வலி இல்லா உயிர் மாய்ப்பு!

வலி இல்லா உயிர் மாய்ப்பு!
Published on
ஜி.எஸ்.எஸ். 

'இறைவன் கொடுத்த உயிரைப் பறிப்பதற்கு மனிதனுக்கு உரிமை கிடையாது'. 

'இனி சிகிச்சை பலனளிக்காது என்று மருத்துவர்களால் கைவிடப்பட்டவர், தொடர்ந்து காலாகாலமாக ஒரு நோயின் கொடுமைகளை சந்தித்துக் கொண்டிருக்கும்போது  தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு எடுத்தால் அதை தடை செய்யக்கூடாது'. 

மேற்படியான கருத்து மோதல்கள் காலாகாலமாக நடந்து வருகின்றன.  என்றாலும், கருணைக் கொலை குறித்த புதிய பார்வைகளும், (பிற) தற்கொலை கோணங்கள் குறித்து  சிந்தனைகளும்  நமது சமுதாயத்தில் தற்போது  வரத்  துவங்கியுள்ளன.  இந்தியாவில் கூட ஒரு தற்கொலை முயற்சி வழக்கில், வாழ்க்கையில் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டு அதன் காரணமாக இந்த முடிவுக்கு வந்தவரை அப்படி செய்யக்கூடாது என்ற எச்சரிக்கையோடு நீதிமன்றம் விடுவித்தது.  இந்திய குற்றவியல் சட்டப்படி தற்கொலை முயற்சிக்கு தண்டனை உண்டு என்றாலும் அது வழங்கப்படவில்லை.

கருணைக் கொலையைப் பொருத்தவரை முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.  'டாக்டர் எனக்கு விஷ ஊசி போட்டுக் கொன்று விடுங்கள்' என்ற வேண்டுதல்களுக்கு இணங்குவது போன்ற கருணைக் கொலையை மிகச் சில நாடுகளே ஏற்றுக் கொள்கின்றன.  அதற்கும் கூட பல விதிமுறைகள் உண்டு.

ஆக்சிஜன் கருவி போன்றவற்றின் உதவியால் மட்டுமே உயிர் வாழ்ந்து கொண்டு படுத்த படுக்கையாக வெகுகாலம் இருக்கும் ஒருவரின் உடலில் பொருத்தப்பட்டுள்ள செயற்கைக் கருவிகளை நீக்குவதன் மூலம் கருணைக் கொலையை நிகழ்த்தலாம் என்று சில நாடுகள் அனுமதிக்கின்றன.  ஆனால், இதற்கு நோயாளியின் சம்மதம் தேவை என்பதுடன் ஒரு மருத்துவர் குழு ஆராய்ந்து இனி அவர் உயிர் பிழைப்பது மற்றும் நோயிலிருந்து தேறி வருவது இயலாத ஒன்று என்று சான்றிதழ் அளிக்க வேண்டும்.  அதன் பின் டாக்டர் குழு அவரது உடலில் பொருத்தப்பட்டிருக்கும் உயிர் காக்கும் கருவிகளை நீக்கலாம்.  இதை 'பாஸிவ் (passive) கருணைக்கொலை' என்கிறார்கள்.

கருணைக் கொலையை மருத்துவர்கள் 'யுதனேஷியா' என்று குறிப்பிடுவார்கள்.  கிரேக்க மொழியில் இதன் பொருள் 'நல்ல இறப்பு'.

சட்டப்படி பல நாடுகளில் கருச்சிதைவு அனுமதிக்கப்படுகிறது.  அப்படியிருக்க கருணைக் கொலையையும் சட்டம் அனுமதிக்கலாம் என்று கூறுபவர்கள் உண்டு.

நெதர்லாந்து, பெல்ஜியம், கொலம்பியா, சுவிட்சர்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளும் கருணைக் கொலையை பெருமளவில் அனுமதிக்கின்றன.  அமெரிக்காவில் சில மாநிலங்களில் மட்டும் கருணைக் கொலையை சட்டபூர்வமாக அனுமதிக்கிறார்கள்.

நீண்ட காலம் படுத்த படுக்கையாக இருக்கும் முதியவர்களுக்கு கட்டாயப்படுத்தி பசும்பாலைக் கொடுத்து மூச்சு திணறல் ஏற்படுத்தி அவர்களை இறக்க வைப்பது என்பது இங்கும்  சில குடும்பங்களில் நடப்பதுதான்.  அதுவும் ஒருவகையில் கருணைக்கொலைதான்.

சரி இப்படி தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுப்பவர்கள் வலியில்லாமல் அதை செய்து கொண்டால் நன்றாக இருக்குமே என்று யோசித்த சுவிட்சர்லாந்து அரசு அப்படிப்பட்ட ஒரு கருவிக்கு அனுமதி அளித்திருக்கிறது.

1942ம் ஆண்டிலேயே தற்கொலை செய்துகொள்ள அந்த நாட்டில்  அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் 'எக்ஸிட் இன்டர்நேஷனல்' என்ற நிறுவனம் வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்புபவர்களுக்கு உதவும் வகையில் ஒரு கருவியை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

தற்கொலை செய்து கொள்ள விரும்புபவர்கள் இந்தக் கருவியை தானே இயக்கிக் கொள்ள முடியும்.  இப்படி ஒரு முடிவை எடுப்பவர் இந்த கருவியை இயக்குவதற்கு முன்னால் சில கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.  அவை பதிவு செய்யப்படும்.  அதன் பிறகு அந்த பிரம்மாண்டமான (மூடப்பட்ட கல்லறை போல காட்சியளிக்கும்) கருவியின் மூடியைத் திறந்து உள்ளே சென்று படுத்துக்கொண்டு ஒரு பொத்தானை அழுத்த வேண்டும்.  உடனே உள்ளே இருக்கும் ஆக்சிஜன் அளவு வெகு வேகமாக குறையும்.  இதயம் நின்றுவிடும்.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு மின்சார நாற்காலியின் மூலம் தண்டனை நிறைவேற்றப்பட்டது கூட இதே அடிப்படையில் தான்.  ஒரு நிமிடத்துக்குள் கதை முடிந்துவிடும்.

அதே போல இந்த  தற்கொலை கருவியும் ஒரு நிமிடத்தை விட குறைவான நேரத்திற்குள் மரணத்தை நிகழ்த்தும்.  இதன் மூலம் வலி இல்லாமல் அமைதியாக இறக்க முடியும் என்று தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.  ஓர் அரசு இதற்கு அனுமதி அளித்திருக்கிறது எனும்போது இந்த அறிவிப்பு நம்பத்தகுந்ததுதான் என்று தோன்றுகிறது.

அதேசமயம் இந்தியாவில் இன்னமும் கூட தற்கொலையோ, கருணைக் கொலையோ சட்டப்படி ஏற்கப்படவில்லை என்பதை மறந்து விட வேண்டாம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com