​மகாபெரியவர் கொடுத்த முக்தி!

​மகாபெரியவர் கொடுத்த முக்தி!
Published on

காஞ்சி மகாபெரியவர் திருத்தல யாத்திரை மேற்கொண்டிருந்த காலகட்டம் அது. யாத்திரைக்கு இடையே வழுவத்தூர் என்ற கிராமத்தில் தமது பக்தர் ராமசுவாமி என்பவர் வீட்டில் தங்கியிருந்தார்.

ஒரு நாள் மாலை நேரம் தரிசனம் எல்லாம் முடிந்த பிறகு, ராமசுவாமியை அழைத்தார் மகா பெரியவர். ''பசு கொட்டகையில் இருக்கும் ஒரு பாத்திரத்தில் பாதியளவு தண்ணீர் நிரப்பி, அதில் இரண்டு கைப்பிடி கல் உப்பைப் போட்டு கொண்டு வா!" என்றார்.

மகா பெரியவர் சொன்னபடியே ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி, உப்புப் போட்டு எடுத்து வந்து கொடுத்தார் அந்தத் தொண்டர்.

கொஞ்சம் உயரமான திண்ணையில் உட்கார்ந்து கொண்டு, தமது இரு கால்களையும் அந்த உப்புத் தண்ணீருக்குள் வைத்துக் கொண்டார் மகா பெரியவர்.

அன்று அவர் அப்படிச் செய்தது அனைவருக்கும் புதுமையாக இருக்கவே, பலரும் அங்கே கூடிவிட்டார்கள்.

''இன்றைக்கு ரொம்ப நேரம் ஒரேமாதிரி அசையாம உட்கார்ந்திருந்தேனாஅதுல கால் இறுகிக்கொண்டு வலிக்கிறது. அதுக்குத்தான்!" என யாரும் கேட்காமலே சொன்னார் பெரியவர்.

கொஞ்ச நேரம் கழித்து மகா பெரியவர், அந்தப் பாத்திரத்தில் இருந்து தமது திருவடிகளை எடுத்ததுதான் தாமதம்அதற்காகவே காத்திருந்தது போல எல்லோரும் அவரை நெருங்கி, அந்தத் நீரை தீர்த்தமாக பாவித்து தங்கள் தலையில் தெளித்துக் கொண்டார்கள்.

அப்போது மகா பெரியவர், ''அந்த ஜலத்தை முழுசா தீர்த்துடாதீங்கோஒரு செம்புல கொஞ்சம் நிறைச்சு வையுங்கோ!" எனச் சொல்ல, இப்போது எல்லோர் மனதிலும், 'ஏன்? எதற்கு?' என்ற கேள்வி எழுந்தது. இருந்தாலும் பெரியவா சொன்னபடி, ஒரு செம்பில் அந்த உப்பு நீரை எடுத்து வைத்தார்கள்.

ன்று இரவு நெருங்கும் நேரம். வயதான பாட்டி ஒருவர் மகாபெரியவர் முன் வந்து நின்றார். எதுவும் பேசாமல், அவரையே பார்த்துக் கொண்டிருந்தார். அந்தப் பாட்டியின் கண்களில் இருந்து அருவியாக கண்ணீர் பெருகி வழிந்தது.

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த மகாபெரியவர், ''என்னகாசி, ராமேஸ்வரம் போக வேண்டும் என்று ஆசை. ஆனால், கையில் காசு இல்லையே! என்ற ஏக்கத்தோடு என்னிடம் வந்திருக்கிறாயோ!" என மென்மையாகக் கேட்டார்.

''ஆமாம் பெரியவா!" தழுதழுப்புக்கு இடையே இந்த இரட்டை வார்த்தைகளை மட்டும் உதிர்த்தார் அந்த மூதாட்டி.

எதுவும் சொல்லாமல் உள்புறம் திரும்பி, ''ராமசுவாமி, அந்த செம்புல நிரப்பி வைத்த ஜலத்தை எடுத்துக் கொண்டு வா!" குரல் கொடுத்தார் பெரியவர்.

மறு நிமிடம் செம்பு நீரை எடுத்துக்கொண்டு அவர் வர, ''அதை அப்படியே அந்தப் பாட்டி தலையில் ஊற்று…!"

பெரியவா கட்டளையிட, அதை அப்படியே நிறைவேற்றினார் தொண்டர். அடுத்ததாக, தமது கையில் இருந்த கமண்டல நீரை, காலியான செம்பில் ஊற்றிய பெரியவர், அதையும் அந்தப் பாட்டி தலையில் ஊற்றச் சொன்னார்.

''முதல்ல ராமேஸ்வரம். அடுத்தது காசி. ரெண்டு புண்ணிய தீர்த்தத்திலும் நீராடின பலன் உனக்குக் கிடைச்சாச்சு. கவலைப்படாமல் போ. எல்லாம் நல்லபடியாக நடக்கும்!" எனக் கூறி, கை உயர்த்தி ஆசிர்வதித்தார். மனம் முழுக்க பரிபூரண திருப்தியுடன் புறப்பட்டார் அந்த மூதாட்டி.

துவரை நடந்ததெல்லாம் சாதாரணமானதாகவே தோன்றியது, ஓரிரு நாட்களுக்குப் பிறகு அந்தத் தகவல் வரும் வரை. அந்தச் செய்திதான், மகாபெரியவரின் திருவிளையாடலை உணர்த்தியது அனைவருக்கும்.

மகாபெரியவரை தரிசித்துவிட்டுப்போன அந்த மூதாட்டி, அதற்கு மறுநாளே முக்தி அடைந்திருந்தார். விஷயத்தை மெதுவாக மகாபெரியவரிடம் தெரிவித்தார் அணுக்கத் தொண்டர் ராமசுவாமி.

கொஞ்சமும் பதற்றமில்லாமல் அதைக் கேட்டுக்கொண்ட பெரியவர், ''அதனாலதான், நேத்திக்கே உன்னை அவளுக்குப் புண்ணிய தீர்த்த ஸ்நானம் பண்ணிவைக்கச் சொன்னேன்! கஷ்டமே இல்லாம முக்தி கிடைச்சிருக்கு அவளுக்கு!" என்று சொல்ல, திடுக்கிட்டுப் போனார் அந்த பக்தர்.

தன்னை தரிசிக்க வந்திருக்கும் மூதாட்டிக்கு காசி, ராமேஸ்வர புண்ணியத் தீர்த்தத்தில் நீராடும் ஆசை இருப்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு, உப்பு நீரை (ராமேஸ்வரம் கடல் நீர்) எடுத்துவைக்கச் சொன்னதும், தமது கமண்டல தீர்த்தத்தையும் (சன்யாசிகளின் கமண்டல நீரில் கங்கை வாசம் செய்வதாக ஐதீகம்) அந்த மூதாட்டி மேல் அபிஷேகிக்கச் சொன்னதும் ஆச்சரியம் என்றால், அவளது முக்தியை முன்கூட்டியே தெரிந்துகொண்டு, தாமதிக்காமல் அவளது ஆசையைப் பூர்த்தி செய்து, புண்ணியம் தேடித் தந்தது மகா சுவாமிகளின் எத்தனை பெரிய திருவிளையாடல்

ஆர்.வி.ஆர்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com