இதற்காகவா ஒரு கொலை? 

இதற்காகவா ஒரு கொலை? 
Published on
ஜி.எஸ்.எஸ். 
பகுதி – 11 

ப்ரெண்டா ஸ்பென்சர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு பள்ளியில் படித்துக்கொண்டிருந்த மாணவி.  இவள் வசித்த வீட்டுக்கு எதிரே ஒரு ஆரம்ப நிலைப் பள்ளி இருந்தது.  அதன் பெயர் குரோவர் க்ளீவ்லாண்ட் ஆரம்ப நிலைப் பள்ளி.

அப்போது அவளுக்குப் பதினாறு வயது.  பளபளப்பான சிகப்பு சாயத்தைத் தன் தலையில் பூசிக் கொள்வது வழக்கம்.  அதன் காரணமாகவும்  அவளை அந்தப் பகுதியில் இருந்த பலருக்கும் தெரியும்.

அவளது பெற்றோர் கடும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தனர்.  அவள் தன் அப்பா வாலஸ் ஸ்பென்சருடன் தங்கிவிட்டாள்.  மிக ஏழ்மையான சூழலில் அவர்கள் வசித்து வந்தனர்.  தொலைக்காட்சியில் தன்னைப் பற்றி பெரிய அளவில் செய்தி வரும் வகையில் ஏதாவது செய்வேன் என்று ப்ரெண்டா அவ்வப்போது கூறியிருந்ததுண்டாம்.   ஆனால் அது விபரீதமான முறையில் நடந்தேறியது.

அவள் புத்திசாலி.  புகைப்படம் எடுப்பதில் திறமைசாலி.   ஒரு புகைப்படப் போட்டியில் முதல் பரிசு கூட பெற்றிருந்தாள்.  ஆனாலும் அவளுக்குப் பொதுவாக பள்ளியிலும் படிப்பிலும் ஈடுபாடு இருந்ததில்லை.

பாட்ரிக் ஹென்றி உயர்நிலைப் பள்ளியில் அவள் படித்து வந்தாள்.  'அவள் பள்ளியில் அடிக்கடி ஏதோ மயக்க நிலையில் இருப்பது போல இருப்பாள்.  எனவே அவளை விழித்துக்கொண்டு இருக்கிறாயா?  தூங்குகிறாயா?' என்று பலமுறை நான் கேட்டதுண்டு' என்று பின்னர் காவல்துறையினரிடம் அந்தப் பள்ளி ஆசிரியை ஒருவர் குறிப்பிட்டார்.

காவல்துறையினர் கைது செய்து அவளை மருத்துவ சோதனைக்கு உட்படுத்தியபோது அவள் மூளையின் ஒரு பகுதியில் காயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  ஒரு சைக்கிள் விபத்தின் காரணமாக இது ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது.

இதில் காவல்துறை எங்கே வந்தது என்கிறீர்களா?  1979 ஜனவரி 29 அன்று ப்ரெண்டாவின் வீட்டின் எதிர்ப்புறம் இருந்த பள்ளியின் வாசலில் சில குழந்தைகள் காத்துக் கொண்டிருந்தனர்.  பள்ளி முதல்வர் வந்து கதவைத் திறந்தவுடன் உள்ளே செல்வதற்காகதான் அவர்கள் அங்கே நின்று கொண்டிருந்தனர்.

தன் வீட்டுக்கு வெளியே கைத்துப்பாக்கியோடு வந்தாள் பிரண்டா.  சாலையின் மறுபுறம் உள்ள அந்தப் பள்ளியில் நின்று கொண்டிருந்த, தனக்கு மிகவும் பிடித்த நீலவண்ண உடையை அணிந்திருந்த, ஒன்பது வயதுச் சிறுவனைப் பார்த்ததும் அவளுக்கு ஏனோ ஆக்ரோஷம் அதிகமானது.  அவனை சுட்டு  வீழ்த்தினாள்.  வேறொரு சிறுவனும் ஆசிரியை ஒருத்தியும் பதறிப்போய் அவன் அருகே செல்ல, அவர்கள் மீதும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன.  அங்கிருந்த ஒரு சிறுவனை பாதுகாப்பான பகுதிக்கு எடுத்துச் செல்ல முயன்ற பள்ளி பாதுகாப்பு ஊழியரையும் சுட்டாள்.

உடனடியாக காவல்துறைக்குத் தகவல் சென்றது.  இருபத்தெட்டு  வயதான ஒரு போலீஸ் அதிகாரி உடனடியாக அங்கு வந்து சேர்ந்தார்.  குழந்தைகளுக்குப் பாதுகாப்பு கொடுக்க அவர் முயல,  அவர்  கழுத்திலும் ப்ரெண்டாவின் குண்டு பாய்ந்தது.  அவர் படுகாயமடைந்து கீழே விழுந்தார்.

இன்னும் பலரும் கூட  இறந்திருப்பார்கள்.  நல்லவேளையாக, அங்கு உடனடியாக வந்து சேர்ந்த காவல்துறையினர் குப்பை லாரி ஒன்றை அவள் வீட்டுக்கு எதிராக நிறுத்தினார்கள்.  அதற்குப் பிறகும் முப்பது முறை தன் துப்பாக்கியை சுட்டபின் (அந்த குண்டுகள் அந்தக் குப்பை லாரிமீது பாய்ந்தன) தன் வீட்டுக்குள் சென்று கதவை தாளிட்டுக் கொண்டாள்.

பத்திரிகை நிருபர் ஒருவர் அவளைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது ' நான் பலரையும் கொன்றதற்குக் காரணம் உண்டு.  எனக்கு பொதுவாகவே திங்கட்கிழமை பிடிக்காது. இன்று திங்கட்கிழமை.  இன்றைய தினத்தை எப்படியாவது சுவாரசியமாக்க வேண்டும் என எண்ணிதான் நான் இப்படிச் செய்தேன்' என்று கூறினாள்.

அவளை வீட்டை விட்டு வெளியே வரச் செய்ய வேண்டும்.  அதேசமயம் அவள் வேறு யாரையும் சுட்டு விடாமலும் இருக்க வேண்டும்.  காவல் துறை யோசித்தது. இதற்காக வீட்டின் வெளியே நின்று கொண்டு மைக் மூலமாக அவளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.  அவளை யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள் என்று உறுதியளிக்கப்பட்டது.  பிரபல பர்கர் கிங் உணவகத்தில் இருந்து அவளுக்கு உணவு வரவழைத்திருப்பதாகக் கூறியவுடன் அவள் வெளியே வந்தாள்!

அவள் சிறைப்படுத்தப்பட்டாள். ஏப்ரல் 4, 1980 அன்று அவளுக்கு 18 ஆவது வயது நிறைவடைந்தது.  அன்றிலிருந்து 25 வருடங்கள் அவளுக்கு சிறைத் தண்டனை என்று தீர்ப்பளிக்கப்பட்டது.  சிறையில் இருந்தபோது அவளுக்கு வலிப்பு ஏற்பட்டு அதற்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.  மின்னணுப் பொருட்களை ரிப்பேர் செய்யும் திறமை அவளுக்கு இருந்ததால் அது தொடர்பான வேலைகள் அவளுக்கு அளிக்கப்பட்டன.

பின்னர் அவளுக்கு வெளியில் பரோலில் செல்லும் உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது.  நீதிமன்றத்துக்கு வந்தபோது தன்னை தன் தந்தை அடிக்கடி அடிப்பார் என்றும் பாலியல் அத்துமீறல் செய்வார் என்றும் அவள் கூறினாள்.  இதையெல்லாம் அந்த அப்பா மறுத்தார்.  இதுதொடர்பாக எந்த ஆதாரமும் அவளுக்கு ஆதரவாக இல்லை என்பதால் நீதிமன்றம் இதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

மனநிலை சரியில்லாதவர் என்ற அடிப்படையில் ப்ரெண்டாவை  விடுதலை செய்ய வேண்டும் என்று வாதாடினார் அவளது வழக்கறிஞர்.  அதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.

துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்ற பள்ளியில் இறந்தவர்கள் சார்பாக ஒரு நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டது.  அந்தப் பள்ளி 1983ல் மூடப்பட்டது.  இதற்கு முக்கிய காரணம் அதில் தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் தயங்கியது தான்.  பின்னர் வேறொரு பள்ளி நிர்வாகத்துக்கு அந்த கட்டிடத்தை குத்தகைக்கு விட்டார்கள்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com