோறும் ஆறு முறை திருமஞ்சனம் நடைபெறும். தமது நடனத்தால் ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐவகைத் தொழில்களைப் புரியும் கூத்தபிரானுக்கு தேவர்கள் இந்தத் திருமஞ்சனத்தைச் செய்வதாக ஐதீகம். அவை மார்கழி திருவாதிரை உஷத் காலம், மாசி வளர்பிறை சதுர்த்தசி காலை, சித்திரை திருவோணத்தில் உச்சிக் காலம், ஆனி உத்திரத்தில் சந்தியா காலம், ஆவணி சதுர்த்தசியில் இரவு வேளை, புரட்டாசி சதுர்த்தசியில் அர்த்த ஜாம வேளை ஆகும். அவ்வகையில் பிப்ரவரி 15ம் தேதி அனைத்து சிவாலயங்களிலும் நடராஜப் பெருமானுக்கு மாசி மகா அபிஷேகம் நடைபெற உள்ளது. அதாவது, மாசி மாத பூர்வபட்ச வளர்பிறை சதுர்த்தசி திதி அன்று காலை இந்த மகா அபிஷேகம் நடைபெறும்.

அனைத்து சிவாலயங்களிலும் நடராஜர் சன்னிதி இருந்தாலும், பஞ்ச சபைகளில் நடராஜரை இன்று தரிசிப்பது பெரும் புண்ணியத்தைத் தரும். 'கோயில்' என அழைக்கப்படும் தில்லை சிதம்பரத்தில் அம்பலக்கூத்தன் ஆடல்வல்லானுக்கு இன்று செய்விக்கப்படும் மகா அபிஷேகம் மிகவும் விசேஷம். ஸ்ரீ சிவகாம சுந்தரி அம்பிகை சமேத ஸ்ரீ நடராஜப்பெருமானுக்கு நடைபெறும் மகா அபிஷேகத்துக்கு தீர்த்தம் மட்டுமன்றி, பால், சந்தனம், விபூதி, தேன், பஞ்சாமிர்தம், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர் எனப் பலவித அபிஷேகப் பொருள்களும் வழக்கத்தைவிட அதிக அளவில் இன்று அபிஷேகம் செய்விக்கப்படும். பதினாறு வகை பொருட்களால் சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக அபிஷேகம் நடைபெறும். இந்த அபிஷேகத்தைக் காணக் கண்கோடி வேண்டும், பூலோக கயிலாயமாய் விளங்கும் தில்லையில் நடைபெறும் இந்த அபிஷேகத்தை தரிசித்தாலே நமது பிறவிப் பிணி தீர்ந்து வாழ்வில் இன்பம் பெருகும்.

தில்லை திருத்தலத்தில் மூலவரும் உத்ஸவரும் நடராஜர் என்பது விசேஷம். இன்று நடராஜ பெருமானை ஒரு பீடத்தில் அமர்த்தி லட்சார்ச்சனை நடைபெறும். அங்கு யாகசாலை அமைத்து, பதினொரு கலசங்களில் நீர் வைத்து ருத்ர ஹோமம் செய்வார்கள். ஹோமம் முடிந்ததும் கலச நீரைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள். இதையடுத்து விபூதி அபிஷேகம் செய்யப்படும். அடுத்து, பாலாபிஷேகம் நடைபெறும். அபிஷேக நீரை வெள்ளிக்குடங்களில் எடுத்து அபிஷேகம் செய்வார்கள். மற்ற நாட்களில் நடப்பது போல் சிறிய அளவிலான செம்பால் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. குடம் குடமாக அபிஷேகம் செய்யப்படும் என்பது விசேஷம்.

தேனபிஷேகம் முடிந்ததும் நாட்டுச் சர்க்கரை அபிஷேகம் நடைபெறும். அதன்பிறகு பஞ்சாமிர்த அபிஷேகம் நடைபெறும். இதைத் தொடர்ந்து இளநீர் அபிஷேகம் நடைபெறும். அச்சமயம் இரண்டாயிரம் இளநீர் இதற்காகப் பயன்படுத்தப்படும். இதைத்தொடர்ந்து சந்தன அபிஷேகம், பன்னீர் மற்றும் வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும்.

இந்த அபிஷேகங்களைத் தரிசித்தாலே புண்ணியம் கிடைக்கும். ஒவ்வொரு அபிஷேகத்தைத் தரிசிப்பதற்கும் விசேஷித்த பலன்கள் உண்டு.

விபூதி அபிஷேகம் ஞானம் கிடைக்கும்.
பாலாபிஷேகம் ஆயுள் விருத்தி அடையும்.
தயிர் அபிஷேகம் சந்ததி விருத்தி உண்டாகும்.
தேன் அபிஷேகம் நல்ல குரல் வளம் உண்டாகும்.
சந்தன அபிஷேகம் நல்ல பிறவி கிடைக்கும்.
பஞ்சாமிர்த அபிஷேகம் எதிரிகள் இருக்க மாட்டார்கள்.
நாட்டுச் சர்க்கரை அபிஷேகம் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.
இளநீர் அபிஷேகம் சௌக்கியமான வாழ்வை வழங்கும்.
பன்னீர் அபிஷேகம் வாழ்க்கையில் மணம் உள்ளதாக ஆக்கும்.

இன்று சிவாலயங்களிலும் நடராஜ மூர்த்திக்கு நடைபெறும் அபிஷேகத்தில் பங்கேற்று மனமுருக பெருமானை பிரார்த்தனை செய்து நால்வர் அருளிச்செய்த திருமுறை பதிகங்களைப் பாராயணம் செய்து இறை அருளுக்குப் பாத்திரமாவோம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com