அழகோ அழகு – 1 – புதிய பகுதி

அழகோ அழகு – 1 – புதிய பகுதி
Published on

சரும நிறமாற்றம் (PIGMENTATION)

அழகுக்கலை நிபுணர் Dr. வசுந்தரா

சரும நிறமாற்றம் (pigmentation) பற்றி நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம். Pigmentation என்பது என்ன? எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வுகள் என்ன? இதைத்தான் நாம் இப்போது பேசப் போகிறோம்.

அழகுக்கலை நிபுணர்      Dr. வசுந்தரா
அழகுக்கலை நிபுணர்      Dr. வசுந்தரா

நம் உடலில் முகம், நெற்றி, கன்னங்கள் மற்றும் மூக்கின் மேல் சிறு சிறு திட்டுக்கள் திடீரென்று தோன்றும். பொதுவாக 40 வயது கடந்தவர்களுக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளினால் இது உருவாகும். ஆனால் தற்போதுள்ள வாழ்க்கை முறையின் காரணமாக சிலருக்கு 40 வயதுக்கு முன்பே இப்பிரச்னை தோன்றி விடுகிறது.

நம் உடலின் முகம், கழுத்து மற்றும் கைகள் போன்ற அதிகம் மறைக்கப்படாத சூரியக் கதிர்கள் நேரடியாக படும் இடங்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றன. அதிக வீரியமுள்ள புற ஊதாக் கதிர்கள் சரும செல்களில் மாற்றத்தை ஏற்படுத்தி விரைவில் முதிர்ச்சி அடையச் செய்து விடுகின்றன.

உண்மையில் நம் சருமத்தில் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கவே இவ்வகை திட்டுக்கள் தோன்றுகின்றன. ஆனால் சருமத்தின் நிறம் மாறி கருமையடைவதும், சில காரணங்களால் இவை முற்றிலும் நீங்காமல் சருமத்தின் மேலேயே தங்கி விடுவதும் சரும அழகைக் குலைக்கின்றன.

Pigmentation ஏற்படுவதற்கான காரணங்கள்:
இளமையில் அதிகம் வெயிலில் அலைய வேண்டிய வேலைகள் செய்வதாலும், திறந்த வெளியில் விளையாடுவதாலும், உடனடி பாதிப்பு இல்லாவிட்டாலும், 15 அல்லது 20 வருடங்கள் கழித்துக் கூட அதன் தாக்கம் ஏற்பட வாய்ப்புண்டு.
கருத்தரித்திருக்கும் பெண்களுக்கு ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகளினால் முகம், கழுத்து கறுத்து விடும். ஆனால் குழந்தை பிறந்து ஒரு வருடத்திற்குள்ளாக அவை தானாக மறைந்து விடும். பெண்களுக்கு மாத விடாய் நீங்கும் காலத்தில், ஹார்மோன் குறைபாட்டினாலும், எதிர்ப்பு சக்தி குறைவாலும் pigmentation பிரச்னை உருவாகலாம்.

கடற்கரை அல்லது மலைபிரதேசங்களில் அதிக நேரம் செலவிட்டாலும் கதிர் வீச்சு தாக்கம் காரணமாக வரலாம்.

வயிற்று உபாதைகளினாலும் அதற்கான மருந்துகள் உட்கொள்வதாலும் இவை உருவாகலாம்.

விட்டமின் குறைபாடுகள் ஒரு காரணம்.

சருமத்தில் ஏதாவது ஒரு இடத்தில் அரிப்பு ஏற்பட்டு சொறிந்து கொண்டே இருந்தாலும் இத்திட்டுக்கள் வரலாம்.

ஒரே பக்கம் படுத்து உறங்குவதாலும் கண் அருகில் கருமை படரும். தலையணை மேல் முகத்தை வைத்து உறங்காமல் தலையை வைத்து உறங்க வேண்டும்.

கருந்திட்டுக்கள் வராமல் தடுக்கவும், ஏற்கனவே இருப்பதைக் குறைக்கவும் அல்லது முற்றிலும் நீக்கவும் சில தீர்வுகளை இப்போது பார்ப்போமா?

விட்டமின் A அடங்கிய சன்ஸ்கிரீன் லோஷன் உபயோகிக்கலாம். வெளியில் கிளம்புவதற்கு 10 அல்லது 15 நிமிடங்கள் முன்பாக போட்டுக் கொள்வது நல்லது. இது சூரியக் கதிர் வீச்சிலிருந்து இரண்டு / மூன்று மணி நேரத்துக்கு பாதுகாப்பு தரும்.
ஆப்பிள் செடார் வினிகர் மற்றும் கற்றாழை மிக உகந்தது. 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை சாறுடன் 1 டீஸ்பூன் வினிகர் சேர்த்து பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி அரை மணி கழித்து குளிர்ந்த நீரால் சுத்தம் செய்ய வேண்டும். வாரத்தில் இரண்டு மூன்று முறை செய்யலாம்.

க்ரீன் டீ – இரண்டு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறியபின் பஞ்சில் நனைத்து பாதிக்கப்பட்ட இடங்களில் தடவலாம். இதை தினமும் செய்யலாம். மோரிலும் இது போல பஞ்சை நனைத்து செய்தால் நல்ல பலன் கிட்டும்.

தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் – வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் முகத்தில் பூசி வர கருந்திட்டுகள் குறையும். பாதாமமை இரவில் ஊற வைத்து மறுநாள் அரைத்து முகத்திமல் பூசலாம்.

தற்போதைய கொரோனா காலத்தில் முகக் கவசம் அணிய வேண்டி இருப்பதால் இக்கருந்திட்டுக்கள் அதிகம் உருவாகின்றன. முகக்கவசத்தை சுத்தமாக வைத்திருப்பதாலும், டிஸ்போசபிள் மாஸ்க் அணிவதாலும் இதனைத் தவிர்க்க முடியும்.

உருளைக்கிழங்கில் உள்ள catecholase என்சைம் (enzyme) கருந்திட்டுக்கள் வருவதைக் தடுக்கும். உருளைக்கிழங்கை பச்சையாக துருவியோ, சாறு எடுத்தோ வாரம் இரண்டு மூன்று முறை பயன்படுத்தலாம்.

காய்ந்து உலர்ந்த ஆரஞ்சு பழத் தோலை பொடி செய்து பாலில் கலக்கி காய்ச்சி கிடைக்கும் கூழ் போன்ற பசையும் மிகுந்த பலன் தரும்.

தலைமுடியை அடிக்கடி கலர் செய்வதாலும் அதன் தாக்கம் உச்சந்தலை வழியாக முகத்தில் இறங்கி கருந்திட்டுக்கள் உருவாக வாய்ப்புண்டு. தரமான, அம்மோனியா கலவாத மூலிகைச் சாயம் பயன்படுத்துவது நல்லது. அதிக நேரம் ஊற விடாமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் தலையை நன்றாக அலசி விட வேண்டும்.

மேலே சொன்னதெல்லாம் சருமத்தின் மேல் உருவான திட்டுக்களை நீக்கவும், மேலும் தோன்றாமல் இருக்கவும் உதவும் தீர்வுகள். முறையான வாழ்க்கை முறை, நல்ல உணவுப் பழக்க வழக்கங்கள் இப்பிரச்னைக்கு தொடர் தீர்வு. பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் அன்றாட உணவில் அவசியம் சேர்க்க வேண்டும். நிறைய தண்ணீர் அருந்துவது நல்லது.

தொகுப்பு : மங்கை ஜெய்குமார்
Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com